தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவன் தோன்றுதல் மற்றும் அவருடைய கிரியை | பகுதி 74

பிப்ரவரி 16, 2023

தேவனையும் மனுஷனையும் சமமாகக் கருத முடியாது. அவரது சாரமும் அவரது கிரியையும் மனுஷனால் எவ்வகையிலும் ஆழங்காண முடியாதவை மற்றும் புரிந்துகொள்ள முடியாதவை. மனுஷ உலகில் தேவன் தனிப்பட்ட முறையில் தனது கிரியையைச் செய்யாமலும், தன் வார்த்தைகளைப் பேசாமலும் இருந்தால், மனுஷனால் ஒருபோதும் தேவனின் சித்தத்தைப் புரிந்து கொள்ள முடியாது. எனவே, தங்கள் முழு ஜீவிதத்தையும் தேவனுக்காக அர்ப்பணித்தவர்களால் கூட அவருடைய அங்கீகாரத்தைப் பெற முடியாது. தேவன் கிரியை செய்யத் தொடங்கவில்லை என்றால், மனுஷன் எவ்வளவு நன்றாகச் செயல்பட்டாலும், அவை அனைத்தும் பயனற்றதாகவே இருக்கும், ஏனென்றால் தேவனின் எண்ணங்கள் எப்போதும் மனுஷனின் எண்ணங்களை விட உயர்ந்தவையாக இருக்கின்றன, மேலும் தேவனின் ஞானம் மனுஷனின் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. ஆகவே, தேவனையும் அவருடைய கிரியையையும் "முழுமையாகப் புரிந்துகொள்கிறேன்" என்று கூறுபவர்கள் தகுதியற்றவர்கள் என்று நான் சொல்கிறேன்; அவர்கள் அனைவரும் மிகைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் அறிவற்றவர்கள் ஆவர். தேவனின் கிரியையை மனுஷன் வரையறுக்கக் கூடாது; மேலும், தேவனின் கிரியையை மனுஷனால் வரையறுக்க முடியாது. தேவனின் பார்வையில், மனுஷன் ஓர் எறும்பு போல அற்பமானவன்; ஆகையால் தேவனின் கிரியையை மனுஷன் எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்? "தேவன் இவ்வாறாக அல்லது அவ்வாறாகச் செயல்படமாட்டார்," அல்லது "தேவன் இப்படிப்பட்டவர் அல்லது அப்படிப்பட்டவர்," என்று கூச்சலிட விரும்புவோர், ஆணவத்துடன் பேசவில்லையா? மாம்சத்திலிருந்து வந்த மனுஷன் சாத்தானால் சீர்கெட்டுப்போனான் என்பதை நாம் அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும். தேவனை எதிர்ப்பதே மனுஷகுலத்தின் இயல்பாக இருக்கிறது. மனுஷகுலம் தேவனுக்கு இணையாக இருக்க முடியாது, தேவனின் கிரியைக்கு அறிவுரை வழங்குவது என்பது மனுஷகுலத்திற்கு எட்டாக்கனியாக இருக்கிறது. தேவன் மனுஷனை வழிநடத்துவது என்பது தேவனின் கிரியையாக இருக்கிறது. இந்த அல்லது அந்தக் கருத்தை எதிர்க்காமல் மனுஷன் கீழ்ப்படிய வேண்டும் என்பது பொருத்தமானது தான், ஏனென்றால் மனுஷன் என்பவன் வெறும் மண்தான். தேவனைத் தேடுவது நம்முடைய நோக்கம் என்பதால், தேவனின் எண்ணப்படியான அவரது கிரியை மீதுள்ள நம் கருத்துக்களை நாம் மிகைப்படுத்தக் கூடாது, தேவனின் கிரியையை வேண்டுமென்றே எதிர்ப்பதற்கு நம்முடைய சீர்கேடான மனநிலையை அதிகம் பயன்படுத்தவே கூடாது. அப்படிச் செய்வது நம்மை அந்திக்கிறிஸ்துக்களாக மாற்றாதா? அத்தகையவர்கள் எப்படி தேவனிடத்தில் விசுவாசமாக இருப்பார்கள்? தேவன் ஒருவர் இருக்கிறார் என்று நாம் விசுவாசிப்பதால், அவரைத் திருப்திப்படுத்தவும் அவரைப் பார்க்கவும் நாம் விரும்புவதால், நாம் சத்தியத்தின் வழியைத் தேட வேண்டும், மேலும் தேவனுடன் ஒத்துப்போக ஒரு வழியைத் தேட வேண்டும். நாம் அவரை எதிர்ப்பதில் வணங்காக் கழுத்துள்ளவர்களாக இருக்கக்கூடாது. அத்தகைய செயல்களால் என்ன நன்மை வரக்கூடும்?

