தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனிதகுலத்தின் சீர்கேட்டினை அம்பலப்படுத்துதல் | பகுதி 302

மே 18, 2023

மனிதனின் சீர்கெட்ட மனநிலையின் வெளிப்பாடானது அவனுடைய மந்தமான மனசாட்சி, அவனுடைய தீங்கிழைக்கும் சுபாவம் மற்றும் அவனுடைய ஆரோக்கியமற்ற உணர்வு ஆகியவற்றைத் தவிர வேறொன்றிலும் தனது ஆதாரத்தைக் கொண்டிருக்கவில்லை. மனிதனுடைய மனசாட்சியும் உணர்வும் மீண்டும் இயல்பானதாக மாற முடியுமானால், அவன் தேவனுக்கு முன்பாகப் பயனுள்ள மனிதனாக மாற முடியும். ஏனென்றால் மனிதனின் மனசாட்சி எப்பொழுதும் உணர்ச்சியற்றதாக இருப்பதாலும், ஒருபோதும் நன்றாக இல்லாத மனிதனுடைய உணர்வு இன்னும் மந்தமாகி விட்டதாலும், மனிதன் தேவனிடத்தில் மேலும் மேலும் கலகம் செய்கிறவனாக இருப்பதாலுமேயன்றி வேறில்லை. அவன் இயேசுவையே சிலுவையில் அறைந்து, தன் வீட்டிற்குள் கடைசிக் கால தேவனுடைய மனுஷ அவதரிப்பை மறுத்து, தேவனுடைய மாம்சத்தை நிந்தித்து, அதைக் கீழ்த்தரமாய்ப் பார்க்கிறான். மனிதனுக்குச் சிறிதளவேனும் மனிதத்தன்மை இருந்திருந்தால், அவன் மனிதனாக அவதரித்த தேவனுடைய மாம்சத்தைக் கையாளும் முறையில் இவ்வளவு கொடூரமாக இருந்திருக்க மாட்டான். அவனுக்குச் சிறிதளவேனும் உணர்வு இருந்திருந்தால், அவன் மனிதனாக அவதரித்த தேவனுடைய மாம்சத்தைக் கையாளும் முறையில் இவ்வளவு இரக்கமற்றவனாக இருந்திருக்க மாட்டான். அவனுக்குச் சிறிதளவேனும் மனசாட்சி இருந்திருந்தால், அவன் தேவனின் மனுஷ அவதரிப்புக்கு இவ்வகையில் "நன்றி செலுத்தியிருந்திருக்க" மாட்டான். தேவன் மாம்சமாக வந்த இந்தக் காலக்கட்டத்தில் மனிதன் வாழ்கிறான். ஆயினும் இப்படிப்பட்ட நல்ல வாய்ப்பைத் தந்ததற்காக தேவனுக்கு நன்றி செலுத்த முடியாமல் இருக்கிறான். மாறாக அவன் தேவனுடைய வருகையைச் சபித்து அல்லது தேவனுடைய மனுஷ அவதரிப்பின் உண்மையை முற்றிலும் புறக்கணித்து, வெளிப்படையாய் அதற்கு எதிராகவும், அதைக்குறித்து சோர்வடைந்தும் போகிறான். தேவனுடைய வருகையை மனிதன் எப்படிக் கையாள்கிறான் என்பதைப் பொருட்படுத்தாமல், சுருங்கச் சொன்னால், மனிதன் தேவனிடத்தில் கண்மூடித்தனமாக விண்ணப்பங்களை ஏறெடுத்து, அவரைச் சிறிதளவாகிலும் வரவேற்கவில்லை என்றாலும், தேவன் எப்போதும் அவருடைய கிரியையைப் பொறுமையாக நடத்திக் கொண்டுவந்திருக்கிறார். மனிதனின் மனநிலை மிகக் கொடூரமானதாக மாறிவிட்டது, அவனுடைய உணர்வு மிகவும் மந்தமாகி விட்டது, அவன் மனசாட்சி தீயவனால் முழுவதுமாக நசுக்கப்பட்டு, நீண்ட காலத்திற்கு முன்பாகவே மனிதனுடைய உண்மையான மனசாட்சியாக இருப்பதை நிறுத்திக்கொண்டுள்ளது. மனிதகுலத்திற்கு இவ்வளவு