தேவனுடைய கிரியையும் மனுஷனின் கிரியையும் (பகுதி இரண்டு)

மனுஷனின் கிரியையானது ஓர் எல்லைக்குள் வரையறுக்கப்பட்டதாக இருக்கிறது. மனுஷனால் ஒரு குறிப்பிட்ட கட்டத்தின் கிரியையை மட்டுமே செய்ய முடியும், முழு யுகத்தின் கிரியையையும் செய்ய முடியாது—இல்லையெனில், அவன் ஜனங்களை விதிகளுக்கு மத்தியில் அழைத்துச் செல்வான். மனுஷனின் கிரியையானது ஒரு குறிப்பிட்ட காலம் அல்லது கட்டத்திற்கு மட்டுமே பொருந்தும். ஏனென்றால், மனுஷனின் அனுபவத்திற்கு எல்லை இருக்கிறது. மனுஷனின் கிரியையை தேவனின் கிரியையுடன் ஒப்பிட முடியாது. மனுஷன் நடக்கும் வழிகள் மற்றும் சத்தியத்தைப் பற்றிய அவனது அறிவு ஆகிய அனைத்தும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே பொருந்தும். மனுஷன் பயணிக்கும் பாதையானது முற்றிலும் பரிசுத்த ஆவியானவரின் சித்தம்தான் என்று உன்னால் கூற முடியாது, ஏனென்றால் மனுஷன் பரிசுத்த ஆவியானவரால் மட்டுமே தெளிவு பெற முடியும், மேலும் அவன் பரிசுத்த ஆவியானவரால் முழுமையாக நிரம்பியிருக்கவும் முடியாது. மனுஷன் அனுபவிக்கக்கூடிய விஷயங்கள் அனைத்தும் சாதாரண மனுஷத்தன்மையின் எல்லைக்குள் இருக்கின்றன, மேலும் அவற்றால் சாதாரண மனுஷ மனதில் இருக்கும் எண்ணங்களின் வரம்பை மீற முடியாது. சத்தியத்தின் யதார்த்தத்திற்குள் ஜீவிக்க முடிந்தவர்கள் இந்த வரம்பிற்குள்தான் அனுபவிப்பார்கள். அவர்கள் சத்தியத்தை அனுபவிக்கும்போது, அது எப்போதும் பரிசுத்த ஆவியானவரால் தெளிவு பெற்ற சாதாரண மனுஷ ஜீவிதத்தின் அனுபவமாகவே இருக்கிறது; இது சாதாரண மனுஷ ஜீவிதத்திலிருந்து விலகிச் செல்லும் அனுபவமாக இருப்பதில்லை. தங்கள் மனுஷ ஜீவிதத்தை ஜீவிப்பதற்கான அஸ்திபாரத்தில் பரிசுத்த ஆவியானவரால் தெளிவாக்கப்பட்ட சத்தியத்தை அவர்கள் அனுபவிக்கிறார்கள். மேலும், இந்தச் சத்தியமானது நபருக்கு நபர் மாறுபடுகிறது, அதன் ஆழமானது அந்த நபரின் மனநிலையுடன் தொடர்புடையதாக இருக்கிறது. அவர்கள் நடந்துகொண்டிருக்கும் பாதையானது சத்தியத்தைப் பின்தொடரும் ஒருவரின் சாதாரண மனுஷ ஜீவிதம்தான் என்று உன்னால் சொல்ல மட்டுமே முடியும், மேலும் இது பரிசுத்த ஆவியானவரால் தெளிவு பெற்ற ஒரு சாதாரண மனுஷன் நடந்து சென்ற பாதை என்றும் அழைக்கப்படலாம். அவர்கள் நடந்து செல்லும் பாதையானது பரிசுத்த ஆவியானவர் நடந்து செல்லும் பாதைதான் என்று உன்னால் சொல்ல முடியாது. சாதாரண மனுஷ அனுபவத்தில், பின்பற்றுபவர்கள் ஒரே மாதிரியானவர்கள் இல்லை என்பதால், பரிசுத்த ஆவியானவரின் கிரியையும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. மேலும், ஜனங்கள் அனுபவிக்கும் சூழல்களும் அவர்களின் அனுபவத்தின் வரம்புகளும் ஒரே மாதிரியாக இல்லாததாலும், அவர்களின் மனம் மற்றும் எண்ணங்களின் கலவையின் காரணமாகவும், அவர்களின் அனுபவமானது வெவ்வேறு அளவுகளில் கலக்கப்படுகிறது. ஒவ்வொருவனும் வெவ்வேறு, தனிப்பட்ட நிலைமைகளுக்கு ஏற்ப ஒரு சத்தியத்தைப் புரிந்துகொள்கிறான். சத்தியத்தின் உண்மையான அர்த்தத்தைப் பற்றிய அவர்களின் புரிதல் முழுமையடையாமல் இருக்கிறது, மேலும் அது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அம்சங்களாக மட்டுமே இருக்கின்றன. ஒவ்வொரு மனுஷனின் நிபந்தனைகளுக்கு ஏற்ப மனுஷன் அனுபவிக்கும் சத்தியத்தின் நோக்கமானது ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது. இவ்வாறாக, வெவ்வேறு நபர்களால் வெளிப்படுத்தப்படும் ஒரே சத்தியத்தின் அறிவானது ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அதாவது, மனுஷனின் அனுபவமானது எப்போதுமே வரம்புகளைக் கொண்டிருக்கிறது, மேலும் அந்த அனுபவத்தால் பரிசுத்த ஆவியானவரின் சித்தத்தை முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. மனுஷனால் வெளிப்படுத்தப்படும் விஷயங்கள் தேவனின் சித்தத்திற்கு மிக நெருக்கமாக ஒத்திருந்தாலும் கூட, மேலும் மனுஷனின் அனுபவமானது பரிசுத்த ஆவியானவர் செய்யும் பரிபூரணமாக்கும் கிரியைக்கு மிக நெருக்கமாக இருந்தாலும் கூட மனுஷனின் கிரியையை தேவனின் கிரியையாக உணர்ந்துகொள்ள முடியாது. மனுஷன் தேவனின் ஊழியனாக மட்டுமே இருக்க முடியும், தேவன் அவனிடம் ஒப்படைக்கும் கிரியையைச் செய்யும் ஊழியனாக மட்டுமே அவனால் இருக்க முடியும். மனுஷனால் பரிசுத்த ஆவியானவரால் தெளிவுபடுத்தப்பட்ட அறிவையும் அவனது தனிப்பட்ட அனுபவங்களிலிருந்து பெறப்பட்ட சத்தியங்களையும் மட்டுமே வெளிப்படுத்த முடியும். மனுஷன் தகுதியற்றவன், பரிசுத்த ஆவியானவரை வெளிப்படுத்துபவனாக இருப்பதற்குத் தேவையான நிபந்தனைகளை அவன் பூர்த்தி செய்வதில்லை. அவனுடைய கிரியையானது தேவனின் கிரியை என்று சொல்ல அவனுக்கு உரிமை இல்லை. மனுஷனிடம், மனுஷனின் கிரியை செய்வதற்கான கொள்கைகள் இருக்கின்றன, மேலும் எல்லா மனுஷரும் வெவ்வேறு அனுபவங்களையும் மாறுபட்ட நிலைமைகளையும் கொண்டுள்ளனர். மனுஷனின் கிரியையில் பரிசுத்த ஆவியானவரின் தெளிவிற்குக் கீழ் இருக்கும் அவனது அனுபவங்கள் அனைத்தும் அடங்கியிருக்கின்றன. இந்த அனுபவங்களால் மனுஷன் இருப்பதை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்த