தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய கிரியையை அறிதல் | பகுதி 147

மார்ச் 24, 2023

ஆறாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட கிரியைகளின் முழுமையானது வெவ்வேறு சகாப்தங்கள் வந்து போனதால் படிப்படியாக மாறியிருக்கிறது. இந்தக் கிரியையின் மாற்றங்கள் உலகின் ஒட்டுமொத்த சூழ்நிலை மற்றும் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் வளர்ச்சிப் போக்குகளின் அடிப்படையில் அமைந்திருக்கின்றன; நிர்வாகத்திற்கான கிரியை அதற்கேற்ப படிப்படியாக மாறியிருக்கிறது. இவை அனைத்தும் சிருஷ்டிப்பின் தொடக்கத்திலிருந்து திட்டமிடப்படவில்லை. உலகம் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன்பு, அல்லது சிருஷ்டிக்கப்பட்ட உடனேயே, கிரியையின் முதற்கட்டமான நியாயப்பிரமாணத்தையோ; கிரியையின் இரண்டாம் கட்டமான கிருபையையோ; அல்லது மூன்றாம் கட்டமான ஜெயத்தையோ யேகோவா திட்டமிடவில்லை. முதலில் மோவாபின் சந்ததியினரிடமிருந்து தொடங்கி, அதன் மூலம் முழு பிரபஞ்சத்தையும் கைப்பற்றுவதே அவரது கிரியையாக இருக்கிறது. உலகை சிருஷ்டித்தபின், அவர் ஒருபோதும் இந்த வார்த்தைகளைப் பேசவில்லை, மோவாபிற்குப் பிறகும் அவர் ஒருபோதும் பேசவில்லை; உண்மையில், லோத்துக்கு முன்புவரை, அவர் அவற்றை ஒருபோதும் உச்சரிக்கவேயில்லை. தேவனின் கிரியைகள் அனைத்தும் தன்னிச்சையாகச் செய்யப்படுகின்றன. இவ்வாறே அவரது ஆறாயிரம் ஆண்டுகால நிர்வாகத்தின் கிரியைகள் முழுவதும் வளர்ந்தன; உலகைச் சிருஷ்டிப்பதற்கு முன்பு, அத்தகைய திட்டத்தை "மனிதகுலத்தின் வளர்ச்சிக்கான சுருக்க விளக்கப்படம்," என்ற வடிவத்தில் அவர் எழுதியிருக்கவில்லை. தேவனின் கிரியையில் இருப்பதை அவர் நேரடியாக வெளிப்படுத்துகிறார்; ஒரு திட்டத்தை வகுக்க அவர் தனது மூளையைக் கசக்குவதில்லை. நிச்சயமாக, சில தீர்க்கதரிசிகள் ஏராளமான தீர்க்கதரிசனங்களைக் கூறியிருக்கிறார்கள், ஆனால் தேவனின் கிரியை எப்போதுமே துல்லியமான திட்டமிடலில் ஒன்றாகும் என்று சொல்லிவிட முடியாது; அந்த தீர்க்கதரிசனங்கள் அந்த நேரத்தில் தேவனின் கிரியைக்கு ஏற்ப உருவாக்கப்பட்டன. அவர் செய்யும் அனைத்து கிரியைகளும் மிகவும் உண்மையான கிரியைகளே. ஒவ்வொரு யுகத்தின் வளர்ச்சிக்கும் ஏற்ப அதை அவர் செயல்படுத்துகிறார், மேலும் விஷயங்கள் எவ்வாறு மாறுகின்றன என்பதை அது அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அவரைப் பொறுத்தவரை, கிரியை செய்வது என்பது ஒரு நோய்க்கு சிகிச்சையளிக்க மருந்தை வழங்குவதற்கு ஒத்ததாகும்; அவர் தன் கிரியையைச் செய்யும்போது, அவர் அவதானிக்கிறார், அவருடைய அவதானிப்புகளின்படி அவருடைய கிரியையைத் தொடர்கிறார். அவருடைய கிரியையின் ஒவ்வொரு கட்டத்திலும், தேவன் தம்முடைய ஏராளமான ஞானத்தையும் திறனையும் வெளிப்படுத்த வல்லவர்; எந்தவொரு குறிப்பிட்ட யுகத்தின் கிரியைக்கு ஏற்பவும் அவர் தனது ஏராளமான