அதிக ஜீவனையும் கிருபையையும் ஈந்ததற்காக மனித உருவான தேவனுக்கு மனிதன் நன்றி கெட்டவனாக இருப்பது மட்டுமல்ல, அவனுக்கு சத்தியத்தைத் தந்ததற்காக தேவனிடம் மிகவும் மனங்கசந்தும் கொள்கிறான்; மனிதனுக்கு சத்தியத்தின் மீது சிறிதளவும் விருப்பம் இல்லாததால்தான் அவன் தேவன் மீது மனக்கசப்படைகிறான். மனிதனாக அவதரித்த தேவனுக்காக மனிதனால் தன் ஜீவனைக் கொடுக்க முடியவில்லை என்பது மட்டுமல்லாமல், அவன் அவரிடமிருந்து உதவிகளைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்கிறான். மனிதன் தேவனுக்காகக் கொடுத்ததை விட டஜன் கணக்கு அதிகமான வட்டியைக் கோருகிறான். அத்தகைய மனசாட்சியையும் உணர்வையும் உடைய ஜனங்கள் இது ஒரு பெரிய விஷயமல்ல என்று நினைக்கின்றனர். அவர்கள் தேவனுக்காகத் தங்களையே அதிகம் செலவு செய்திருக்கிறார்கள் என்றும், தேவன் தங்களுக்கு மிகக்குறைவாகவே கொடுத்திருக்கிறார் என்றும் இன்னும் நம்புகின்றனர். ஒரு கிண்ணம் தண்ணீரை எனக்குக் கொடுத்து விட்டு, என்னிடத்தில் தங்கள் கரங்களை நீட்டி, இரண்டு கிண்ணம் பாலுக்கான பணத்தை அவர்களுக்கு நான் செலுத்தும்படி கோருகிறார்கள் அல்லது எனக்கு ஒரு இரவுக்கு ஒரு அறையைக் கொடுத்து விட்டு, பல இரவுகளுக்கான வாடகையை நான் செலுத்தும்படி கோருகிறார்கள். இத்தகைய மனிதத்தன்மையும் மனசாட்சியும் கொண்ட நீங்கள் எப்படி இன்னும் ஜீவனை அடைய விரும்புகிறீர்கள்? எத்தனை வெறுக்கத்தக்க பாவிகள் நீங்கள்! மனிதனிலிருந்த இவ்வகை மனிதத்தன்மையும், அவனில் இருந்த இவ்வகை மனசாட்சியும் மனிதனாக அவதரித்த தேவனை பூமியில் தங்க இடமில்லாமல் சுற்றிலும் அலைந்து திரிய வைத்த காரணங்களாகும். மனசாட்சியையும், மனிதத்தன்மையையும் உண்மையாகக் கொண்டிருக்கிறவர்கள் மனிதனாக அவதரித்த தேவனை ஆராதிக்கவும், அவருக்கு முழுமனதோடு ஊழியம் செய்யவும் வேண்டும். அவர் எவ்வளவு கிரியைகளைச் செய்தார் என்பதற்காக அல்லாமல், அவர் எந்த கிரியையுமே செய்யாவிட்டாலும் கூட அப்படிச் செய்ய வேண்டும். இதுதான் நல்ல உணர்வுள்ளவர்களால் செய்யப்பட வேண்டும், இது மனிதனின் கடமையாகும். பெரும்பாலான ஜனங்கள் தேவனுக்குச் செய்கிற ஊழியத்தில் நிபந்தனைகளைப் பற்றிக் கூட பேசுகிறார்கள். அவர் தேவனா அல்லது மனிதனா என்பதைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. அவர்கள் அவர்களுடைய சொந்த நிபந்தனைகளைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். அவர்களுடைய சொந்த விருப்பங்களை நிறைவேற்றவே நாடுகிறார்கள். நீங்கள் எனக்காக உணவு சமைத்தால், சேவைக் கட்டணத்தைக் கோருகிறீர்கள், நீங்கள் எனக்காக