முடியும், தேவன் இருப்பதை அல்லது பரிசுத்த ஆவியானவரின் சித்தத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. ஆகையால், மனுஷன் நடந்து செல்லும் பாதையானது பரிசுத்த ஆவியானவர் நடந்த பாதை என்று சொல்ல முடியாது, ஏனென்றால் மனுஷனின் கிரியையால் தேவனின் கிரியையைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது, மேலும் மனுஷனின் கிரியையும் அனுபவமும் பரிசுத்த ஆவியானவரின் முழுமையான சித்தமல்ல. மனுஷனின் கிரியையானது எளிதில் விதிகளுக்குள் சிக்கிக்கொள்கிறது, மேலும் அவனது கிரியையின் முறையானது எளிதில் ஒரு வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் மட்டுப்படுத்தப்படுகிறது, மேலும் அதனால் ஜனங்களை ஒரு சுதந்திரமான வழியில் அழைத்துச் செல்ல இயலாது. பின்பற்றும் பெரும்பாலானவர்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் ஜீவிக்கின்றனர், மேலும் அவர்கள் அனுபவிக்கும் முறையும் அதன் எல்லைக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மனுஷனின் அனுபவமானது எப்போதும் குறைவானதாகவே இருக்கிறது; அவனுடைய கிரியையின் முறையும் ஒரு சில வகைகளுக்கு என மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, அதனை பரிசுத்த ஆவியானவரின் கிரியை அல்லது தேவனின் கிரியையுடன் ஒப்பிட முடியாது. ஏனென்றால், மனுஷனின் அனுபவமானது இறுதியில் குறைவானதாகவே இருக்கிறது. தேவன் தமது கிரியையை எப்படிச் செய்தாலும், அது விதிகளுக்குக் கட்டுப்பட்டதாக இருப்பதில்லை; அது எவ்வாறாக செய்யப்பட்டாலும், அது ஒரேயொரு முறைக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதாக இருப்பதில்லை. தேவனின் கிரியைக்கு எந்த விதிகளும் இல்லை—அவருடைய எல்லா கிரியைகளும் விடுவிக்கப்பட்டு சுதந்திரமாக இருக்கின்றன. மனுஷன் அவரைப் பின்தொடர எவ்வளவு நேரம் செலவிட்டாலும், தேவன் கிரியை செய்யும் முறைகளை ஆளும் எந்த சட்டங்களையும் அவனால் வடிகட்டிட முடியாது. அவரது கிரியையானது கொள்கை ரீதியானது தான் என்றாலும், அது எப்போதும் புதிய வழிகளில் செய்யப்படுகிறது, எப்போதும் புதிய முன்னேற்றங்களைக் கொண்டிருக்கிறது, மேலும் அது மனுஷனின் கைகளுக்கு எட்டாததாகவும் இருக்கிறது. ஒரே காலகட்டத்தில், தேவனுக்குப் பல்வேறு வகையான கிரியைகள் மற்றும் ஜனங்களை வழிநடத்தும் வெவ்வேறு வழிகள் இருக்கலாம், இதன் மூலம் ஜனங்கள் எப்போதும் புதிய பிரவேசங்களையும் மாற்றங்களையும் கொண்டிருப்பார்கள். அவருடைய கிரியையின் சட்டங்களை உன்னால் புரிந்துகொள்ள முடியாது, ஏனென்றால் அவர் எப்போதும் புதிய வழிகளில் கிரியை செய்கிறார், இதனால் மட்டுமே தேவனைப் பின்பற்றுபவர்கள் விதிகளால் கட்டுப்படுத்தப்படுவதில்லை. தேவனின் கிரியையானது எப்போதுமே ஜனங்களின் கருத்துக்களைத் தவிர்த்து, அவற்றை எதிர்க்கிறது. உண்மையான இருதயத்தோடு தேவனைப் பின்பற்றுபவர்களால் மட்டுமே அவர்களின் மனநிலையை மாற்றியமைத்து சுதந்திரமாக வாழ முடியும், எந்தவொரு விதிகளுக்கும் உட்படுத்தப்படாமலும் அல்லது எந்த மதக் கருத்துக்களாலும் கட்டுப்படுத்தப்படாமலும் இருக்க முடியும். மனுஷனின் கிரியையானது அவனது சொந்த அனுபவத்தின் அடிப்படையிலும், அவனால் எதை அடைய முடியும் என்பதையும் அடிப்படையாகக் கொண்டு ஜனங்களுக்குக் கோரிக்கைகளை வைக்கிறது. இந்த கோரிக்கைகளின் தரமானது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வரையறுக்கப்பட்டதாக இருக்கிறது, மேலும் நடைமுறைக்கான வழிமுறைகளும் மிகவும் குறைவாகவே இருக்கின்றன. இவ்வாறு, பின்பற்றுபவர்கள் தங்களை அறியாமலேயே இந்த வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் ஜீவிக்கின்றனர்; காலம் செல்லச் செல்ல, இவை விதிகளாகவும் சடங்குகளாகவும் மாறுகின்றன. ஒரு காலகட்டத்தின் கிரியையானது தேவனின் தனிப்பட்ட பரிபூரணத்திற்கு உட்படுத்தப்படாத மற்றும் நியாயத்தீர்ப்பைப் பெறாத ஒருவனால் வழிநடத்தப்பட்டால், அவனைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் தேவனை எதிர்ப்பதில் மதவாதிகளாகவும் நிபுணர்களாகவும் மாறுவார்கள். எனவே, ஒருவன் ஒரு தகுதி வாய்ந்த தலைவராக இருந்தால், அவன் நியாயத்தீர்ப்புக்கு உட்பட்டு, பரிபூரணமடைவதை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். நியாயத்தீர்ப்புக்கு உட்படுத்தப்படாதவர்கள், பரிசுத்த ஆவியானவரின் கிரியையைக் கொண்டிருந்தாலும், தெளிவற்ற மற்றும் உண்மையற்ற விஷயங்களை மட்டுமே வெளிப்படுத்துகிறார்கள். காலப்போக்கில், அவர்கள் ஜனங்களை தெளிவற்ற மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட விதிகளுக்கு வழிநடத்திச் சென்றுவிடுவார்கள். தேவன் செய்யும் கிரியையானது மனுஷனின் மாம்சத்துடன் ஒத்துப்போவதில்லை. இது மனுஷனின் எண்ணங்களுடன் ஒத்துப்போவதில்லை, ஆனால் மனுஷனின் கருத்துக்களை எதிர்க்கிறது; இது தெளிவற்ற மதச் சாயங்களுடன் களங்கப்படுத்தப்படுவதும் இல்லை. தேவனுடைய கிரியையின் முடிவுகளை அவரால் பரிபூரணப்படுத்தப்படாத ஒருவனால் அடைய முடியாது; அவை மனுஷனின் சிந்தனைக்கு அப்பாற்பட்டவை.

