தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய கிரியையை அறிதல் | பகுதி 199

மோசே கன்மலையை அடித்தபோது, அவனது விசுவாசத்தினால் யேகோவா அருளிய தண்ணீர் வெளியே பாய்ந்தோடிற்று. தாவீது யேகோவாவாகிய என்னைப் புகழ்ந்து பாடலை இசைத்தபோது—அவனது விசுவாசத்தினால்—அவனது இருதயம் சந்தோஷத்தினால் நிரம்பிற்று. யோபு, மலைகளை நிரப்பின அவனது கால்நடைகளையும் மற்றும் சொல்லப்படாத அளவு ஏராளமான செல்வங்களையும் இழந்தபோது, மற்றும் அவனது உடலை எரிகிற கொப்புளங்கள் மூடியபோது, அது அவனுடைய விசுவாசத்தின் நிமித்தமாக இருந்தது. யேகோவாவாகிய என் குரலை அவன் கேட்க முடிந்து மற்றும் எனது மகிமையைக் காணமுடிந்தபோது, அது அவனது விசுவாசத்தின் நிமித்தமாக இருந்தது. பேதுரு தனது விசுவாசத்தின் நிமித்தமாகவே இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற முடிந்தது. அவனது விசுவாசத்தினிமித்தமாகவே, எனக்காக அவன் சிலுவையில் அறையப்படவும் மகிமையான சாட்சியம் தரவும் முடிந்தது. யோவான் தனது விசுவாசத்தின் நிமித்தமாகவே மனுஷகுமாரனின் மகிமையான உருவத்தைக் கண்டான். கடைசி நாட்களின் தரிசனத்தை அவன் கண்டபோது, அவனுடைய விசுவாசத்தினாலேயே அது அதிகமாயிற்று. புறஜாதி ஜனங்களைச் சேர்ந்தவர்கள் என்று அழைக்கப்படுகிறவர்களில் திரளானவர்கள் என் வெளிப்பாட்டைப் பெற்றனர், மற்றும் மனிதனுக்கு மத்தியில் என் ஊழியத்தைச் செய்வதற்காக நான் மாம்சத்தில் திரும்ப வந்திருக்கிறேன் என்பதை அவர்கள் அறியவந்திருப்பதற்கான காரணமும், அவர்கள் விசுவாசம்தான். என் கடுமையான வார்த்தைகளால் பாதிக்கப்பட்டும் இன்னும் அவற்றினால் ஆறுதலுக்குக் கொண்டுவரப்பட்டு அவற்றினால் இரட்சிக்கப்பட்டிருக்க வேண்டியவர்கள்—அவர்கள் தங்களின் விசுவாசத்தின் காரணமாக இதைச் செய்யாதிருக்கிறார்களா? ஜனங்கள் தங்கள் விசுவாசத்தினால் நிறைய பெற்றிருக்கிறார்கள், அது எப்போதும் ஓர் ஆசீர்வாதம் அல்ல. தாவீது உணர்ந்த மகிழ்ச்சியையும் இன்பத்தையும் அவர்கள் பெறாமலிருக்கலாம், அல்லது மோசே செய்ததைப் போல யேகோவாவால் தண்ணீர் வழங்கப்பட்டிருக்கலாம். உதாரணமாக, யோபுவின் விசுவாசத்தினால் அவன் யேகோவாவால் ஆசீர்வதிக்கப்பட்டான், ஆனால் அவனும் பேரழிவைச் சந்தித்தான். நீ ஆசீர்வதிக்கப்பட்டாலும் அல்லது பேரழிவை அனுபவித்தாலும், இரண்டும் ஆசீர்வதிக்கப்பட்ட நிகழ்வுகள்தான். விசுவாசம் இல்லாமல், இத்தகைய ஜெயங்கொள்ளும் கிரியையை உன்னால் பெற முடியாது, மேலும் இன்று உன் கண்களுக்கு முன்பாக காண்பிக்கப்படும் யேகோவாவின் கிரியைகளை உன்னால் காண