இன்று, தேவன் புதிய கிரியையைச் செய்துள்ளார். உன்னால் இந்த வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள முடியாமல் போகலாம், அவை உனக்கு வித்தியாசமாகத் தோன்றலாம், ஆனால் உன் இயல்புகளை நீ வெளிப்படுத்த வேண்டாம் என்று நான் உனக்கு அறிவுறுத்துகிறேன், ஏனென்றால் தேவனுக்கு முன்பாக நீதிக்காக உண்மையிலேயே பசியும் தாகமும் கொண்டவர்களால் மட்டுமே சத்தியத்தைப் பெற முடியும், உண்மையான பக்தியுள்ளவர்களால் மட்டுமே அவரால் அறிவூட்டப்பட முடியும். சச்சரவு மற்றும் சண்டையுடன் இல்லாமல், நிதானமான அமைதியுடன் சத்தியத்தைத் தேடுவதன் மூலம் முடிவுகள் பெறப்படுகின்றன. "இன்று, தேவன் புதிய கிரியையைச் செய்துள்ளார்," என்று நான் கூறும்போது, தேவன் மாம்சத்திற்குத் திரும்பும் விஷயத்தைக் குறிப்பிடுகிறேன். ஒருவேளை இந்த வார்த்தைகள் உன்னைத் தொந்தரவு செய்யாமல் போகலாம்; ஒருவேளை நீ அவற்றை வெறுக்கலாம்; அல்லது அவற்றின் மீது உனக்கு அதிக ஆர்வம் இருக்கலாம். எது எப்படியிருந்தாலும், தேவன் தோன்றுவதற்கு உண்மையிலேயே ஏங்குகிற அனைவருமே அந்த உண்மையை எதிர்கொண்டு, அதைப் பற்றிய முடிவுகளுக்குச் செல்வதை விட, அவர்கள் அதனைக் கவனமாகக் கவனிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்; ஒரு புத்திசாலி செய்ய வேண்டியது அதுதான்.

அத்தகைய ஒரு விஷயத்தை விசாரிப்பது கடினம் அல்ல, ஆனால் இந்த ஒரு சத்தியத்தை நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும்: தேவனின் மனுஷ அவதாரமாக இருப்பவர் தேவனின் சாரத்தைக் கொண்டிருப்பார், மேலும் தேவனின் மனுஷ அவதாரமாக இருப்பவர் தேவனின் வெளிப்பாட்டைக் கொண்டிருப்பார். தேவன் மாம்சமாகிவிட்டதால், அவர் செய்ய விரும்பும் கிரியையை செயலாக்குவார், தேவன் மாம்சமாகிவிட்டதால், அவர் என்னவாக இருக்கிறார் என்பதை எடுத்துக்கூறுவார், மேலும் சத்தியத்தை மனுஷனிடம் கொண்டு வரவும், அவனுக்கு ஜீவனை வழங்கவும், அதற்கான வழியை சுட்டிக்காட்டவும் செய்வார். தேவனின் சாராம்சம் இல்லாத மாம்சம் என்பது நிச்சயம் மனுஷனாக அவதரித்த தேவனாக இருக்க முடியாது; இதில் எந்த சந்தேகமும் இல்லை. இது தேவனின் மனுஷ அவதார மாம்சம் என்பதை மனுஷன் விசாரிக்க விரும்பினால், தேவன் வெளிப்படுத்தும் மனநிலை மற்றும் அவர் பேசும் வார்த்தைகளிலிருந்து இதை உறுதிப்படுத்த வேண்டும். அதாவது, தேவனின் மனுஷ அவதார மாம்சம் என்பதை உறுதிப்படுத்தவும், இது சத்தியத்திற்கான வழி இல்லையா என்பதை உறுதிப்படுத்தவும், ஒருவன் தனது சாராம்சத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்ட வேண்டும். எனவே, இது