மனுஷனின் மனதில் இருக்கும் கிரியையானது மனுஷனால் மிக எளிதில் அடையக்கூடியதாக இருக்கிறது. உதாரணமாக, மத உலகில் உள்ள போதகர்கள் மற்றும் தலைவர்கள் அனைவரும் தங்கள் கிரியையைச் செய்ய தங்களின் வரங்களையும் பதவிகளையும் நம்பியிருக்கிறார்கள். நீண்ட காலமாக அவர்களைப் பின்பற்றுபவர்கள் தங்கள் வரங்களால் பாதிக்கப்படுவார்கள், அவர்களில் சிலராலேயே ஆதிக்கம் செலுத்தப்படுவார்கள். அவர்கள் ஜனங்களின் வரங்கள், திறன்கள் மற்றும் அறிவில் கவனம் செலுத்துகிறார்கள், மேலும் அவர்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் மற்றும் பல ஆழமான, நம்பத்தகாத கோட்பாடுகளில் கவனம் செலுத்துகிறார்கள் (நிச்சயமாக, இந்த ஆழமான கோட்பாடுகள் அடைய முடியாதவை). அவர்கள் ஜனங்களின் மனநிலைகளில் ஏற்படும் மாற்றங்களில் கவனம் செலுத்துவதில்லை, மாறாக, பிரசங்கிக்கவும் கிரியை செய்யவும் ஜனங்களைப் பயிற்றுவிப்பதிலும், ஜனங்களின் அறிவையும் அவர்களின் ஏராளமான மதக் கோட்பாடுகளையும் மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறார்கள். ஜனங்களின் மனநிலை எவ்வளவு மாறியிருக்கிறது அல்லது ஜனங்கள் சத்தியத்தை எவ்வளவு புரிந்துகொள்கிறார்கள் என்பதில் அவர்கள் கவனம் செலுத்துவதில்லை. அவர்கள் ஜனங்களின் சாராம்சத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை, மேலும் ஜனங்களின் இயல்பான மற்றும் அசாதாரண நிலைகளை அறிந்து கொள்ள அவர்கள் முயற்சி செய்வதே இல்லை. அவர்கள் ஜனங்களின் கருத்துக்களை எதிர்ப்பதில்லை, அல்லது அவர்களின் கருத்துக்களை வெளிப்படுத்துவதும் இல்லை, அவர்கள் குறைபாடுகள் அல்லது சீர்கேடுகளுக்காக ஜனங்களை கிளை நறுக்குவதும் இல்லை. அவர்களைப் பின்பற்றுபவர்களில் பெரும்பாலோர் தங்கள் வரங்களைக் கொண்டு ஊழியம் செய்கிறார்கள், மேலும் அவர்கள் மதக் கருத்துக்களையும் இறையியல் கோட்பாடுகளையும் தான் வெளிப்படுத்துகிறார்கள், அவை யதார்த்தத்துடன் தொடர்பில்லாதவை, மேலும் அவற்றால் ஜனங்களுக்கு ஜீவிதத்தை முழுமையாக வழங்கவும் இயலாது. உண்மையில், அவர்களுடைய கிரியையின் சாராம்சமானது திறமையை வளர்ப்பது, ஒன்றுமில்லாதவனைப் பின்னர் அவன் பணிக்கு சென்று வழிநடத்தும் ஒருவனாக மாற்ற ஒரு திறமையான இறையியல் கல்லூரி பட்டதாரியாக வளர்ப்பது ஆகியவைதான். தேவனின் ஆறாயிரம் ஆண்டுக்காலக் கிரியைகளில் இருக்கும் ஏதேனும் சட்டங்களை நீ அறிவாயா? மனுஷன் செய்யும் கிரியையில் பல விதிகளும் கட்டுப்பாடுகளும் உள்ளன, மேலும் மனுஷ மூளை மிகவும் இறுமாப்புள்ளதாக இருக்கிறது. ஆகவே, மனுஷன் வெளிப்படுத்துவது அவனது அனுபவத்தின் எல்லைக்குள் இருக்கும் அறிவு மற்றும் புரிதலாகவே இருக்கிறது. இதைத் தவிர மனுஷனால் எதையும் வெளிப்படுத்த முடிவதில்லை. மனுஷனின் அனுபவங்கள் அல்லது அறிவானது அவனது உள்ளார்ந்த வரங்களிலிருந்தோ அல்லது அவனது உள்ளுணர்விலிருந்தோ எழுவதில்லை; அவை தேவனின் வழிகாட்டுதல் மற்றும் நேரடி வழிநடத்துதல் காரணமாக எழுகின்றன. இந்த வழிநடத்துதலை ஏற்றுக்கொள்ளும் மனத்திறன் மட்டுமே மனுஷனிடம் இருக்கிறது, ஆனால் தெய்வீகத்தன்மை என்பது என்ன என்பதை நேரடியாக வெளிப்படுத்தக்கூடிய எந்த மனத்திறனும் இல்லை. மனுஷனால் ஊற்றாக இருக்க முடியாது; அவனால் ஊற்றிலிருந்து வரும் தண்ணீரை ஏற்றுக்கொள்ளும் ஒரு பாத்திரமாக மட்டுமே இருக்க முடியும். இதுவே மனுஷனின் உள்ளுணர்வு ஆகும், ஒரு மனுஷனாக இருக்க வேண்டியவனிடம் இருக்கக்கூடிய மனத்திறன் இதுதான். தேவனின் வார்த்தையை ஏற்றுக்கொள்ளும் மனத்திறனை மனுஷன் இழந்து, உள்ளுணர்வையும் இழந்தால், அவன் மிகவும் விலையேறப்பெற்றதை இழந்து, சிருஷ்டிக்கப்பட்ட மனுஷனின் கடமையையும் இழக்கிறான். ஒருவன் தேவனின் வார்த்தையையோ அல்லது அவரது கிரியையையோ அறிந்திருக்கவில்லை அல்லது அதைப்பற்றிய அனுபவம் அவனுக்கு இல்லை என்றால், அவன் தனது கடமையை இழக்கிறான், அது ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனாக அவன் செய்ய வேண்டிய கடமை, மேலும் அவன் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு ஜீவன் என்ற மேன்மையையும் இழக்கிறான். தெய்வீகம் என்றால் என்ன என்பதை வெளிப்படுத்துவது தேவனின் உள்ளுணர்வாக இருக்கிறது, இது மாம்சத்தில் வெளிப்படுத்தப்பட்டாலும் அல்லது நேரடியாக ஆவியானவரால் வெளிப்படுத்தப்பட்டாலும்; இது தேவனின் ஊழியம்தான். மனுஷன் தேவனின் கிரியையின் போது அல்லது அதற்குப் பிறகு தனது சொந்த அனுபவங்களை அல்லது அறிவை வெளிப்படுத்துகிறான் (அதாவது, அவன் யார் என்பதை வெளிப்படுத்துகிறான்); இதுவே மனுஷனின் உள்ளுணர்வும் கடமையுமாகும், மேலும் மனுஷன் அடைய வேண்டியதும் இதுதான். மனுஷனின் வெளிப்பாடு தேவன் வெளிப்படுத்துவதை விட மிகக் குறைவுதான் என்றாலும், மனுஷனின் வெளிப்பாடு பல விதிகளுக்குக் கட்டுப்பட்டிருந்தாலும், மனுஷனானவன் அவன் நிறைவேற்ற வேண்டிய கடமையை நிறைவேற்ற வேண்டும், மேலும் அவன் செய்ய வேண்டியதை செய்ய வேண்டும். மனுஷன் தன் கடமையை நிறைவேற்ற தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும், அவனுக்குச் சிறிதளவு தயக்கமும் இருக்கக்கூடாது.

பல ஆண்டுகளாக கிரியை செய்த பிறகு, மனுஷன் தனது பல வருட கிரியையின் அனுபவத்தையும், அவன் சேகரித்து வைத்திருக்கும் ஞானத்தையும் விதிகளையும் சுருக்கமாகக் கூறுவான். நீண்ட காலமாக கிரியை செய்தவனுக்கு பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் ஏவுதலை எவ்வாறு உணர முடியும் என்பது தெரியும்; பரிசுத்த ஆவியானவர் எப்போது கிரியை செய்கிறார், எப்போது கிரியை செய்வதில்லை என்பதை அவன் அறிவான்; ஆத்துமபாரம் கொண்டிருக்கும்போது எப்படிப் பேசுவது என்று அவனுக்குத் தெரியும்; பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் இயல்பான நிலை மற்றும் ஜீவிதத்தில் ஜனங்களுடைய வளர்ச்சியின் சாதாரண நிலை குறித்து அவன் அறிந்திருக்கிறான். அத்தகைய நபர் பல ஆண்டுகளாக கிரியை செய்து பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அறிந்திருக்கிறான். நீண்ட காலமாக கிரியை செய்தவர்கள் உறுதியாகவும், நிதானமாகவும் பேசுகிறார்கள்; அவர்களுக்குப் பேச எதுவும் இல்லாதபோதும் கூட, அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். தங்களுக்குள், அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைத் தேட தொடர்ந்து ஜெபிக்க முடியும். அவர்கள் கிரியை செய்வதில் அனுபவம் வாய்ந்தவர்கள். நீண்ட காலமாகக் கிரியை செய்த, அதிக அனுபவமுள்ள மற்றும் பல பாடங்களைக் கற்றுக் கொண்ட ஒருவன், பரிசுத்த ஆவியானவரின் கிரியையைத் தடுக்கும் அளவுக்கு தனக்குள் விஷயங்களைக் கொண்டிருக்கிறான்; இது அவனது நீண்டகாலக் கிரியையின் குறைபாடாக இருக்கிறது. இப்போது கிரியை செய்யத் தொடங்கியவன் மனுஷ படிப்பினைகள் அல்லது அனுபவத்தால் கலப்படமற்றவனாக இருக்கிறான், குறிப்பாக பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு கிரியை செய்கிறார் என்பது குறித்துத் தெரியாமல் இருக்கிறான். இருப்பினும், கிரியையின் போது, பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு கிரியை செய்கிறார் என்பதை எப்படி உணரவேண்டும் என்பதைப் படிப்படியாகக் கற்றுக்கொள்கிறான், மேலும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும், மற்றவர்களின் பெலவீனத்தை சரியாகத் தாக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும், மற்றும் கிரியை செய்பவர்கள் வைத்திருக்க வேண்டிய பிற பொதுவான அறிவையும் அறிந்துகொள்கிறான். காலப்போக்கில், அவன் தனது கையின் பின்புறத்தை அறிந்துகொள்வது போல அத்தகைய ஞானத்தையும், கிரியை செய்வதற்கான பொதுவான அறிவையும் அறிந்துகொள்கிறான், மேலும் அவன் கிரியை செய்யும் போது அவற்றை எளிதாகப் பயன்படுத்துவதாகத் தெரிகிறது. இருப்பினும், பரிசுத்த ஆவியானவர் தாம் கிரியை செய்யும் முறையை மாற்றும்போது, அவன் தனது பழைய கிரியையின் அறிவையும் பழைய கிரியையின் விதிகளையும் கடைப்பிடிக்கிறான், மேலும் கிரியையின் புதிய வல்லமைகள் பற்றி மிகக் குறைவாகவே அறிந்திருக்கிறான். பரிசுத்த ஆவியானவரின் பல வருட கிரியையும் அவரது பிரசன்னமும் வழிகாட்டுதல்களும் நிறைந்திருப்பது அவனுக்கு கிரியையைப் பற்றிய கூடுதல் படிப்பினைகளையும் அதிக அனுபவத்தையும் தருகிறது. இதுபோன்ற விஷயங்கள் பெருமை இல்லாத தன்னம்பிக்கையால் அவனை நிரப்புகின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பற்றி அவன் பெற்றுள்ள பொதுவான அறிவால் அவன் தனது சொந்தக் கிரியை மற்றும் உள்ளடக்கத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறான். குறிப்பாக, மற்றவர்கள் பெறாத அந்த விஷயங்களைப் பெற்றுக் கொண்டாலோ அல்லது உணர்ந்தாலோ அது அவனுக்கு இன்னும் அதிக நம்பிக்கையைத் தருகிறது; அவனுக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை ஒருபோதும் அணைக்க முடியாது என்று தெரிகிறது, அதே நேரத்தில் மற்றவர்கள் இந்தச் சிறப்பு உபசரிப்புக்குத் தகுதி பெற்றிருக்கவில்லை. அவனைப் போன்ற ஜனங்கள், அதாவது பல ஆண்டுகளாகக் கிரியை செய்தவர்கள் மற்றும் அவர்களைப் பயன்படுத்துவது கணிசமான மதிப்பை தரும் என்பவர்கள் மட்டுமே அதை அனுபவிக்க தகுதியுடையவர்கள் ஆகிறார்கள். பரிசுத்த ஆவியானவரின் புதிய கிரியையை அவன் ஏற்றுக்கொள்வதற்கு இந்த விஷயங்கள் பெரும் தடையாக இருக்கின்றன. புதிய கிரியையை அவனால் ஏற்றுக்கொள்ள முடிந்தாலும், ஒரே இரவில் அவனால் அவ்வாறு செய்ய முடியாது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு அவன் பல திருப்பங்களைக் கடந்து செல்வான் என்பது உறுதி. இந்த நிலைமையை அவனுடைய பழைய கருத்துக்கள் தீர்க்கப்பட்டு, அவனது பழைய மனநிலை நியாயந்தீர்க்கப்பட்டப் பிறகு படிப்படியாகத்தான் மாற்றியமைக்க முடியும். இந்த படிகளுக்கு உள்ளாகாமல் அவன் தனது பழைய கருத்துக்களுடன் ஒத்துப்போகாத புதிய போதனைகளையும், கிரியைகளையும் எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டான். மனுஷனுடன் சமாளிக்க வேண்டிய விஷயங்களில் இது மிகவும் கடினமான விஷயமாக இருக்கிறது, மேலும் அதை