தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனை அறிதல் | பகுதி 16

செப்டம்பர் 15, 2022

அவருடைய கிரியையின் போது ஓடிப் போவோரிடமான தேவனுடைய மனநிலை

எல்லா இடங்களிலும் அதுபோன்றவர்கள் இருக்கிறார்கள்: தேவனுடைய வழியைப் பற்றி அவர்கள் உறுதியாக அறிந்த பிறகு, பல்வேறு காரணங்களுக்காக, அவர்கள் விடைபெறாமல் மௌனமாகப் புறப்படுகிறார்கள். வெளியேறி, தங்கள் இருதயங்கள் விரும்புவதனைத்தையும் செய்கிறார்கள். தற்போது, இந்த ஜனங்கள் விட்டுச் செல்லும் காரணங்களைப் பற்றி நாம் பேச மாட்டோம். இத்தகைய மனிதனிடம் தேவனுடைய மனநிலை என்ன என்பதை முதலில் பார்ப்போம். அது மிகவும் தெளிவாக உள்ளது! தேவனுடைய பார்வையில், இந்த ஜனங்கள் விலகிச் செல்லும் தருணத்தில், அவர்களுடைய விசுவாசத்தின் காலம் முடிந்துவிட்டது. அதை முடித்தது தனிப்பட்ட மனிதன் அல்ல, தேவனே அதை முடித்தார். இந்த மனிதன் தேவனை விட்டு வெளியேறினான் என்பதன் அர்த்தமானது அவர்கள் ஏற்கனவே தேவனை நிராகரித்தார்கள், அவர்கள் இனி அவரை விரும்பவில்லை மற்றும் அவர்கள் இனி தேவனுடைய இரட்சிப்பை ஏற்க மாட்டார்கள் என்பதாகும். அது போன்றவர்கள் தேவனை விரும்பவில்லை என்பதால், அவர் இன்னும் அவர்களை விரும்புகிறாரா? மேலும், அத்தகைய மனிதர்கள் இத்தகைய மனநிலையையும், இந்தப் பார்வையையும் கொண்டிருக்கும்போது, தேவனை விட்டு வெளியேற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும்போது, அவர்கள் ஏற்கனவே தேவனுடைய மனநிலையை மோசமாக்கியுள்ளனர். அவர்கள் கோபத்தின் உச்சத்தில் தேவனைச் சபித்திருக்க மாட்டார்கள் என்ற போதிலும், அவர்கள் எந்தவிதமான அசுத்தமான அல்லது அதிகப்படியான நடத்தைகளில் ஈடுபடவில்லை என்ற போதிலும், இந்த ஜனங்கள், "என் வெளியின் மகிழ்ச்சி முடிவடையும் நாள் வரும்போது அல்லது எதற்காயினும் இன்னும் எனக்கு தேவன் தேவைப்படும்போது, நான் திரும்பி வருவேன். அல்லது, தேவன் என்னை அழைத்தால், நான் திரும்பி வருவேன்," என்று நினைக்கிறார்கள். அல்லது அவர்கள், "நான் வெளியில் காயப்படும்போது, அல்லது வெளி உலகம் மிகவும் இருட்டாகவும், மிகவும் பொல்லாததாகவும் இருப்பதைக் காணும்போது, நான் இனி அந்த ஓட்டத்துடன் செல்ல விரும்பாமல், நான் மீண்டும் தேவனிடம் வருவேன்," என்று சொல்கிறார்கள். அவர்கள் எப்போது திரும்பி வருவார்கள் என்பதை இந்த ஜனங்கள் தங்கள் மனதில் கணக்கிட்டிருந்தாலும், அவர்கள் திரும்புவதற்கான கதவைத் திறந்து விட முயற்சித்திருந்தாலும், அவர்கள் எதை நம்பினாலும் அல்லது எப்படித் திட்டமிட்டாலும், இவை அனைத்தும் விருப்பத்தின் அடிப்படையிலான சிந்தனை என்பதை அவர்கள் உணரவில்லை. அவர்கள் விட்டுச்செல்லும் ஆசை தேவனை எப்படி உணர வைக்கிறது என்பது குறித்துத் தெளிவாகத் தெரியாமல் இருப்பது அவர்களுடைய மிகப்பெரிய தவறாகும். அவர்கள் தேவனை விட்டு வெளியேற முடிவு செய்த தருணத்திலிருந்தே, அவர் அவர்களை முற்றிலுமாக கைவிடுகிறார். அதற்குள், அத்தகைய மனிதருடைய முடிவை அவர் ஏற்கெனவே தனது இருதயத்தில் தீர்மானித்துள்ளார். அது என்ன முடிவு? அதுதான் இந்த மனிதன் எலிகளில் ஒருவனாக இருந்து அவற்றுடன் சேர்ந்து அழிந்துவிடுவான் என்பதாகும். இவ்வாறு, ஜனங்கள் பெரும்பாலும் இத்தகைய சூழ்நிலையைப் பார்க்கிறார்கள்: ஒருவர் தேவனைக் கைவிடுகிறார், ஆனாலும் அவர் ஒரு சிட்சையையும் பெறுவதில்லை. தேவன் தனது சொந்த கொள்கைகளின்படி செயல்படுகிறார். சில விஷயங்களைக் காணலாம், மற்றவை தேவனுடைய இருதயத்தில் மட்டுமே நிறைவேற்றப்படுகின்றன. எனவே, முடிவுகளை ஜனங்கள் பார்க்க முடியாது. மனிதர்களுக்குத் தெரியும் பகுதி என்பது விஷயங்களின் உண்மையான பக்கமல்ல, ஆனால் அந்த மறுபக்கம்—நீ காணாத பக்கம்—உண்மையில் தேவனுடைய உண்மையான இருதயப்பூர்வமான எண்ணங்களையும் முடிவுகளையும் கொண்டுள்ளது.

