தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கிரியையின் மூன்று கட்டங்கள் | பகுதி 42

"தேவன் நம்மோடிருக்கிறார்" என்று அர்த்தமுள்ள இயேசுவின் நாமத்தால் தேவனின் மனநிலையை முழுவதுமாக பிரதிநிதித்துவப்படுத்த முடியுமா? அந்த நாமத்தால் தேவனை முழுமையாக வெளிப்படுத்த முடியுமா? தேவனால் தமது மனநிலையை மாற்ற முடியாது என்பதால் தேவனை இயேசு என்று மட்டுமே அழைக்க முடியும் என்றும், வேறு எந்த நாமமும் அவருக்கு இல்லை என்றும் மனுஷன் கூறினால், அந்த வார்த்தைகள் உண்மையில் தூஷணமாகும்! தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமுள்ள இயேசு என்ற நாமத்தால் மட்டுமே தேவனை முழுவதுமாகப் பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்று நீ நம்புகிறாயா? தேவன் பல நாமங்களால் அழைக்கப்படலாம், ஆனால் இந்தப் பல நாமங்களில், தேவனின் முழு அம்சத்தையும் அடக்கக் கூடிய நாமம் ஒன்றுகூட இல்லை, தேவனை முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய நாமம் ஒன்றுகூட இல்லை. எனவே, தேவனுக்குப் பல நாமங்கள் இருக்கின்றன, ஆனால் இந்தப் பல நாமங்களால் தேவனின் மனநிலையை முழுமையாக வெளிப்படுத்த முடியாது, ஏனென்றால் தேவனின் மனநிலை வளம் மிக்கது, அது அவரை அறிந்து கொள்ளும் மனுஷனின் திறனை மீறுகிறது. மனுஷனுக்கு, மனுஷகுலத்தின் மொழியைப் பயன்படுத்தி, தேவனின் முழு அம்சத்தையும் அடக்கக் கூடிய எந்த வழியும் இல்லை. தேவனின் மனநிலையைப் பற்றி தங்களுக்குத் தெரிந்த அனைத்தையும் அடக்க மனுஷகுலத்திடம் ஒரு வரையறுக்கப்பட்ட சொற்களஞ்சியம்தான் இருக்கிறது: மகத்துவமானவர், கனத்திற்குரியவர், அதிசயமானவர், புரிந்துகொள்ள முடியாதவர், உயர்ந்தவர், பரிசுத்தமானவர், நீதியுள்ளவர், ஞானமுள்ளவர், மற்றும் பல எனப் பல வார்த்தைகள் இருக்கின்றன! இந்த வரையறுக்கப்பட்ட சொற்களஞ்சியத்தால் தேவனின் மனநிலையைப் பற்றி மனுஷன் கண்ட சிறிய விஷயங்களை விவரிக்க இயலாது. காலப்போக்கில், பலர் தங்கள் இருதயங்களில் இருக்கும் உற்சாகத்தை விவரிக்க முடியும் என்று நினைத்த வார்த்தைகளை இதில் சேர்த்தனர்: தேவன் மிகவும் மகத்துவமானவர்! தேவன் மிகவும் பரிசுத்தமானவர்! தேவன் மிகவும் அழகானவர்! இன்று, இது போன்ற மனுஷ சொற்கள் உச்சத்தை எட்டியுள்ளன, ஆனாலும் மனுஷனால் தன்னைத் தெளிவாக வெளிப்படுத்த இயலவில்லை. எனவே, மனுஷனைப் பொறுத்தவரை, தேவனுக்கு ஒரு நாமம் அல்ல, பல நாமங்கள் இருக்கின்றன. ஏனென்றால் தேவன் வளம்மிக்கவர், மேலும் மனுஷனின் மொழி மிகவும் வறிய நிலையில் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட வார்த்தை அல்லது நாமத்துக்கு தேவனை முழுவதுமாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் திறன் இல்லை, எனவே அவருடைய நாமத்தை நிரந்தரமாக்க முடியும் என்று நீ நினைக்கிறாயா? தேவன் மகத்துவம் மிக்கவர், மிகவும் பரிசுத்தமானவர், ஆனாலும் ஒவ்வொரு புதிய யுகத்திலும் அவருடைய நாமத்தை மாற்ற நீ அவரை அனுமதிக்க மாட்டாயா? ஆகையால், தேவன் தனது சொந்தக் கிரியையை தனிப்பட்ட முறையில் செய்யும் ஒவ்வொரு யுகத்திலும், அவர் செய்ய விரும்பும் கிரியையின் சிறப்பியல்புகளை உள்ளடக்கும் வகையில், யுகத்துக்கு ஏற்ற ஒரு நாமத்தைப் பயன்படுத்துகிறார். தற்காலிகமாக முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் குறிப்பிட்ட நாமத்தை, அந்த யுகத்தில் அவருக்கு இருந்த மனநிலையை பிரதிநிதித்துவப்படுத்தப் பயன்படுத்துகிறார். தேவன் தனது சொந்த மனநிலையை வெளிப்படுத்த மனுஷகுலத்தின் மொழியைப் பயன்படுத்துகிறார். அப்படியிருந்தும், ஆவிக்குரிய அனுபவங்களைப் பெற்ற மற்றும் தேவனை தனிப்பட்ட முறையில் பார்த்த அநேகரும் இந்த ஒரு குறிப்பிட்ட