மாற்றுவதும் எளிதல்ல. ஓர் ஊழியக்காரன் என்ற முறையில், அவன் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பற்றிய புரிதலை அடையவும், அதன் வல்லமையைச் சுருக்கமாகவும் அறிந்து கொள்ள முடிந்தால், மற்றும் அவன் தனது கிரியைக்கான அனுபவங்களால் கட்டுப்படுத்தப்படாமலும், அவனால் பழைய கிரியையின் வெளிச்சத்தில் புதிய கிரியையை ஏற்றுக் கொள்ளவும் முடிந்தால், அவன்தான் புத்திசாலியான மனுஷன், தகுதியான ஊழியக்காரன். ஜனங்கள் பெரும்பாலும் இதுபோன்றவர்கள் தான்: அவர்கள் பல ஆண்டுகளாகத் தங்கள் கிரியையின் அனுபவத்தைச் சுருக்கமாகக் கூற முடியாமல் கிரியை செய்கிறார்கள், அல்லது, கிரியை பற்றிய அவர்களின் அனுபவத்தையும் ஞானத்தையும் சுருக்கமாகக் கூறிய பின்னர், அவர்கள் புதிய கிரியையை ஏற்றுக்கொள்வதில் தடை ஏற்படுகிறது, மேலும் அவர்களால் பழைய மற்றும் புதிய கிரியைகளைச் சரியாகப் புரிந்து கொள்ளவோ அல்லது சரியாக நடத்தவோ முடிவதில்லை. ஜனங்களைக் கையாளுவது என்பது மிகவும் கடினமான விஷயம்! உங்களில் பெரும்பாலோர் இது போன்றவர்கள்தான். பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பல ஆண்டுகளாக அனுபவித்தவர்களால் புதிய கிரியையை ஏற்றுக்கொள்வது கடினமாக இருக்கிறது, மேலும் அவர்கள் எப்போதும் ஒதுக்கி வைக்க முடியாத கருத்துக்கள் நிறைந்தவர்களாகவும் இருக்கிறார்கள், அதே நேரத்தில் கிரியை செய்யத் தொடங்கிய ஒரு மனுஷனுக்கு கிரியை குறித்தப் பொதுவான அறிவு இருப்பதில்லை, சில எளிய விஷயங்களை எவ்வாறு கையாள்வது என்று கூடத் தெரிவதில்லை. ஜனங்களாகிய நீங்கள் மிகவும் கடினமானவர்கள்! அனுபவத்தில் மூத்தவர்கள் சிலர் மிகவும் பெருமிதம் கொள்கிறார்கள், மேலும் அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதையும் மறந்துவிட்டிருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் இளையவர்களை இழிவாகப் பார்க்கிறார்கள், ஆனாலும் அவர்களால் புதிய கிரியையை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை, மேலும் பல ஆண்டுகளாக அவர்கள் சேகரித்து வைத்திருக்கும் கருத்துக்களையும் விட்டுவிட முடிவதில்லை. அந்த இளமையான அறிவற்ற ஜனங்கள் பரிசுத்த ஆவியானவரின் புதிய கிரியையை கொஞ்சம் ஏற்றுக் கொள்ள முடிந்து, அதை எண்ணி மிகவும் உற்சாகமாக இருந்தாலும் கூட, அவர்கள் எப்போதும் குழப்பமடைந்து, பிரச்சினைகள் ஏற்படும் போது என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறார்கள். அவர்கள் உற்சாகமானவர்கள் தான், ஆனால் அறிவற்றவர்களாக இருக்கிறார்கள். பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பற்றி அவர்களுக்குச் சிறிதளவு அறிவு மட்டுமே இருக்கிறது, மேலும் அவர்களால் அதை அவர்களின் ஜீவிதங்களில் பயன்படுத்த முடிவதில்லை; இது முற்றிலும் பயனற்ற ஒரு கோட்பாடாக இருக்கிறது. உங்களைப் போன்றவர்கள் பலர் இருக்கின்றனர்; உங்களில் எத்தனை பேர் பயன்படுத்த ஏற்றவர்கள்? பரிசுத்த ஆவியானவரின் தெளிவு மற்றும் வெளிச்சத்திற்குக் கீழ்ப்படிந்து தேவனின் சித்தத்திற்கு இணங்க நிர்வகிக்கக்கூடியவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? உங்களில் தற்போதுவரை பின்பற்றுபவர்களாக இருப்பவர்கள் மிகவும் கீழ்ப்படிதலுள்ளவர்களாகத் தெரிகிறார்கள், ஆனால் உண்மையில் நீங்கள் உங்கள் கருத்துக்களை விட்டுவிடவில்லை, நீங்கள் இன்னும் வேதாகமத்தில் தேடுகிறீர்கள், தெளிவற்ற தன்மையை விசுவாசிக்கிறீர்கள், அல்லது கருத்துக்களில் அலைந்து திரிகிறீர்கள். இன்றைக்கான உண்மையான கிரியையைக் கவனமாக ஆராய்பவர்கள் அல்லது அதற்குள் ஆழமாகச் செல்பவர்கள் என்று யாரும் இல்லை. உங்கள் பழைய கருத்துகளுடன் இன்றைய வழியை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள். அத்தகைய நம்பிக்கையுடன் உங்களால் எதைப் பெற முடியும்? உங்களுக்குள் வெளிப்படுத்தப்படாத பல கருத்துக்கள் மறைக்கப்பட்டுள்ளன என்றும், அவற்றை எளிதில் வெளிப்படுத்தாமல், அவற்றை மறைக்க நீங்கள் வெறுமனே அதிகபட்ச முயற்சி செய்கிறீர்கள் என்றும் கூறலாம். நீங்கள் புதிய கிரியையை நேர்மையாக ஏற்பதில்லை, உங்கள் பழைய கருத்துக்களை விட்டுவிடவும் நீங்கள் திட்டமிடுவதில்லை; ஜீவிப்பதற்கான பல தத்துவங்கள் உங்களிடம் இருக்கின்றன, அவை மிகவும் கணிசமாக இருக்கின்றன. நீங்கள் உங்கள் பழைய கருத்துக்களை விட்டுவிடவில்லை, மேலும் புதிய கிரியையை நீங்கள் தயக்கத்துடன் கையாளுகிறீர்கள். உங்கள் இருதயங்கள் மிகவும் மோசமானதாக இருக்கின்றன, மேலும் நீங்கள் புதிய கிரியையின் படிகளை இருதயத்தில் ஏற்றுக்கொள்வதில்லை. உங்களைப் போன்ற கழிவுகளால் சுவிசேஷத்தைப் பரப்புவதற்கான கிரியையைச் செய்ய முடியுமா? அதை முழு பிரபஞ்சத்திற்கும் பரப்பும் கிரியையை உங்களால் மேற்கொள்ள முடியுமா? உங்களுடைய இந்த நடைமுறைகள் உங்கள் மனநிலையை மாற்றுவதற்கும் தேவனை அறிவதிலிருந்தும் உங்களைத் தடுக்கின்றன. நீங்கள் இவ்வாறு தொடர்ந்தால், நீங்கள் புறம்பாக்கப்படுவீர்கள்.