ஞானத்தையும் அதிகாரத்தையும் வெளிப்படுத்துகிறார், மேலும் அந்த யுகத்தில் அவரால் திரும்பக் கொண்டுவரப்பட்ட ஜனங்கள் அனைவரையும் தன் முழு மனநிலையைக் காண அனுமதிக்கிறார். ஒவ்வொரு யுகத்திலும் செய்ய வேண்டிய கிரியைக்கு ஏற்ப, செய்ய வேண்டிய எந்தக் கிரியையையும் செய்து, அவர் ஜனங்களுக்கான தேவைகளை வழங்குகிறார். சாத்தான் எந்த அளவிற்கு அவர்களைச் சீரழித்தான் என்பதன் அடிப்படையில் ஜனங்களுக்குத் தேவையானதை அவர் வழங்குகிறார். இதுபோலவே, யேகோவா ஆரம்பத்தில் ஆதாமையும் ஏவாளையும் படைத்தபோது, பூமியில் தேவனை வெளிப்படுத்த அவர்களுக்கு உதவுவதற்காகவும், சிருஷ்டிப்பின் மத்தியில் அவர்கள் தேவனுக்குச் சாட்சிக் கொடுக்கவும் அவர் அதைச் செய்தார். ஆயினும், சர்ப்பத்தால் சோதிக்கப்பட்டபின் ஏவாள் பாவமிழைத்தாள், ஆதாமும் அவ்வாறே செய்தான்; தோட்டத்தில், அவர்கள் இருவரும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசித்தார்கள். ஆதலால், அவர்கள் மீது செயல்பட யேகோவாவுக்கு கூடுதல் கிரியை இருந்தது. அவர்களின் நிர்வாணத்தைக் கண்ட அவர், அவர்களின் சரீரங்களை மிருகத்தின் தோலால் ஆன ஆடைகளைக் கொண்டு மூடினார். பின்பு அவர் ஆதாமை நோக்கி: "நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும் … நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்." என்றார். அவர் ஸ்திரீயை நோக்கி: "நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான்." என்றார். அப்போதிலிருந்து, நவீனகால மனுஷன் இப்போது பூமியில் ஜீவித்திருப்பதைப் போலவே, அவர்களை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றி, அதற்கு வெளியே ஜீவித்திருக்கும்படி செய்தார். தேவன் மனுஷனை ஆதியிலே சிருஷ்டித்தபோது, மனுஷனை சர்ப்பத்தால் சோதிக்க அனுமதிப்பதும், பின்னர் மனுஷனையும் சர்ப்பத்தையும் சபிப்பதும் அவருடைய திட்டமாக இருக்கவில்லை. அவர் உண்மையில் அத்தகைய திட்டத்தைக் கொண்டிருக்கவில்லை; சம்பவங்கள் உருவான விதம்தான் அவரது சிருஷ்டிப்புகளில் புதிய கிரியைகளைச் செய்ய வைத்தது. யேகோவா பூமியில் ஆதாம் மற்றும் ஏவாள் மத்தியில் இந்தக் கிரியையைச் செய்தபின், "பூமியில் மனுஷனின் அக்கிரமம் பெருகினது என்பதையும், அவனது இருதயத்தின் எண்ணங்களின் ஒவ்வொரு கற்பனையும் தொடர்ந்து தீமையாக மட்டுமே இருந்ததையும் யேகோவா கண்டார். பூமியில் மனுஷனை உண்டாக்கினதற்காக யேகோவா மனம் வருந்தினார், அது அவருடைய இருதயத்திற்கு விசனமாயிருந்தது. … ஆனால் நோவா, கர்த்தரின் பார்வையில் கிருபையைப் பெற்றான்." இது வரை மனிதகுலம் பல ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து வளர்ந்திருக்கிறது. இந்த நேரத்தில் யேகோவாவுக்கு இன்னும் பல புதிய கிரியைகள் இருந்தன, ஏனென்றால் அவர் படைத்த மனிதகுலம் சர்ப்பத்தால் சோதிக்கப்பட்ட பின்னர் மிகவும் பாவம்கொண்டதாக வளர்ந்திருந்தது. இந்த சூழ்நிலைகளின் அடிப்படையில், மனிதகுலம் அனைத்திலும், நோவாவின் குடும்பம் காப்பாற்றப்பட வேண்டும் என்று யேகோவா தேர்ந்தெடுத்தார், அதன் பின்னர் உலகத்தை ஜலப்பிரளயத்தால் அழிக்கும் கிரியையை அவர் மேற்கொண்டார். இவ்வாறே இன்றுவரை மனிதகுலம் தொடர்ந்து வளர்ந்து வந்திருக்கிறது, பெருகிய முறையில் சீரழிவு வளர்ந்து வந்திருக்கிறது, மேலும் மனுஷனின் வளர்ச்சியானது அதன் உச்சத்தை அடையும் நேரம் வரும்போது, அது மனிதகுலத்தின் முடிவாகப் பொருள்கொள்ளப்பட வேண்டும். உலகத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை, அவருடைய கிரியையின் உள்ளார்ந்த உண்மை எப்போதுமே இவ்வாறே இருந்து வந்திருக்கிறது, எப்போதும் இவ்வாறுதான் இருக்கும். இது, ஜனங்கள் தங்கள் வகைக்கு ஏற்ப எவ்வாறு வகைப்படுத்தப்படுவார்கள் என்பது போன்றது; ஒவ்வொரு நபரும் ஆரம்பத்திலேயே ஒரு குறிப்பிட்ட வகையைச் சேர்ந்தவர்கள் என்று முன்னரே தீர்மானிக்கப்படும் நிகழ்வுக்கும் இதற்கும் வெகுதூர இடைவெளி உண்டு; மாறாக, வளர்ச்சிக்கான செயல்முறைக்கு உட்பட்ட பின்னரே அனைவரும் படிப்படியாக வகைப்படுத்தப்படுகிறார்கள். முடிவில், முழுமையான இரட்சிப்பைக் கொண்டுவர முடியாத எவரும் தங்கள் "மூதாதையர்களிடம்" திரும்பிச் செல்வார்கள். உலகம் சிருஷ்டிக்கப்படும் போதே மனிதகுலத்தின் மத்தியில் எவ்வித கிரியையும் தேவனால் ஆயத்தப்படுத்தப்படவில்லை; மாறாக, மனிதகுலத்தின் மத்தியில் படிப்படியாக, மிகவும் யதார்த்தமாக, நடைமுறைரீதியாக தேவன் தனது கிரியையைச் செய்ய அனுமதித்த விஷயங்களின் வளர்ச்சியே இது. உதாரணமாக, யேகோவா தேவன் அந்த ஸ்திரீயைத் தூண்டுவதற்காக சர்ப்பத்தைப் படைக்கவில்லை; அது அவருடைய குறிப்பிட்ட திட்டமாக இருக்கவில்லை, அதை அவர் வேண்டுமென்றே முன்னரே தீர்மானிக்கவும் இல்லை. இது ஓர் எதிர்பாராத நிகழ்வு என்றும் கூறலாம். ஆகவே, இதன் காரணமாகவே யேகோவா ஆதாமையும் ஏவாளையும் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றி, மீண்டும் ஒருபோதும் மனுஷனை உருவாக்க மாட்டேன் என்று ஆணையிட்டார். இருப்பினும், இந்த அஸ்திபாரத்தின் மீது மட்டுமே ஜனங்கள் தேவனின் ஞானத்தைக் கண்டுபிடிக்கிறார்கள். நான் முன்பு கூறியது போலவே: "சாத்தானின் சதிகளை அடிப்படையாகக் கொண்டு நான் என் ஞானத்தைப் பயன்படுத்துகிறேன்." சீர்கெட்ட மனிதகுலம் எப்படியாக வளர்ந்தாலும் அல்லது சர்ப்பம் அவர்களை எப்படித் தூண்டினாலும், யேகோவாவிடம் அவருடைய ஞானம் எப்போதும் இருக்கிறது; அவர் உலகை சிருஷ்டித்ததிலிருந்தே புதிய கிரியைகளில் ஈடுபட்டு வருகிறார், இந்தக் கிரியையின் படிகள் எதுவும் திரும்பச் செய்யப்படுவதில்லை. சாத்தான் தொடர்ச்சியாகச் சதிகளை செயல்படுத்தி வருகிறான், மனிதகுலம் தொடர்ந்து சாத்தானால் சீர்கெட்டுப்போகிறது, மேலும் யேகோவா தேவன் தம்முடைய ஞானமான கிரியையை இடைவிடாமல் செய்துவருகிறார். உலகம் படைக்கப்பட்டதிலிருந்து அவர் ஒருபோதும் தோல்வியடையவும் இல்லை, கிரியை செய்வதையும் நிறுத்தவில்லை. மனுஷர் சாத்தானால் சீர்கெட்டப் பிறகு, அவர்களுடையச் சீர்கேட்டுக்கு