தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனிதகுலத்தின் சீர்கேட்டினை அம்பலப்படுத்துதல் | பகுதி 361

மனுஷனின் சுபாவமானது எனது சாராம்சத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது, ஏனென்றால் மனுஷனின் சீர்கெட்டச் சுபாவமானது முற்றிலும் சாத்தானிடமிருந்துதான் உருவாகிறது; மனுஷனின் சாராம்சமானது சாத்தானால் நடைமுறைக்கு உள்ளாக்கப்பட்டு சீர்கெடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது, மனுஷன் சாத்தானின் பொல்லாப்பு மற்றும் அசிங்கத்தினுடைய செல்வாக்கின் கீழ் ஜீவிக்கிறான். மனுஷன் சத்தியத்தின் உலகிலோ அல்லது பரிசுத்தமான சூழலிலோ வளருவதில்லை, மேலும் அவன் வெளிச்சத்திலும் ஜீவிப்பதில்லை. ஆகையால், பிறந்த தருணத்திலிருந்தே யாரும் தங்கள் சுபாவத்தினுள் சத்தியத்தை வைத்திருப்பது சாத்தியமில்லை, மேலும் தேவனுக்கு அஞ்சும் மற்றும் கீழ்ப்படியும் ஒரு சாராம்சத்துடன் யாரும் பிறக்க முடியாது. மாறாக, தேவனை எதிர்க்கும், தேவனுக்குக் கீழ்ப்படியாத, சத்தியத்தின் மீது அன்பு இல்லாத ஒரு சுபாவத்தை ஜனங்கள் கொண்டிருக்கிறார்கள். துரோகம் எனும் இந்தச் சுபாவம்தான் நான் விவாதிக்க விரும்பும் பிரச்சினை ஆகும். தேவனுக்கு எதிரான ஒவ்வொருவரின் எதிர்ப்பின் ஊற்றே துரோகம் ஆகும். இது மனுஷனில் மட்டுமே இருக்கும் ஒரு பிரச்சினை, என்னுள் இருப்பதில்லை. சிலர் கேட்பார்கள்: எல்லா மனுஷரும் கிறிஸ்துவைப் போலவே உலகில் ஜீவிக்கிறார்கள் என்பதால், கிறிஸ்துவைத் தவிர எல்லா மனுஷரும் தேவனுக்குத் துரோகம் செய்யும் சுபாவங்களைக் கொண்டிருப்பது ஏன்? இது உங்களுக்குத் தெளிவாக விளக்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினை ஆகும்.