தேவனின் கிரியையை மனுஷனின் கிரியையிலிருந்து எவ்வாறு வேறுபடுத்துவது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். மனுஷனின் கிரியையில் உன்னால் என்ன பார்க்க முடியும்? மனுஷனின் கிரியையில் அவனது அனுபவத்தின் பல கூறுகள் இருக்கின்றன; மனுஷன் அவன் என்னவாக இருக்கிறான் என்பதைத்தான் வெளிப்படுத்துகிறான். தேவனின் சொந்தக் கிரியையும் அவர் என்னவாக இருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது, ஆனால் அவரது இருப்புநிலையானது மனுஷனிடமிருந்து வேறுபட்டதாக இருக்கிறது. மனுஷனின் இருப்புநிலையானது அவனது அனுபவத்தையும் ஜீவிதத்தையும் குறிக்கிறது (மனுஷன் தனது ஜீவிதத்தில் என்ன அனுபவிக்கிறான் அல்லது எதை எதிர்கொள்கிறான், அல்லது அவனிடமிருக்கும் ஜீவிப்பதற்கான தத்துவங்கள் ஆகியவை), மேலும் வெவ்வேறு சூழல்களில் வாழும் ஜனங்கள் வெவ்வேறு இருப்புநிலைகளை வெளிப்படுத்துகிறார்கள். நீ சமுதாயத்தின் அனுபவங்களைக் கொண்டிருக்கிறாயா, நீ உனது குடும்பத்தில் உண்மையில் எப்படி ஜீவிக்கிறாய் என்பதையும் அதற்குள் இருக்கும் அனுபவத்தையும் நீ வெளிப்படுத்தியவற்றில் காணலாம், அதேசமயம் உன்னால் தேவனின் கிரியையில் மாம்சமாகிய தேவனுக்கு சமூக அனுபவங்கள் உள்ளதா என்பதையும் பார்க்க முடியாது. மனுஷனின் சாராம்சத்தை அவர் நன்கு அறிவார், மேலும் அனைத்து வகையான ஜனங்களுக்கும் தொடர்புடைய அனைத்து வகையான நடைமுறைகளையும் அவரால் வெளிப்படுத்த முடியும். மனுஷரின் சீர்கெட்ட மனநிலையையும் கலகத்தனமான நடத்தையையும் வெளிப்படுத்துவதில் அவர் இன்னும் சிறந்தவராக இருக்கிறார். அவர் உலக ஜனங்களிடையே ஜீவிக்கவில்லை என்றாலும், மனுஷரின் சுபாவம் மற்றும் உலக ஜனங்கள் அனைவரின் சீர்கேடுகளையும் அவர் அறிந்திருக்கிறார். இதுவே அவருடைய இருப்புநிலை ஆகும். அவர் உலகத்தைக் கையாள்வதில்லை என்றாலும், உலகத்தைக் கையாள்வதற்கான விதிகளை அவர் அறிந்திருக்கிறார், ஏனென்றால் அவர் மனுஷ சுபாவங்களை முழுமையாகப் புரிந்துகொள்கிறார். இன்றைய மற்றும் கடந்த காலங்களில் மனுஷனின் கண்களால் பார்க்க முடியாத மற்றும் மனுஷனின் செவிகளால் கேட்க முடியாத ஆவியானவரின் கிரியையைப் பற்றி அவர் அறிந்திருக்கிறார். இதில் ஜீவிப்பதற்கான தத்துவம் அல்லாத ஞானமும், ஜனங்கள் புரிந்துகொள்ள கடினமாக இருக்கும் அதிசயங்களும் அடங்கும். இதுதான் அவருடைய இருப்புநிலை, ஜனங்களுக்குத் தெரியும்படியும் இருக்கிறது, ஜனங்களிடமிருந்து மறைக்கப்பட்டும் இருக்கிறது. அவர் வெளிப்படுத்தும் விஷயங்களானது ஒரு அசாதாரண நபர் வெளிப்படுத்தும் விஷயங்களாக இருப்பது இல்லை, ஆனால் உள்ளார்ந்த பண்புகள் கொண்ட ஆவியானவர் வெளிப்படுத்தும் விஷயங்களாக இருக்கின்றன. அவர் உலகில் பயணம் செய்வதில்லை, ஆனாலும் அவை எல்லாவற்றையும் அவர் அறிந்திருக்கிறார். அவர் அறிவு அல்லது நுண்ணறிவு இல்லாத “மனுஷக்குரங்கினங்களை” தொடர்பு கொள்கிறார், ஆனால் அறிவை விட உயர்ந்த மற்றும் பெரிய மனுஷருக்கு மேலான வார்த்தைகளை அவர் வெளிப்படுத்துகிறார். அவர் மனுஷத்தன்மை இல்லாத மற்றும் மனுஷகுலத்தின் மரபுகளையும் ஜீவிதத்தையும் புரிந்து கொள்ளாத ஒரு குழப்பமான மற்றும் உணர்ச்சியற்ற ஜனக்கூட்டத்திற்குள் ஜீவிக்கிறார், ஆனால் அவரால் சாதாரண மனுஷத்தன்மையில் ஜீவிக்குமாறு மனுஷகுலத்தை கேட்டுக்கொள்ள முடியும், அதே நேரத்தில் மனுஷத்தன்மையின் அடிப்படையையும் அதன் இழிவான தன்மையையும் அவர் வெளிப்படுத்துகிறார். இவை அனைத்தும் அவருடைய இருப்புநிலை தான், இவை மாம்சத்தாலும் இரத்தத்தாலுமான நபரின் இருப்புநிலையை விட உயர்ந்ததாக இருக்கிறது. அவரைப் பொறுத்தவரை, அவர் செய்ய வேண்டிய கிரியையைச் செய்யவும் மற்றும் சீர்கெட்ட மனுஷகுலத்தின் சாராம்சத்தை முழுமையாக வெளிப்படுத்தவும் சிக்கலான, தொந்தரவான, மோசமான சமூக ஜீவிதத்தை அனுபவிப்பது தேவையற்றதாக இருக்கிறது. ஒரு மோசமான சமூக ஜீவிதமானது அவருடைய மாம்சத்தை மேம்படுத்துவதில்லை. அவரது கிரியையும் வார்த்தைகளும் மனுஷனின் கீழ்ப்படியாமையை மட்டுமே வெளிப்படுத்துகின்றன, மேலும் அவை மனுஷனுக்கு உலகத்தைக் கையாள்வதற்கான அனுபவத்தையும் பாடங்களையும் வழங்குவதில்லை. அவர் மனுஷனுக்கு ஜீவனை வழங்கும்போது சமூகம் அல்லது மனுஷனின் குடும்பத்தை ஆராயத் தேவையில்லை. மனுஷனை வெளிப்படுத்துவதும் நியாயத்தீர்ப்பளிப்பதும் அவருடைய மாம்சத்தின் அனுபவங்களின் வெளிப்பாடாக இருப்பதில்லை; நீண்ட காலமாக மனுஷனின் கீழ்ப்படியாமையை அறிந்த பின்பும், மனுஷகுலத்தின் சீர்கேட்டை வெறுத்த பின்பும் மனுஷனின் அநீதியை அவர் வெளிப்படுத்துவதே அவரது வெளிப்பாடாக இருக்கிறது. அவர் செய்யும் கிரியையானது மனுஷனுக்கு அவருடைய மனநிலையை வெளிப்படுத்துவதற்கும் அவருடைய இருப்புநிலையை வெளிப்படுத்துவதற்குமே செய்யப்படுகிறது. அவரால் மட்டுமே இந்த கிரியையைச் செய்ய முடியும்; இது மாம்சத்தாலும் இரத்தத்தாலுமான நபர் அடையக்கூடிய ஒன்று இல்லை. தேவனின் கிரியையிலிருந்து, அவர் எந்த வகையான நபர் என்று மனுஷனால் சொல்ல முடியாது. அவரது கிரியையின் அடிப்படையில் அவர் ஒரு சிருஷ்டிக்கப்பட்ட நபர் என்று மனுஷனால் வகைப்படுத்தவும் முடியாது. அவரது இருப்புநிலையானது ஒரு சிருஷ்டிக்கப்பட்ட நபராக அவரை வகைப்படுத்த முடியாததாக ஆக்குகிறது. மனுஷனால் அவரை மனுஷனல்லாத ஒருவராக மட்டுமே கருத முடியும், ஆனால் அவரை எந்தப் பிரிவில் வைக்க வேண்டும் என்று அவனுக்குத் தெரிவதில்லை, எனவே மனுஷன் அவரை தேவனின் பிரிவில் பட்டியலிட நிர்பந்திக்கப்படுகிறான். மனுஷன் அவ்வாறு செய்வது நியாயமற்றதாக இல்லை, ஏனென்றால் மனுஷனால் செய்ய முடியாத அளவுக்கு தேவன் ஜனங்களிடையே அதிகக் கிரியை செய்திருக்கிறார்.