நாமத்தால் தேவனை முழுவதுமாகப் பிரதிநிதித்துவப்படுத்த இயலாது என்று நினைக்கிறார்கள்—ஐயோ, இதனால் உதவ முடியாது—எனவே மனுஷன் இனியும் எந்த நாமத்தாலும் தேவனைக் குறிப்பிடுவதில்லை, ஆனால் வெறுமனே அவரை "தேவன்" என்று அழைக்கிறான். இது மனுஷனின் இருதயம் அன்பால் நிறைந்திருப்பது போலவும், ஆனால் முரண்பாடுகளால் சூழப்பட்டதாகவும் இருக்கிறது, ஏனென்றால் தேவனை எவ்வாறு விளக்குவது என்று மனுஷன் அறிந்திருக்கவில்லை. தேவன் வளம்மிக்கவராக இருப்பதால் அவர் என்னவாக இருக்கிறார் என்பதை விவரிக்க எந்த வழியும் இல்லை. தேவனின் மனநிலையை சுருக்கமாகக் குறிப்பிடக்கூடிய எந்த ஒரு நாமமும் இல்லை, மேலும் தேவன் வைத்திருக்கும் மற்றும் அவர் என்னவாக இருக்கிறார் என்பதையும் விவரிக்கக்கூடிய ஒரு நாமமும் இல்லை. யாராவது என்னிடம், "நீ எந்த நாமத்தைப் பயன்படுத்துகிறாய்?" என்று கேட்டால், நான் அவர்களிடம், "தேவன் தேவனே!" என்று கூறுவேன். இது தேவனுக்கு சிறந்த நாமம் அல்லவா? இது தேவனின் மனநிலையைச் சிறப்பாக உள்ளடக்கியிருக்கும் ஒரு நாமம் அல்லவா? இது அவ்வாறு இருப்பதால், தேவனின் நாமத்தைத் தேடுவதற்கு நீங்கள் ஏன் இவ்வளவு முயற்சி செய்கிறீர்கள்? ஒரு நாமத்தின் பொருட்டு, உணவு மற்றும் நித்திரை இல்லாமல் உங்கள் மூளையை எதற்காகக் கசக்க வேண்டும்? தேவன், யேகோவா, இயேசு அல்லது மேசியா என்று அழைக்கப்படாத ஒரு நாள் வரும்—அவர் வெறுமனே சிருஷ்டிகராக இருப்பார். அந்த நேரத்தில், அவர் பூமியில் சூட்டிக்கொண்ட எல்லா நாமங்களும் முடிவுக்கு வரும், ஏனென்றால் பூமியில் அவர் செய்த கிரியைகள் முடிவுக்கு வரும், அதன் பிறகு அவருடைய நாமங்கள் இனி இருக்காது. சகலமும் சிருஷ்டிகரின் ஆதிக்கத்தின் கீழ் வரும்போது, அவருக்கு மிகவும் பொருத்தமான ஆனால் முழுமையற்ற நாமத்திற்கான தேவை என்ன? நீ இப்போதும் தேவனின் நாமத்தைத் தேடுகிறாயா? தேவன் யேகோவா என்று மட்டுமே அழைக்கப்படுகிறார் என்று நீ இன்னும் சொல்லத் துணிகிறாயா? தேவனை இயேசு என்று மட்டுமே அழைக்க முடியும் என்று நீ இன்னும் சொல்லத் துணிகிறாயா? தேவனுக்கு எதிராக தூஷணம் செய்த பாவத்தை உன்னால் தாங்கிக்கொள்ள முடியுமா? தேவனுக்கு நாமம் என்பதே இல்லை என்பதை நீ முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அவர் ஒன்று, இரண்டு, அல்லது பல நாமங்களை மட்டுமே சூட்டிக்கொண்டார், ஏனென்றால் அவருக்குக் கிரியைகள் இருந்தன, மனுஷகுலத்தை நிர்வகிக்க வேண்டியிருந்தது. அவர் எந்த நாமத்தால் அழைக்கப்பட்டாலும்—அதை அவர் சுதந்திரமாகத் தேர்வு செய்யவில்லையா? அதைத் தீர்மானிக்க அவருக்கு அவரது சிருஷ்டிப்புக்களில் ஒருவனான உன் உதவி தேவையா? தேவனைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் நாமமானது, மனுஷனின் மொழியுடன், மனுஷனால் புரிந்துகொள்ள முடியும் விஷயங்களுடன் உடன்படுவதாக இருக்கிறது, ஆனால் இந்த நாமம் மனுஷனால் பொதுமைப்படுத்தக் கூடிய ஒன்று அல்ல. பரலோகத்தில் ஒரு தேவன் இருக்கிறார், அவர் தேவன் என்று அழைக்கப்படுகிறார், அவர் மிகுந்த வல்லமையுள்ள தேவன், அவர் மிகவும் புத்திசாலி, மிக உயர்ந்தவர், அதிசயமானவர், மறைபொருள் மிக்கவர், மற்றும் சர்வவல்லமையுள்ளவர் என்று மட்டுமே உன்னால் சொல்ல முடியும், அதற்கு மேல் உன்னால் எதுவும் சொல்ல முடியாது; சிறிதளவு மட்டுமே உன்னால் அறிய முடிந்திருக்கிறது. இது அவ்வாறு இருப்பதால், இயேசுவின் நாமத்தால் மட்டுமே தேவனை பிரதிநிதித்துவப்படுத்த முடியுமா? கடைசிக் காலம் வரும்போது, தேவனே அவருடைய கிரியைகளைச் செய்கிறார் என்றாலும், அவருடைய நாமம் மாற வேண்டும், ஏனென்றால் அது வேறு யுகம்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)” என்பதிலிருந்து