தேவனுடைய கிரியையின் போது ஓடிப்போகிறவர்கள் மெய்யான வழியைக் கைவிடுகிறவர்கள் ஆவர்

அவருடைய கிரியையின்போது ஓடிப்போய்விட்ட ஜனங்களுக்கு தேவன் எப்படி இத்தகையை கடுமையான சிட்சையை வழங்க முடியும்? அவர் ஏன் அவர்கள் மீது இவ்வளவு கோபப்படுகிறார்? முதலாவதாக, தேவனுடைய மனநிலை கம்பீரமும் கோபமுமானது என்பதை நாம் அறிவோம். அவர் யாராலும் வெட்டப்படும் ஆடு அல்ல. ஜனங்களால் அவர்கள் விருப்பம் போலக் கட்டுப்படுத்தப்படும் ஒரு கைப்பாவையுமல்ல. அவர் முழுவதும் ஆதிக்கம் செலுத்தப்பட வேண்டிய காற்று அல்லர். தேவன் இருக்கிறார் என்று நீ உண்மையிலேயே நம்பினால், நீ தேவனுக்குப் பயந்த இருதயத்தைக் கொண்டிருக்க வேண்டும். அவருடைய சாராம்சம் கோபப்பட வேண்டிய ஒன்றல்ல என்பதை நீ அறிந்துக்கொள்ள வேண்டும். இந்தக் கோபம் ஒரு சொல்லால் அல்லது ஒருவேளை ஒரு சிந்தனை அல்லது ஒருவித மோசமான நடத்தை அல்லது ஒருவேளை லேசான நடத்தை ஆகியவற்றால் ஏற்படலாம்—மனிதர்களின் கண்களிலும் நெறிமுறைகளிலும் கடந்து செல்லக்கூடிய நடத்தையாலும் அல்லது, ஒருவேளை அது ஓர் உபதேசத்தால் அல்லது ஒரு கோட்பாட்டால் அது தூண்டப்படலாம். இருப்பினும், நீ தேவனைக் கோபப்படுத்தியவுடன், நீ உனது வாய்ப்பினை இழக்கிறாய். உன் இறுதி நாட்கள் வந்துவிடுகின்றன. அது ஒரு பயங்கரமான விஷயமாகும்! தேவனைப் புண்படுத்தக்கூடாது என்பதை நீ புரிந்துக்கொள்ளவில்லை என்றால், ஒருவேளை நீ அவருக்குப் பயப்படாமல் இருக்கிறாய், ஒருவேளை நீ அவரை வழக்கத்தின்படி புண்படுத்துகிறாய் என்பதாகும். தேவனுக்கு எப்படி பயப்பட வேண்டும் என்று உனக்குத் தெரியாவிட்டால், நீ தேவனுக்கு அஞ்ச முடியாது. தேவனுடைய வழியில் நடப்பதற்கான பாதையில் உன்னை எவ்வாறு ஈடுபடுத்துவது என்று அதாவது தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்ப்பது என்று உனக்குத் தெரியாமல் போகும். நீ அதை அறிந்தவுடன், தேவனைப் புண்படுத்தக்கூடாது என்பதை அறிந்தவுடன், தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்ப்பது என்றால் என்ன என்பதை நீ அறிவாய்.

தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்ப்பதற்கான வழியில் நடப்பது என்பதானது, உனக்கு எவ்வளவு சத்தியம் தெரியும், எத்தனைச் சோதனைகளை அனுபவித்திருக்கிறாய் அல்லது எவ்வளவு ஒழுக்கமாக இருந்தாய் என்பவற்றைக் குறிக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக, அது உன் இருதயத்தில் தேவனிடம் நீ வைத்திருக்கும் மனநிலையைப் பொறுத்ததாகும். நீ எந்தச் சாராம்சத்தை வெளிப்படுத்துகிறாய் என்பதைப் பொறுத்ததாகும். ஜனங்களுடைய சாராம்சங்களும் அவர்களின் மனம் சார்ந்த மனநிலைகளும் மிகவும் முக்கியமானவையாகும், மிகவும் அவசியமானவையாகும். தேவனைத் துறந்து விட்டுவிட்டவர்களைப் பொறுத்தவரையில், அவரைப் பற்றிய அவமதிப்பு மனநிலையும், சத்தியத்தை இழிவுபடுத்தும் இருதயங்களும் ஏற்கனவே அவருடைய மனநிலையை மோசமாக்கியுள்ளன. அவரைப் பொறுத்தவரையில், அவர்கள் ஒருபோதும் மன்னிக்கப்பட மாட்டார்கள். தேவனுடைய இருப்பைப் பற்றி அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அவர் ஏற்கனவே வந்துவிட்டார் என்ற செய்தி அவர்களுக்குத் தெரியவந்துள்ளது மற்றும் தேவனுடைய புதிய கிரியையை கூட அனுபவித்திருக்கிறார்கள். அவர்கள் வெளியேறுவது ஏமாற்றப்பட்ட அல்லது குழப்பமான சூழலால் அல்ல. அவர்களுக்கு வெளியேற வேண்டிய கட்டாயமும் இல்லை. மாறாக, அவர்கள் தேவனை விட்டு வெளியேற வேண்டுமென்று உணர்வுப்பூர்வமாகவும், தெளிவான மனதுடனும் தேர்ந்தெடுத்தார்கள். அவர்கள் வெளியேறுவது அவர்களுடைய வழியை இழக்கும் விஷயமல்ல. அவர்கள் தூக்கி எறியப்படவில்லை. ஆகையால், தேவனுடைய பார்வையில், அவர்கள் மந்தையிலிருந்து விலகிச் சென்ற ஆட்டுக்குட்டிகள் அல்ல. வழியை இழந்த கெட்ட குமாரர்கள் அல்ல. அவர்கள் சிட்சையின்றி புறப்பட்டனர்—அத்தகைய நிலை, அத்தகைய சூழல், தேவனுடைய மனநிலையை மோசமாக்குகிறது மற்றும் இந்த மோசத்திலிருந்தே அவர் அவர்களுக்கு நம்பிக்கையற்ற முடிவுகளைத் தருகிறார். இத்தகைய முடிவு பயமுறுத்துவதல்லவா? எனவே, ஜனங்கள் தேவனை அறியாவிட்டால், அவர்கள் அவரைப் புண்படுத்தலாம். இது சாதாரண விஷயமல்ல! ஜனங்கள் தேவனுடைய மனநிலையைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாவிட்டால், அவர்கள் திரும்பி வருவதை அவர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று நம்பினால், அவர்கள் அவருடைய இழந்த ஆட்டுக்குட்டிகளில் சிலராக இருப்பதால், அவர்கள் மனதை மாற்றிக்கொள்ள அவர் இன்னும் காத்திருக்கிறார் என்றால், அவர்கள் தண்டனையின் நாட்கள் வெகு தொலைவில் இல்லை. தேவன் அவர்களை வெறுமனே ஏற்க மறுக்க மாட்டார்—அது, அவருடைய மனநிலையை மோசமாக்கும் இரண்டாவது முறை என்பதால், இந்த விஷயம் இன்னும் பயங்கரமானதாகும்! இந்த மனிதர்களின் பொருத்தமற்ற மனநிலைகள் ஏற்கனவே தேவனுடைய நிர்வாக ஆணைகளை மீறியுள்ளன. அவர் இன்னும் அவற்றை ஏற்றுக்கொள்வாரா? தேவனுடைய இருதயத்தில், இந்த விஷயத்தைப் பற்றிய அவருடைய கொள்கைகள் என்னவென்றால், மெய்யான வழி குறித்து யாரோ ஒருவர் உறுதியாகிவிட்டார்கள், ஆனாலும் இன்னும் உணர்வுப்பூர்வமாகவும் தெளிவான