தேவன் செய்யும் கிரியையானது அவருடைய மாம்சத்தினுடைய அனுபவத்தின் பிரதிநிதியாக இருப்பதில்லை; மனுஷன் செய்யும் கிரியையானது அவனது அனுபவத்தின் பிரதிநிதியாக இருக்கிறது. எல்லோரும் தங்கள் தனிப்பட்ட அனுபவத்தைப் பற்றி பேசுகிறார்கள். தேவனால் சத்தியத்தை நேரடியாக வெளிப்படுத்த முடியும், அதே சமயம் மனுஷனால் சத்தியத்தை அனுபவித்ததற்கு ஒத்த அனுபவத்தை மட்டுமே வெளிப்படுத்த முடியும். தேவனின் கிரியைக்கு எந்த விதிகளும் இல்லை, மேலும் அந்தக் கிரியையானது காலம் அல்லது நிலம் ஏற்படுத்தும் தடைகளுக்கு உட்பட்டதாக இல்லை. அவர் என்னவாக இருக்கிறார் என்பதை அவரால் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் வெளிப்படுத்த முடியும். அவர் விரும்பியபடி கிரியை செய்கிறார். மனுஷனின் கிரியைக்கு நிபந்தனைகளும் சூழலும் இருக்கின்றன; அவை இல்லாமல், அவனால் கிரியை செய்ய இயலாது மற்றும் தேவனைப் பற்றிய அவனது அறிவை அல்லது சத்தியத்தின் அனுபவத்தை அவனால் வெளிப்படுத்த முடியாது. ஒரு விஷயத்தை தேவனின் கிரியை என்றோ அல்லது மனுஷனின் கிரியை என்றோ சொல்ல, இரண்டிற்கும் இடையிலான வேறுபாடுகளை நீ ஒப்பிட வேண்டும். தேவனால் செய்யப்பட்ட எந்தக் கிரியையும் இல்லை, மனுஷனின் கிரியை மட்டுமே இருக்கிறது எனில், மனுஷனின் போதனைகள்தான் உயர்ந்தவை என்றும், அவை வேறு யாருடைய திறனுக்கும் அப்பாற்பட்டவை என்றும் நீ வெறுமனே அறிந்து கொள்ளுவாய்; அவர்கள் பேசும் தொனிகளும், விஷயங்களைக் கையாள்வதில் அவர்களின் கொள்கைகளும், கிரியை செய்யும் அனுபவமும் நிலையான முறையும் மற்றவர்களுக்கு எட்டாதவையாக இருக்கின்றன. நல்ல திறமை வாய்ந்த மற்றும் உயர்ந்த அறிவைக் கொண்ட இந்த ஜனங்களை நீங்கள் அனைவரும் பாராட்டுகிறீர்கள், ஆனால் தேவனின் கிரியை மற்றும் வார்த்தைகளிலிருந்து அவருடைய மனுஷத்தன்மையானது எவ்வளவு உயர்ந்தது என்பதை உன்னால் பார்க்க முடியாது. அதற்குப் பதிலாக, அவர் சாதாரணமானவராக இருக்கிறார், கிரியை செய்யும் போது அவர் இயல்பானவராகவும், உண்மையானவராகவும் இருந்தாலும் மனுஷரால் அளவிடமுடியாதவராக இருக்கிறார், ஆகவே அந்த விஷயமானது ஜனங்களை அவர்மீது ஒருவித பயபக்திகொள்ள வைக்கிறது. ஒரு நபரின் கிரியையில் அவனது அனுபவமானது குறிப்பாக மேம்பட்டதாக இருக்கலாம், அல்லது அவனது கற்பனையும் பகுத்தறிவும் குறிப்பாக மேம்பட்டதாக இருக்கலாம், மேலும் அவனது மனுஷத்தன்மையும் குறிப்பாக நல்லதாக இருக்கலாம்; இத்தகைய பண்புக்கூறுகளால் ஜனங்களின் போற்றுதலைத்தான் பெற முடியும், ஆனால் அவர்களின் பிரமிப்பையும் பயத்தையும் தூண்டாது. நன்றாகக் கிரியை செய்யக்கூடியவர்களையும், குறிப்பாக ஆழ்ந்த அனுபவமுள்ளவர்களையும், சத்தியத்தைக் கடைப்பிடிக்கக்கூடியவர்களையும் ஜனங்கள் அனைவரும் போற்றுகிறார்கள், ஆனால் அத்தகையவர்களால் ஒருபோதும் பயபக்தியை வெளிப்படுத்த முடியாது, போற்றுதலையும் பொறாமையையும் மட்டுமே வெளிப்படுத்த முடியும். ஆனால் தேவனின் கிரியையை அனுபவித்தவர்கள் தேவனைப் போற்றுவதில்லை; அதற்குப் பதிலாக, அவருடைய கிரியையானது மனுஷனுக்கு அப்பாற்பட்டது என்றும், மனுஷனுக்குப் புரியாதது என்றும், அது புதியது மற்றும் அற்புதமானது என்றும் அவர்கள் உணர்கிறார்கள். தேவனின் கிரியையை ஜனங்கள் அனுபவிக்கும் போது, அவரைப் பற்றி முதலில் தோன்றுவது என்னவென்றால், அவர் புரிந்துகொள்ளமுடியாதவர், ஞானமுள்ளவர் மற்றும் அற்புதமானவர் என்பவைதான், மேலும் அவர்கள் அறியாமலே அவரை வணங்குகிறார்கள், அவர் செய்யும் கிரியையின் இரகசியத்தை உணர்கிறார்கள், இது மனுஷனின் மனதிற்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. அவருடைய தேவைகளைப் பூர்த்தி செய்யவும், அவருடைய விருப்பங்களைப் பூர்த்தி செய்யவும் மட்டுமே ஜனங்கள் விரும்புகிறார்கள்; அவர்கள் அவரை மிஞ்ச விரும்புவதில்லை, ஏனென்றால் அவர் செய்யும் கிரியையானது மனுஷனின் சிந்தனைக்கும் கற்பனைக்கும் அப்பாற்பட்டதாக இருக்கிறது, அவருக்குப் பதிலாக மனுஷனால் அதைச் செய்ய முடியாது. மனுஷனுக்குக் கூட தனது குறைபாடுகள் தெரியாது, ஆனாலும் தேவன் ஒரு புதிய பாதையை உருவாக்கி, மனுஷனை ஒரு புதிய மற்றும் அழகான உலகிற்குக் கொண்டு வர வந்திருக்கிறார், எனவே மனுஷகுலமானது புதிய முன்னேற்றத்தை அடைந்து ஒரு புதிய தொடக்கத்தைத் தொடங்கியுள்ளது. தேவனைப் பற்றி ஜனங்கள் உணருவது போற்றுதல் இல்லை, அல்லது அதற்கு மாறாக அது போற்றுதல் மட்டுமில்லை. பயபக்தியும் அன்பும் அவர்களின் ஆழ்ந்த அனுபவங்களாக இருக்கின்றன; தேவன் உண்மையில் அற்புதமானவர் என்பது அவர்களின் உணர்வாக இருக்கிறது. மனுஷனால் செய்ய முடியாத கிரியையை அவர் செய்கிறார், மனுஷனால் சொல்ல முடியாத விஷயங்களை அவர் சொல்கிறார். தேவனின் கிரியையை அனுபவித்தவர்களுக்கு எப்போதும் விவரிக்க முடியாத உணர்வு இருக்கும். ஆழ்ந்த