ஓடினால், ஓடும் கட்டணத்தைக் கேட்கிறீர்கள், நீங்கள் எனக்காக வேலை செய்தால், வேலைக்கான கட்டணத்தைக் கோருகிறீர்கள், நீங்கள் என்னுடைய வஸ்திரங்களைத் துவைத்தால், சலவைக் கட்டணத்தைக் கோருகிறீர்கள், நீங்கள் சபைக்காக எதையாகிலும் கொடுத்தால், மீட்புச் செலவைக் கோருகிறீர்கள், நீங்கள் பிரசங்கம் பண்ணினால் பிரசங்கியாருக்கான கட்டணத்தைக் கோருகிறீர்கள், நீங்கள் புத்தகங்களை விநியோகித்தால், விநியோகக் கட்டணத்தைக் கோருகிறீர்கள், நீங்கள் எழுதினால், எழுத்துக் கட்டணத்தைக் கோருகிறீர்கள். நான் கையாண்ட நபர்கள் கூட என்னிடத்தில் இழப்பீட்டைக் கோருகிறார்கள், வீட்டிற்கு அனுப்பப்பட்டவர்களோ அவர்கள் பெயருக்கு வந்த பாதிப்புக்காக இழப்பீட்டைக் கோருகிறார்கள். விவாகமாகாதவர்கள் வரதட்சணையைக் கோருகிறார்கள், அல்லது தங்களின் இழக்கப்பட்ட வாலிபத்திற்காக இழப்பீட்டுத் தொகையைக் கோருகிறார்கள். ஒரு கோழியைக் கொல்லுகிறவர்கள் கசாப்புக்காரரின் கட்டணத்தைக் கோருகிறார்கள், உணவை வறுக்கிறவர்கள் வறுப்பதற்கான கட்டணத்தைக் கோருகிறார்கள், சூப் தயாரிப்பவர்கள் அதற்கும்கூட கட்டணத்தைக் கோருகிறார்கள்…. இது உங்களுடைய இறுமாப்பான, வலுவான மனிதத்தன்மை ஆகும். இவைகள் உங்களுடைய வெதுவெதுப்பான மனசாட்சி கட்டளையிடும் செயல்களாகும். உங்கள் அறிவு எங்கே? உங்கள் மனிதத்தன்மை எங்கே? நான் உங்களுக்குச் சொல்கிறேன்! இப்படியே நீங்கள் தொடர்ந்தால், நான் உங்களிடையே கிரியை செய்வதை நிறுத்தி விடுவேன். மனித உடையில் இருக்கும் மிருகக்கூட்டங்களிடையே நான் கிரியை செய்ய மாட்டேன், கொடிய இருதயங்களை மறைத்துக் கொண்டிருக்கும் அழகான முகங்கள் கொண்ட ஜனக்கூட்டத்திற்காக நான் இப்படி பாடுபட மாட்டேன், சிறிதளவேனும் இரட்சிப்புக்கு சாத்தியமில்லா இந்த மிருகக் கூட்டங்களை நான் சகித்துக்கொள்ள மாட்டேன். நான் உங்களைக் கைவிடும் அந்த நாள் நீங்கள் மரிக்கும் நாளாகும், அந்த நாள் இருள் உங்கள் மேல் வருகிற நாளாகும், ஒளியினால் நீங்கள் கைவிடப்படும் நாளாகும். நான் உங்களுக்குச் சொல்கிறேன்! மிருகங்களை விடவும் கீழ்நிலையில் இருக்கும் உங்களுடைய கூட்டத்தைப் போல் இருக்கும் ஒரு கூட்டத்திற்கு நான் ஒருபோதும் நன்மைசெய்கிறவராக இருக்க மாட்டேன். என்னுடைய வார்த்தைகளுக்கும் கிரியைகளுக்கும் வரம்புகள் உண்டு. உங்களிடத்தில் இருக்கும் உங்களுடைய மனிதத்தன்மையும் மனசாட்சியும் அப்படியே மாறாமல் இருக்கும்போது, அவற்றை வைத்துக்கொண்டு நான் இனிமேல் எந்த கிரியையும் செய்ய மாட்டேன். ஏனென்றால் நீங்கள் உங்கள் மனசாட்சியில் மிகக் குறைவுள்ளவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் எனக்கு மிகுந்த