ஆத்துமாவின் தொடர்ச்சியான மறு மனுவுருவாதலே மனுக்குலம் இருப்பதன் அடிப்படையாக இருக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒவ்வொரு மனுஷனும் தனது ஆத்துமா மறுபடியும் மனுவுருவாகும்போது மாம்சத்தில் ஒரு மனுஷ ஜீவிதத்தைப் பெறுகிறான். ஒருவனின் சரீரம் பிறந்த பிறகு, அந்த மாம்சமானது இறுதியில் அதன் வரம்புகளை அடையும் வரை அதன் ஜீவிதம் தொடர்கிறது, இறுதி வரம்பு என்பது ஆத்துமா அதன் சரீரத்தை விட்டு வெளியேறும் இறுதித் தருணம் ஆகும். இந்தச் செயல்முறையானது மீண்டும் மீண்டும் நிகழ்கிறது, ஒருவனின் ஆத்துமா காலப்போக்கில் வந்து செல்கிறது, இவ்வாறாக மனுக்குலம் இருப்பது பராமரிக்கப்படுகிறது. மாம்சத்தின் ஜீவிதமானது மனுஷனுடைய ஆத்துமாவின் ஜீவிதமாகவும் இருக்கிறது, மேலும் மனுஷனின் ஆத்துமாவானது மனுஷ மாம்சத்தின் இருப்பை ஆதரிக்கிறது. அதாவது, ஒவ்வொருவனின் ஜீவிதமும் அவனது ஆத்துமாவிலிருந்து வருகிறது, மேலும் ஜீவிதமானது மாம்சத்திற்கு உள்ளார்ந்த விஷயமும் இல்லை. இவ்வாறு, மனுஷனின் சுபாவமானது ஆத்துமாவிலிருந்து வருகிறது, மாம்சத்திலிருந்து வருவதில்லை. சாத்தானின் சோதனைகள், துன்பங்கள் மற்றும் சீர்கேடுகளை மனுஷன் எவ்வாறு அனுபவித்தான் என்பது ஒவ்வொருவனின் ஆத்துமாவுக்கு மட்டுமே தெரியும். இந்த விஷயங்கள் மனுஷனின் மாம்சத்திற்குத் தெரியாது. ஆகையால், மனுக்குலமானது அறியாமலே இன்னும் இருட்டாகி, இன்னும் அசுத்தமாகி, இன்னும் பொல்லாப்பு கொண்டதாக மாறுகிறது, அதே நேரத்தில் மனுஷனுக்கும் எனக்கும் இடையிலான தூரம் இன்னும் அதிகமாகி, மனுக்குலத்திற்கு ஜீவிதம் என்பது மேலும் இருட்டாகிறது. சாத்தான் மனுக்குலத்தின் ஆத்துமாக்களை அவனது பிடியில் வைத்திருக்கிறான், ஆகவே, மனுஷனின் மாம்சமும் சாத்தானால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. அத்தகைய மாம்சமும் அத்தகைய மனுக்குலமும் தேவனை எவ்வாறு எதிர்க்காமல் இருக்க முடியும்? அவர்கள் தேவனுடன் எவ்வாறு இயல்பாக ஒத்துப்போக முடியும்? சாத்தான் எனக்குத் துரோகம் செய்ததால்தான் நான் சாத்தானை நடுவானில் தூக்கி வீசியிருக்கிறேன். இப்படியிருந்தால், மனுஷர் தங்களது ஈடுபாட்டிலிருந்து எவ்வாறு விடுபட முடியும்? இதனால்தான் துரோகமானது மனுஷ இயல்பாக இருக்கிறது. இந்தப் பகுத்தறிவை நீங்கள் புரிந்துகொண்டவுடன், நீங்கள் கிறிஸ்துவின் சாராம்சத்திலும் சிறிதளவு விசுவாசம் கொண்டிருக்க வேண்டும் என்று நான் விசுவாசிக்கிறேன். தேவனுடைய ஆவியானவர் அணிந்திருக்கும் மாம்சமானது தேவனின் சொந்த மாம்சமாகும். தேவனுடைய ஆவியானவர் உயர்ந்தவராக இருக்கிறார்; அவர் சர்வவல்லவராக, பரிசுத்தராக, நீதியுள்ளவராக இருக்கிறார். அதேபோல், அவருடைய மாம்சமும் உயர்ந்ததாக, சர்வவல்லமைமிக்கதாக, பரிசுத்தமானதாக, நீதியுள்ளதாக இருக்கிறது. அத்தகைய மாம்சத்தால் மட்டுமே மனுக்குலத்திற்கு நீதியும் நன்மையும் வழங்க முடியும், அதுவே பரிசுத்தமானதாக, மகிமைகொண்டதாக, வல்லமை பொருந்தியதாக இருக்கிறது; சத்தியத்தை மீறும், ஒழுக்கத்தையும் நீதியையும் மீறும் எதையும் அவரால் செய்ய இயலாது, மேலும் தேவனுடைய ஆவியானவருக்குத் துரோகம் செய்யும் எதையும் அவரால் செய்ய முடியாது. தேவனுடைய ஆவியானவர் பரிசுத்தமானவர், ஆகவே அவருடைய மாம்சமானது சாத்தானால் சீர்கெட்டுப்போகாது; அவருடைய மாம்சமானது மனுஷனின் மாம்சத்தை விட வித்தியாசமான சாராம்சத்தைக் கொண்டது. ஏனென்றால் சாத்தானால் சீர்கெடுக்கப்பட்டுப்போனது மனுஷன்தான், தேவன் இல்லை; தேவனின் மாம்சத்தைச் சாத்தானால் சீர்கெட்டுப்போக வைக்க முடியாது. ஆகவே, மனுஷனும் கிறிஸ்துவும் ஒரே இடத்திலேயே ஜீவிக்கிறார்கள் என்ற போதிலும், மனுஷன்தான் சாத்தானால் உடைமையாக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு சிக்கவைக்கப்படுகிறான். இதற்கு நேர்மாறாக, கிறிஸ்து சாத்தானின் சீர்கேட்டின் தாக்கத்திற்கு நித்தியமாக உள்ளாகாதவராய் இருக்கிறார், ஏனென்றால் சாத்தான் ஒருபோதும் மிக உன்னதமான இடத்தில் ஏறுவதற்கான திறம்மிக்கவனாக இருக்க மாட்டான், மேலும் அவனால் ஒருபோதும் தேவனிடம் நெருங்கவே முடியாது. இன்று எனக்குத் துரோகம் செய்வது, சாத்தானால் சீர்கெட்டுப்போயிருக்கும் மனுக்குலம் மட்டும்தான் என்பதை நீங்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். துரோகம் என்பது ஒருபோதும் கிறிஸ்துவை உள்ளடக்கிய ஒரு பிரச்சினையாக இருக்காது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "மிகத் தீவிரமான ஒரு பிரச்சினை: துரோகம் (2)" என்பதிலிருந்து

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: போய்ச் சேருமிடம் மற்றும் முடிவுகள் | பகுதி 607

தேவனை விசுவாசிக்கிற ஒருவராக, எல்லாவற்றிலும் அவரையல்லாமல் வேறு யாருக்கும் நீங்கள் விசுவாசமாக இருக்கக்கூடாது, எல்லாவற்றிலும் அவருடைய...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனை அறிதல் | பகுதி 106

ஆதி. 19:1-11 அந்த இரண்டு தூதரும் சாயங்காலத்திலே சோதோமுக்கு வந்தார்கள். லோத்து சோதோமின் வாசலிலே உட்கார்ந்திருந்தான். அவர்களைக் கண்டு, லோத்து...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனை அறிதல் | பகுதி 125

நான்காவது சந்தர்ப்பம்: திருமணம் ஒருவர் வயது வந்த பின்பு, தன் பெற்றோரிடமிருந்தும், தான் பிறந்து வளர்ந்த சூழலிலிருந்தும் அதிகத் தொலைவிற்குச்...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய கிரியையை அறிதல் | பகுதி 171

பரிசுத்த ஆவியானவரால் விசேஷித்த ஆலோசனையும் வழிகாட்டுதலும் கொடுக்கப்படுபவர்களைத் தவிர வேறு யாராலும் சுதந்திரமாக வாழ முடியாது, ஏனெனில்...