மனதுடனும் தேவனை நிராகரித்து தேவனிடமிருந்து விலகிச் செல்ல முடியும் என்றால், பின்னர் தேவன் அத்தகைய மனிதனுடைய இரட்சிப்பின் பாதையைத் தடுப்பார். இந்த மனிதனுக்கு, அதன் பின் ராஜ்யத்திற்குள்ளாக செல்வதற்கான ஒலிமுகவாசல் மூடப்படும். இந்த மனிதன் மீண்டும் ஒரு முறை தட்டும்போது, தேவன் கதவைத் திறக்க மாட்டார். இந்த மனிதன் என்றென்றுமாக வெளியேற்றப்படுவான். ஒருவேளை உங்களில் சிலர் மோசேயின் கதையை வேதாகமத்தில் படித்திருக்கலாம். மோசே தேவனால் அபிஷேகம் செய்யப்பட்ட பிறகு, 250 தலைவர்கள் மோசேயின் செயல்களாலும், வேறு பல காரணங்களாலும் கீழ்ப்படியவில்லை. அவர்கள் யாருக்குச் சமர்ப்பிக்க மறுத்தார்கள்? மோசே என்பவருக்கு அல்ல. தேவனுடைய ஏற்பாடுகளுக்கு அடிபணிய அவர்கள் மறுத்துவிட்டார்கள். இந்தப் பிரச்சனையில் தேவனுடைய கிரியைக்கு அவர்கள் சமர்ப்பிக்க மறுத்துவிட்டனர். "சபையாரும் அவர்களில் ஒவ்வொருவரும் பரிசுத்தமாகவும், யேகோவா அவர்களுக்கு நடுவே இருப்பதையும் கண்டு நீங்கள் உங்களையே அதிகம் மெச்சிக்கொள்கிறீர்கள்…." என்பதை அவர்கள் சொன்னார்கள். மனிதனின் பார்வையில் இந்த வார்த்தைகளும் வரிகளும் மிகவும் தீவிரமானவையா? அவை தீவிரமாக இல்லை! குறைந்த பட்சம், இந்த வார்த்தைகளின் நேரடி பொருள் தீவிரமானது அல்ல. ஒரு சட்டபூர்வமான அர்த்தத்தில், அவை எந்தவொரு சட்டத்தையும் மீறவில்லை. ஏனென்றால் அதனை மேலோட்டமாக பார்க்கையில், அது விரோதமான மொழி அல்லது வார்த்தை அல்ல. அதில் எந்தவொரு அவதூறான அர்த்தங்களும் இல்லை. இவை பொதுவான வாக்கியங்கள், அதற்கு மேல் எதுவும் இல்லை. அப்படியானால், இந்த வார்த்தைகள் ஏன் தேவனிடமிருந்து இத்தகைய கோபத்தைத் தூண்டியது? ஏனென்றால், அவை ஜனங்களிடம் பேசப்படவில்லை. ஆனால் தேவனிடம் பேசப்பட்டன. அவர்கள் வெளிப்படுத்திய அணுகுமுறையும் மனநிலையும் துல்லியமாக தேவனுடைய மனநிலையை மோசமாக்குகிறது மற்றும் புண்படுத்தக்கூடாத தேவனுடைய மனநிலையை அவை புண்படுத்துகிறது. அந்த தலைவர்களின் முடிவுகள் இறுதியில் என்ன என்பதை நாம் அனைவரும் அறிவோம். தேவனைக் கைவிட்ட ஜனங்களைப் பற்றிய அவர்களுடைய பார்வை என்னவாக இருக்கிறது? அவர்களுடைய மனநிலை என்னவாக இருக்கிறது? தேவன் அவர்களிடம் இப்படி நடந்துக்கொள்ள அவர்களுடைய கண்ணோட்டமும் மனநிலையும் ஏன் காரணமாகின்றன? காரணம், அவர் தேவன் என்று அவர்கள் தெளிவாக அறிந்திருந்தாலும், அவர்கள் இன்னும் அவருக்குத் துரோகம் செய்ய தேர்வு செய்கிறார்கள். அதனால்தான் அவர்கள் இரட்சிப்பின் வாய்ப்புகளை முற்றிலுமாக பறிக்கிறார்கள். வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளபடி, "சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு, நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல்" (எபி. 10:26). இந்த விஷயத்தில் உங்களுக்கு இப்போது தெளிவான புரிதல் இருக்கிறதா?

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய மனநிலையையும் அவரது கிரியை அடையும் முடிவுகளையும் எவ்வாறு அறிந்து கொள்வது” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க