வேதனையை உண்டாக்கி விட்டீர்கள். உங்களின் இழிவான சுபாவம் என்னை மிகவும் வெறுப்பூட்டுகிறது. மனிதத்தன்மையிலும் மனசாட்சியிலும் மிகவும் குறைவுள்ளவர்களாக இருக்கும் ஜனங்கள் இரட்சிப்புக்குரிய வாய்ப்பை ஒருபோதும் பெற மாட்டார்கள். இதுபோன்ற இதயமற்ற, நன்றியுணர்வில்லாத ஜனங்களை நான் ஒரு போதும் இரட்சிக்க மாட்டேன். என்னுடைய நாள் வரும்போது, ஒரு சமயம் என்னுடைய கடுங்கோபத்தைத் தூண்டின கீழ்ப்படியாமையின் பிள்ளைகளின் மேல் நித்திய காலமாய் என்னுடைய கொளுத்தும் அக்கினியை பொழியப்பண்ணுவேன். ஒரு சமயம் என்மேல் கடுஞ்சொற்களை வீசியெறிந்து, என்னை நிராகரித்த அந்த மிருகங்கள் மேல் என்னுடைய நித்திய தண்டனையைச் சுமத்துவேன். ஒருசமயம் என்னோடு உண்டு, என்னோடுகூட ஒன்றாக வாழ்ந்து, ஆனால் என்னை விசுவாசிக்காமல், என்னை அவமதித்து, எனக்குத் துரோகம்பண்ணின இந்தக் கீழ்ப்படியாமையின் புத்திரர்களுக்காக நான் எப்போதும் என் கோபத்தின் அக்கினியிலே பற்றியெரிவேன். என்னுடைய கோபத்தைத் தூண்டின அனைவரையும் என்னுடைய தண்டனைக்கு உட்படுத்துவேன். ஒரு சமயம் எனக்குச் சமமானவர்கள் போல என் அருகில் நின்றபோதும் என்னை ஆராதிக்காமல், எனக்குக் கீழ்ப்படியாமல் இருந்த அந்த மிருகங்கள் மேல் என்னுடைய கோபம் முழுவதையும் பொழியப்பண்ணுவேன். முன்பு என் பராமரிப்பை அனுபவித்த, முன்பு நான் பேசின மறைப்பொருள்களால் மகிழ்ச்சியுற்ற, முன்பு என்னிடத்திலிருந்து பொருள் இன்பங்களை எடுக்க முயற்சித்த அந்த மிருகங்கள் மேல் நான் மனிதனை அடிக்கின்ற கோல் விழும். என்னுடைய இடத்தை எடுத்துக்கொள்ள முயற்சிக்கும் ஒருவரைக்கூட நான் மன்னிப்பதில்லை. என்னிடத்திலிருந்து உணவையும், உடைகளையும் பறித்துக்கொள்ள முயற்சித்த ஒருவனைக் கூட நான் தப்பவிடமாட்டேன். இப்போதைக்கு நீங்கள் தீங்கிலிருந்து விடுதலையாகி, என்னிடத்தில் நீங்கள் செய்யும் கோரிக்கைகளில் மிதமிஞ்சுவதைத் தொடருங்கள். என்னுடைய கோபத்தின் நாள் வரும்போது, என்னிடத்தில் இனிமேல் நீங்கள் எந்தக் கோரிக்கைகளையும் வைக்க மாட்டீர்கள். அந்த நேரத்தில் உங்கள் இருதயம் திருப்தியாகும் வரையிலும் உங்களை "மகிழ்ச்சியுற" அனுமதிப்பேன். உங்கள் முகத்தை பூமிக்குள் தள்ளுவேன். உங்களால் திரும்பவும் ஒருபோதும் எழும்ப முடியாது. மிகச்சீக்கிரத்தில் நான் இந்தக் கடனை உங்களுக்குத் "திருப்பிச்செலுத்தப்" போகிறேன். அந்த நாள் வருவதற்காக நீங்கள் பொறுமையுடன் காத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "மாறாத மனநிலையைக் கொண்டிருப்பது தேவனிடம் பகைமையுடன் இருப்பதாகும்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க