தேவனின் மனுஷ அவதார மாம்சம் என்பதை தீர்மானிப்பதில் முக்கியமானது, வெளிப்புறத் தோற்றத்தைக் காட்டிலும், அவரது சாராம்சத்தில் (அவரது கிரியை, அவரது வார்த்தைகள், அவரது மனநிலை மற்றும் பல அம்சங்களில்) அமைந்துள்ளது. மனுஷன் தேவனின் வெளிப்புறத் தோற்றத்தை மட்டுமே ஆராய்ந்து, அதன் விளைவாக அவரது சாராம்சத்தைக் கவனிக்கத் தவறுகிறான் என்றால், அந்த மனுஷன் மூடனாகவும் அறியாமையில் இருப்பதையும் காட்டுகிறது. வெளிப்புறத் தோற்றத்தைக் கொண்டு சாராம்சத்தைத் தீர்மானிக்க முடியாது; மேலும், தேவனின் கிரியை ஒருபோதும் மனுஷனின் கருத்துக்களுடன் ஒத்துப்போக முடியாது. இயேசுவின் வெளிப்புறத் தோற்றம் மனுஷனின் கருத்துக்களுக்கு எதிராக இருக்கவில்லையா? அவருடைய உண்மையான அடையாளத்தைப் பற்றி எந்த தடயங்களையும் வழங்க அவரது முகம் மற்றும் உடைக்கு முடியவில்லை, இல்லையா? ஆரம்ப கால பரிசேயர்கள் வெறுமனே இயேசுவின் வெளிப்புறத் தோற்றத்தை மட்டும் பார்த்து, அவருடைய வாயில் உள்ள வார்த்தைகளை இருதயத்தில் ஏற்றுக்கொள்ளாமல் அவரை எதிர்க்கவில்லையா? தேவன் தோன்றுவதை எதிர்பார்க்கும் ஒவ்வொரு சகோதர சகோதரியும் இந்த வரலாற்றுச் சோகத்தை மீண்டும் நிகழ்த்த மாட்டார்கள் என்பது எனது நம்பிக்கை. நீங்கள் நவீன காலத்தின் பரிசேயர்களாக மாறி, தேவனை மீண்டும் சிலுவையில் அறையக் கூடாது. தேவனின் வருகையை எவ்வாறு வரவேற்பது என்பதை நீங்கள் கவனமாகக் கருத்தில் கொள்ள வேண்டும், மேலும் சத்தியத்திற்குக் கீழ்ப்படியும் ஒருவராக எப்படி இருக்க வேண்டும் என்பதில் உங்களுக்கு தெளிவான மனம் இருக்க வேண்டும். இயேசு ஒரு மேகத்தின் மீது வருவார் என்று காத்திருக்கும் அனைவரின் பொறுப்பும் இதுதான். நம்முடைய ஆவிக்குரிய கண்களைத் தெளிவுபடுத்துவதற்காகவே நாம் அவற்றைத் தேய்க்க வேண்டும், மிகைப்படுத்தப்பட்ட கற்பனையின் வார்த்தைகளில் நாம் மூழ்கிவிடக்கூடாது. தேவனின் நடைமுறையான கிரியைகளைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும், மேலும் தேவனின் நடைமுறையான அம்சத்தைப் பாருங்கள். கர்த்தராகிய இயேசு ஒரு மேகத்தின் மீது வந்து, திடீரென்று உங்களிடையே இறங்கி, அவரை ஒருபோதும் அறியாத அல்லது பார்த்திராத மற்றும் அவருடைய சித்தத்தைச் செயல்படுத்தத் தெரியாத உங்களை அழைத்துச் செல்வார் என்பது போன்ற பகல் கனவுகளில் அந்த நாளுக்காக ஏங்கி உங்களை நீங்களே இழக்க வேண்டாம். மேலும் நடைமுறையான விஷயங்களைப் பற்றிச் சிந்திப்பது நல்லது!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முகவுரை” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க