அனுபவமுள்ளவர்களால் தேவனின் அன்பைப் புரிந்து கொள்ள முடிகிறது; அவருடைய சௌந்தரியத்தை அவர்களால் உணரமுடிகிறது, அவருடைய கிரியையானது மிகவும் ஞானமானது என்பதையும், மிகவும் அற்புதமானது என்பதையும், அதன் மூலம் எல்லையற்ற வல்லமையானது அவர்கள் மத்தியில் உருவாகிறது என்பதையும் அவர்களால் உணர முடிகிறது. இது பயமோ அல்லது அவ்வப்போது வெளிப்படும் அன்பு மற்றும் மரியாதையோ இல்லை, ஆனால் மனுஷனுக்கான தேவனுடைய இரக்கத்தின் ஆழமான மற்றும் அவனைச் சகித்துக்கொள்ளும் உணர்வு ஆகும். இருப்பினும், அவருடைய சிட்சையையும் நியாயத்தீர்ப்பையும் அனுபவித்த ஜனங்கள் அவருடைய மகத்துவத்தையும் அவர் எந்தக் குற்றத்தையும் பொறுத்துக்கொள்ள மாட்டார் என்பதையும் உணர்கிறார்கள். அவருடைய கிரியையின் பெரும்பகுதியை அனுபவித்தவர்களால் கூட அவரைப் புரிந்து கொள்ள முடிவதில்லை; அவரை உண்மையிலேயே வணங்கும் அனைவருக்கும் அவருடைய கிரியையானது ஜனங்களின் கருத்துக்களுக்கு ஏற்ப இருப்பதில்லை என்பதையும், ஆனால் எப்போதும் அவர்களின் கருத்துக்களுக்கு எதிராக இருக்கிறது என்பதையும் அறிவார்கள். ஜனங்கள் அவரை முழுமையாகப் போற்றவேண்டும் என்பதையோ அல்லது அவருக்கு அடிபணிந்த தோற்றத்தை முன்வைக்க வேண்டும் என்பதையோ அவர் எதிர்பார்க்கவில்லை; மாறாக, அவர்கள் உண்மையான பயபக்தியையும் உண்மையான கீழ்ப்படிதலையும் அடைய வேண்டும் என்பதையே எதிர்பார்க்கிறார். அவருடைய கிரியையில் அதிகபட்சமாக, உண்மையான அனுபவமுள்ள எவரும் அவரை பயபக்தியுடன் வணங்குவதை உணர்கிறார்கள், இது போற்றுதலை விட உயர்ந்ததாக இருக்கிறது. அவருடைய சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பின் கிரியை காரணமாக ஜனங்கள் அவருடைய மனநிலையைப் பார்த்திருக்கிறார்கள், ஆகவே அவர்கள் அவரை இருதயத்தில் வைத்து வணங்குகிறார்கள். தேவன் வணங்கப்படுவதற்கும் கீழ்ப்படிவதற்கும் உரியவர், ஏனென்றால் அவருடைய இருப்புநிலையும் அவருடைய மனநிலையும் ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனுக்குச் சமமானவை இல்லை, அதற்கும் மேற்பட்டவையாக இருக்கின்றன. தேவன் தன்னிறைவுள்ளவர், நித்தியமானவர், அவர் சிருஷ்டிக்கப்படாத ஜீவன், மேலும் தேவன் மட்டுமே பயபக்திக்கும் கீழ்ப்படிதலுக்கும் தகுதியானவர்; மனுஷன் இதற்குத் தகுதியற்றவனாக இருக்கிறான். எனவே, அவருடைய கிரியையை அனுபவித்தவர்கள், அவரை உண்மையாக அறிந்தவர்கள் அனைவரும் அவரைப் பயபக்தியுடன் உணர்கிறார்கள். இருப்பினும், அவரைப் பற்றிய தங்கள் கருத்துக்களை விட்டுவிடாதவர்களுக்கு—அவரை தேவனாகக் கருதாதவர்களுக்கு—அவரைப் பற்றி எந்தப் பயபக்தியும் இருப்பதில்லை, அவர்கள் அவரைப் பின்பற்றினாலும், அவர்கள் ஜெயங்கொள்ளப்படுவதில்லை; அவர்கள் இயற்கையாகவே கீழ்ப்படியாத ஜனங்கள் ஆவர். இவ்வாறு கிரியை செய்வதன் மூலம் அவர் அடைய விரும்புவது என்னவென்றால், சிருஷ்டிக்கப்பட்ட எல்லா ஜீவன்களும் சிருஷ்டிகருக்கு மரியாதைக்குரிய இருதயங்களைக் கொண்டிருக்க வேண்டும், அவரை வணங்க வேண்டும், நிபந்தனையின்றி அவருடைய ஆதிக்கத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும் ஆகியவைதான். அவருடைய அனைத்து கிரியைகளும் அடைய வேண்டிய இறுதி முடிவு இதுதான். இதுபோன்ற கிரியையை அனுபவித்தவர்கள் தேவனைச் சிறிதளவு கூட வணங்கவில்லை என்றால், மேலும் அவர்களின் கடந்த கால கீழ்ப்படியாமையானது மாறாவிட்டால், அவர்கள் புறம்பாக்கப்படுவது உறுதி. தேவனுக்கான ஒரு நபரின் அணுகுமுறையானது அவரைப் போற்றுவதோ அல்லது தூரத்திலிருந்தே அவருக்கு மரியாதை செலுத்துவதோ மட்டுமாக இருந்து, அவரைச் சிறிதளவு கூட நேசிப்பதாக இல்லை என்றால், இதுவே தேவன்மீது அன்பு இல்லாத ஒரு நபர் வந்துள்ளதன் விளைவாகும், மேலும் அந்த நபர் பரிபூரணமடைவதற்கான நிபந்தனைகளைக் கொண்டிருப்பதில்லை. இவ்வளவு கிரியைகளாலும் ஒரு நபரின் உண்மையான அன்பைப் பெற முடியாவிட்டால், அந்த நபர் தேவனைப் பெறவில்லை என்றும், சத்தியத்தை உண்மையாகப் பின்தொடரவில்லை என்றும் அர்த்தமாகிறது. தேவனை நேசிக்காதவன் சத்தியத்தை நேசிப்பதில்லை, அதனால் அவனால் தேவனைப் பெற்றுக்கொள்ள முடியாது, தேவனின் அங்கீகாரத்தையும் பெற முடியாது. அத்தகையவர்கள், பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அனுபவித்தாலும், அவர்கள் நியாயத்தீர்ப்பை அனுபவித்தாலும், அவர்களால் தேவனை வணங்க முடிவதில்லை. இவர்களின் சுபாவம் மாறாததாக இருக்கிறது, மேலும் மிகவும் பொல்லாத மனநிலை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். தேவனை வணங்காத அனைவருமே புறம்பாக்கப்பட வேண்டும், தண்டனைக்குரிய பொருள்களாக இருக்க வேண்டும், பொல்லாப்பு செய்பவர்களைப் போலவே தண்டிக்கப்பட வேண்டும், அநீதியான காரியங்களைச் செய்தவர்களைக் காட்டிலும் அதிகமாகத் துன்பப்பட வேண்டும்.

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?