ஆதாரமாய் இருக்கும் எதிரியைத் தோற்கடிக்க அவர் அவர்களிடையே தொடர்ந்து கிரியை செய்து வருகிறார். இந்த யுத்தம் ஆரம்பத்தில் இருந்தே உக்கிரமாக இருந்துவருகிறது, இது உலகின் இறுதி வரை தொடரும். இந்தக் கிரியையைச் செய்வதில், யேகோவா தேவன் சாத்தானால் சீர்கெட்ட மனுஷர்களை அவரது பெரிய இரட்சிப்பைப் பெற அனுமதிப்பது மட்டுமல்லாமல், அவருடைய ஞானத்தையும், சர்வ வல்லமையையும், அதிகாரத்தையும் காண அனுமதிக்கிறார். மேலும், இறுதியில், அவர் துன்மார்க்கரைத் தண்டிப்பதும் நல்லவர்களுக்கு வெகுமதி அளிப்பதும் ஆகிய தம்முடைய நீதியுள்ள மனநிலையை பார்க்க அனுமதிப்பார். அவர் இன்றுவரை சாத்தானுடன் போரிட்டு வருகிறார், ஒருபோதும் தோற்கடிக்கப்படவில்லை. ஏனென்றால், அவர் ஒரு ஞானமுள்ள தேவன், மேலும் சாத்தானின் சதிகளை அடிப்படையாகக் கொண்டு அவர் தனது ஞானத்தைப் பயன்படுத்துகிறார். ஆகையால், தேவன் பரலோகத்தில் உள்ள அனைத்தையும் தம்முடைய அதிகாரத்திற்குக் கீழ்ப்படியச் செய்வது மட்டுமல்லாமல், பூமியிலுள்ள அனைத்தையும் அவருடைய பாதப்படிக்குக் கீழே வைத்திருக்கிறார், மேலும், மனிதகுலத்தை ஆக்கிரமித்து துன்புறுத்தும் துன்மார்க்கரை அவர் சிட்சைக்குள்ளாக்குகிறார். அவருடைய—ஞானத்தின் காரணமாகவே இந்தக் கிரியைகளின் முடிவுகள் அனைத்தும் கொண்டு வரப்படுகின்றன. மனிதகுலத்தின் இருப்புக்கு முன்னர் அவர் ஒருபோதும் தனது ஞானத்தை வெளிப்படுத்தியிருக்கவில்லை, ஏனென்றால் அவருக்கு பரலோகத்திலோ, பூமியிலோ, அல்லது முழு பிரபஞ்சத்திலோ எங்கும் எதிரிகள் இல்லை, மேலும் இயற்கையின் இடையே எதையும் ஆக்கிரமிக்கும் அந்தகாரச் சக்திகள் இல்லை. பிரதான தூதன் அவருக்குத் துரோகம் செய்த பிறகு, அவர் பூமியில் மனிதகுலத்தை படைத்தார், மனிதகுலத்தினால்தான் அவர் பிரதான தூதனாகிய சாத்தானுடனான தனது ஆயிரம் ஆண்டுகால நீண்ட யுத்தத்தை முறையாகத் தொடங்கினார், இந்தப் போர் ஒவ்வொரு தொடர்ச்சியான கட்டத்திலும் உக்கிரமடைகிறது. இந்தக் கட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருடைய சர்வவல்லமையும் ஞானமும் இருக்கிறது. அப்போதுதான் பரலோகத்திலும் பூமியிலும் உள்ள சகலமும் தேவனின் ஞானம், சர்வவல்லமை மற்றும் குறிப்பாக தேவனின் மெய்மை ஆகியவற்றைக் கண்டன. அவர் இன்றுவரை தனது கிரியையை இதே யதார்த்தமான முறையில் செய்துவருகிறார்; கூடுதலாக, அவர் தனது கிரியையைச் செயல்படுத்தும்போது, அவர் தனது ஞானத்தையும் சர்வவல்லமையையும் வெளிப்படுத்துகிறார். ஒவ்வொரு கட்ட கிரியையின் ஆழ்ந்த உண்மையைப் பார்க்கவும், தேவனின் சர்வவல்லமையை எவ்வாறு விளக்குவது என்பதைக் காணவும், மேலும், தேவனின் மெய்மையைப் பற்றிய உறுதியான விளக்கத்தைக் காணவும் அவர் உங்களை அனுமதிக்கிறார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "இன்றைய நாள் வரை மனிதகுலம் முழுவதும் எவ்வாறு வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க