இயலாது. உன்னால் பார்க்கவும் இயலாது, பெறவும் இயலாது. இந்தத் துன்பங்கள், இந்தப் பேரழிவுகள் மற்றும் அனைத்து நியாயத்தீர்ப்புகள்—இவை உனக்கு ஏற்படவில்லை என்றால், உன்னால் இன்று யேகோவாவின் கிரியைகளைக் காண முடியுமா? இன்று, விசுவாசமே உன்னை ஜெயங்கொள்ள அனுமதிக்கிறது, மேலும் அது ஜெயங்கொள்ளப்படுவது யேகோவாவின் ஒவ்வொரு கிரியையையும் விசுவாசிக்க அனுமதிக்கிறது. விசுவாசத்தினால்தான் நீ இத்தகைய ஆக்கினைத்தீர்ப்பையும் நியாயத்தீர்ப்பையும் பெறுகிறாய். இந்த ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பின் மூலம், நீ ஜெயங்கொள்ளப்பட்டு பரிபூரணமடைகிறாய். இன்று நீ பெறும் ஆக்கினைத்தீர்ப்பும் நியாயத்தீர்ப்பும் இல்லாமல், உனது விசுவாசம் வீணாகிவிடும், ஏனென்றால் நீ தேவனை அறிய மாட்டாய்; நீ அவரை எவ்வளவு விசுவாசித்தாலும், உன் விசுவாசம் நிலைத்திருக்கும், ஆனால் அது உண்மையில் வெற்று வெளிப்பாடாகத்தான் இருக்கும். உன்னை முழுமையாகக் கீழ்ப்படியச் செய்யும் கிரியையான இந்த ஜெயங்கொள்வதன் கிரியையை நீ பெற்ற பின்னரே, உன் விசுவாசம் உண்மையாகவும், நம்பகமானதாகவும் மாறும், மேலும் உனது இருதயம் தேவனை நோக்கித் திரும்பும். "விசுவாசம்" என்ற இந்த வார்த்தையின் காரணமாக நீ மிகுந்த நியாயத்தீர்ப்பையும் சாபத்தையும் அனுபவித்தாலும், நீ உண்மையான விசுவாசத்தைக் கொண்டிருக்கிறாய், மேலும் நீ சத்தியமான, மிகவும் உண்மையான, மிகவும் அருமையான விஷயத்தைப் பெறுகிறாய். ஏனென்றால், நியாயத்தீர்ப்பின் போக்கில் மட்டுமே தேவனின் சிருஷ்டிப்புகள் இறுதியாக போய்சேரும் இடத்தை நீ காண்கிறாய்; இந்த நியாயத்தீர்ப்பில்தான் சிருஷ்டிகர் நேசிக்கப்பட வேண்டும் என்பதை நீ காண்கிறாய்; இத்தகைய ஜெயங்கொள்ளும் கிரியையில்தான் நீ தேவனின் கரத்தைக் காண்கிறாய்; இந்த ஜெயத்தில் தான் நீ மனுஷ ஜீவிதத்தை முழுமையாக புரிந்து கொள்கிறாய்; இந்த ஜெயத்தில்தான் நீ மனுஷ ஜீவிதத்தின் சரியான பாதையைப் பெற்று, "மனுஷன்" என்பதன் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்கிறாய்; இந்த ஜெயத்தில் மட்டுமே நீ சர்வவல்லவரின் நேர்மையான மனநிலையையும் அவருடைய அழகான, மகிமையான முகத்தையும் காண்கிறாய்; இந்த ஜெயங்கொள்ளும் கிரியையில்தான் நீ மனுஷனின் தோற்றத்தைப் பற்றி அறிந்துகொண்டு, மனுஷகுலத்தின் "அழியாத வரலாற்றை" புரிந்துகொள்கிறாய்; இந்த ஜெயத்தில்தான் நீ மனுஷகுலத்தின் மூதாதையர்களையும் மனுஷகுலத்தின் சீர்கேட்டின் தோற்றத்தையும் புரிந்து கொள்கிறாய்; இந்த ஜெயத்தில்தான் நீ மகிழ்ச்சியையும் ஆறுதலையும் பெறுகிறாய், அத்துடன் முடிவில்லாத சிட்சை, ஒழுக்கம் மற்றும் சிருஷ்டிகரிடமிருந்து அவர் சிருஷ்டித்த மனுஷகுலத்திற்கு கடிந்துகொள்ளுதல் வார்த்தைகளைப் பெறுகிறாய்; இந்த ஜெயங்கொள்ளும் கிரியையில்தான் நீ ஆசீர்வாதங்களைப் பெறுகிறாய், அதே போல் மனுஷனால் ஏற்படக்கூடிய பேரழிவுகளையும் பெறுகிறாய்…. இது உனது சிறிய விசுவாசத்தின் காரணமாகத்தான் அல்லவா? இவற்றைப் பெற்ற பிறகு உனது விசுவாசம் வளரவில்லையா? நீ மிகப்பெரிய அளவிற்குப் பெறவில்லையா? நீ தேவனின் வார்த்தையைக் கேட்டிருக்கிறாய், தேவனின் ஞானத்தையும் கண்டிருக்கிறாய் என்பது மட்டுமல்லாமல், அவருடைய கிரியையின் ஒவ்வொரு கட்டத்தையும் நீ தனிப்பட்ட முறையில் அனுபவித்திருக்கிறாய். உனக்கு விசுவாசம் இல்லையென்றால், நீ இந்த வகையான ஆக்கினைத்தீர்ப்பையோ அல்லது இந்த வகையான நியாயத்தீர்ப்பையோ அனுபவித்திருக்க மாட்டாய் என்றுகூட நீ கூறலாம். ஆனால் விசுவாசம் இல்லாமல், நீ இந்த வகையான ஆக்கினைத்தீர்ப்பையோ அல்லது சர்வவல்லவரிடமிருந்து இந்த வகையான கவனிப்பையோ பெற முடியாது என்பது மட்டுமல்லாமல், சிருஷ்டிகரைச் சந்திக்கும் வாய்ப்பையும் நீ என்றென்றும் இழக்க நேரிடும் என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும். நீ மனுஷகுலத்தின் தோற்றத்தை ஒருபோதும் அறிய மாட்டாய், மனுஷ ஜீவிதத்தின் முக்கியத்துவத்தை ஒருபோதும் புரிந்து கொள்ள மாட்டாய். உன் சரீரம் மரித்துப்போய், உனது ஆத்துமா புறப்பட்டாலும், சிருஷ்டிகரின் எல்லா கிரியைகளையும் நீ புரிந்து கொள்ள மாட்டாய், மேலும் சிருஷ்டிகர் மனுஷகுலத்தை சிருஷ்டித்தபின் பூமியில் இவ்வளவு பெரிய கிரியைகளைச் செய்தார் என்பதையும் நீ அறிய மாட்டாய். அவர் சிருஷ்டித்த இந்த மனுஷகுலத்தின் உறுப்பினராக, நீ அறியாமலே இவ்வாறாக இருளில் விழுந்து, நித்திய தண்டனையை அனுபவிக்க விரும்புகிறாயா? இன்றைய ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பிலிருந்து நீ உன்னை விலக்கிக் கொண்டால், நீ எதைத்தான் சந்திப்பாய்? தற்போதைய நியாயத்தீர்ப்பிலிருந்து நீ விலகியவுடன், இந்த கடினமான ஜீவிதத்திலிருந்து உன்னால் தப்பிக்க முடியும் என்று நினைக்கிறாயா? நீ "இந்த இடத்தை" விட்டு வெளியேறினால், நீ சந்திப்பது வலிமிகுந்த துயரம் அல்லது பிசாசால் செய்யப்பட்ட கொடூரமான துஷ்பிரயோகம் என்பது உண்மையாகிவிடாதா? உன்னால் தீர்க்கமுடியாத பகல் மற்றும் இரவுகளைச் சந்திக்க முடியுமா? இந்த நியாயத்தீர்ப்பிலிருந்து நீ தப்பித்ததால், எதிர்கால சித்திரவதைகளை நீ என்றென்றும் தவிர்க்கலாம் என்று நினைக்கிறாயா? உனது பாதையின் குறுக்கே என்ன வரும்? அது உண்மையிலேயே நீ நம்பும் ஷாங்க்ரி-லாவாக இருக்குமோ? நீ இப்போது செய்வது போல யதார்த்தத்திலிருந்து தப்பிச்செல்வதன் மூலம் எதிர்கால நித்திய ஆக்கினைத்தீர்ப்பிலிருந்து தப்பிக்க முடியும் என்று நீ நினைக்கிறாயா? இன்றைய நாளுக்குப் பிறகு, இந்த வகையான வாய்ப்பையும் இந்த வகையான ஆசீர்வாதத்தையும் மீண்டும் உன்னால் கண்டுபிடிக்க முடியுமா? உனக்குப் பேரழிவு நேரும்போது உன்னால் அவற்றைக் கண்டுபிடிக்க முடியுமா? மனுஷகுலம் மொத்தமும் ஓய்வெடுக்கச் செல்லும்போது உன்னால் அவற்றைக் கண்டுபிடிக்க முடியுமா? உனது தற்போதைய மகிழ்ச்சியான ஜீவிதமும், உனது இணக்கமான சிறிய குடும்பமும்—அவை உனது எதிர்காலத்தில் போய்ச்சேரும் நித்திய இடத்திற்கு மாற்றாக இருக்க முடியுமா? நீ உண்மையான விசுவாசத்தைக் கொண்டிருந்தால், உனது விசுவாசத்தின் காரணமாக நீ பெருமளவில் பெற்றால், அப்போது அவற்றையெல்லாம் சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனான நீ பெற வேண்டும், மேலும் அவற்றை நீ ஆரம்பத்திலேயே பெற்றிருக்க வேண்டும். அத்தகைய ஜெயத்தை விட உனது விசுவாசத்திற்கும் ஜீவிதத்திற்கும் வேறு எதுவும் பயனளிக்காது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "ஜெயங்கொள்ளும் கிரியையைக் குறித்த உள்ளார்ந்த சத்தியம் (1)" என்பதிலிருந்து

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனுஷ அவதரிப்பு | பகுதி 100

பூமியில் இயேசு வாழ்ந்த வாழ்க்கை மாம்சத்தின் ஒரு இயல்பான வாழ்க்கையாகும். அவர் தமது மாம்சத்தின் இயல்பான மனிதத்தன்மையில் வாழ்ந்தார். அவருடைய...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 531

பேதுரு பற்றிக் குறிப்பிடும்போது, ஜனங்கள் அவனைப் பற்றிச் சொல்லும் நல்ல விஷயங்களுக்கு முடிவே இல்லை. அவன் தேவனை மறுதலித்த மூன்று முறையும்,...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனிதகுலத்தின் சீர்கேட்டினை அம்பலப்படுத்துதல் | பகுதி 321

உங்களுக்குள் தேவன் மகிழ்ந்திருக்க நீங்கள் ஏங்குகிறீர்கள், ஆனாலும் நீங்கள் தேவனிடமிருந்து வெகு தொலைவில் இருக்கிறீர்கள். இங்கே பிரச்சனை என்ன?...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவன் தோன்றுதல் மற்றும் அவருடைய கிரியை | பகுதி 51

எல்லா திருச்சபைகளிலும் தேவன் தோன்றுவது ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆவியானவர் தான் பேசுகிறார்; அவர் பொங்கி எழும் அக்கினியாக...