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கிரியையின் மூன்று கட்டங்கள் | பகுதி 22

இயேசு செய்த கிரியை அந்தக் காலத்தில் மனிதனின் தேவைகளுக்கு ஏற்ப இருந்தது. அவருடைய கிரியை மனிதகுலத்தை மீட்பதும், அவர்களுடைய பாவங்களை...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 499

பெரும்பாலான ஜனங்களின் தேவன் மீதான விசுவாசத்தின் சாராம்சம் மத நம்பிக்கையே ஆகும். அவர்களால் தேவனை நேசிக்க இயலாது, மேலும் இயந்திர மனிதனைப் போல...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 389

பேதுரு எனக்குப் பல ஆண்டுகளாக உண்மையுள்ளவனாக இருந்தான், ஆனாலும் அவன் ஒருபோதும் முணுமுணுக்கவுமில்லை, எந்த மனக்குறையும் கொண்டிருக்கவுமில்லை;...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனிதகுலத்தின் சீர்கேட்டினை அம்பலப்படுத்துதல் | பகுதி 354

முதலில், நான் உங்களுக்கு அதிக சத்தியங்களை வழங்க விரும்பினேன், ஆனால் சத்தியத்தை நோக்கிய உங்கள் சிந்தை மிகவும் உணர்ச்சியற்றதாகவும்...