இன்றைய நாள் வரை மனிதகுலம் முழுவதும் எவ்வாறு வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும் (பகுதி ஒன்று)

ஆறாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட கிரியைகளின் முழுமையானது வெவ்வேறு சகாப்தங்கள் வந்து போனதால் படிப்படியாக மாறியிருக்கிறது. இந்தக் கிரியையின் மாற்றங்கள் உலகின் ஒட்டுமொத்த சூழ்நிலை மற்றும் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் வளர்ச்சிப் போக்குகளின் அடிப்படையில் அமைந்திருக்கின்றன; நிர்வாகத்திற்கான கிரியை அதற்கேற்ப படிப்படியாக மாறியிருக்கிறது. இவை அனைத்தும் சிருஷ்டிப்பின் தொடக்கத்திலிருந்து திட்டமிடப்படவில்லை. உலகம் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன்பு, அல்லது சிருஷ்டிக்கப்பட்ட உடனேயே, கிரியையின் முதற்கட்டமான நியாயப்பிரமாணத்தையோ; கிரியையின் இரண்டாம் கட்டமான கிருபையையோ; அல்லது மூன்றாம் கட்டமான ஜெயத்தையோ யேகோவா திட்டமிடவில்லை. முதலில் மோவாபின் சந்ததியினரிடமிருந்து தொடங்கி, அதன் மூலம் முழு பிரபஞ்சத்தையும் கைப்பற்றுவதே அவரது கிரியையாக இருக்கிறது. உலகை சிருஷ்டித்தபின், அவர் ஒருபோதும் இந்த வார்த்தைகளைப் பேசவில்லை, மோவாபிற்குப் பிறகும் அவர் ஒருபோதும் பேசவில்லை; உண்மையில், லோத்துக்கு முன்புவரை, அவர் அவற்றை ஒருபோதும் உச்சரிக்கவேயில்லை. தேவனின் கிரியைகள் அனைத்தும் தன்னிச்சையாகச் செய்யப்படுகின்றன. இவ்வாறே அவரது ஆறாயிரம் ஆண்டுகால நிர்வாகத்தின் கிரியைகள் முழுவதும் வளர்ந்தன; உலகைச் சிருஷ்டிப்பதற்கு முன்பு, அத்தகைய திட்டத்தை “மனிதகுலத்தின் வளர்ச்சிக்கான சுருக்க விளக்கப்படம்,” என்ற வடிவத்தில் அவர் எழுதியிருக்கவில்லை. தேவனின் கிரியையில் இருப்பதை அவர் நேரடியாக வெளிப்படுத்துகிறார்; ஒரு திட்டத்தை வகுக்க அவர் தனது மூளையைக் கசக்குவதில்லை. நிச்சயமாக, சில தீர்க்கதரிசிகள் ஏராளமான தீர்க்கதரிசனங்களைக் கூறியிருக்கிறார்கள், ஆனால் தேவனின் கிரியை எப்போதுமே துல்லியமான திட்டமிடலில் ஒன்றாகும் என்று சொல்லிவிட முடியாது; அந்த தீர்க்கதரிசனங்கள் அந்த நேரத்தில் தேவனின் கிரியைக்கு ஏற்ப உருவாக்கப்பட்டன. அவர் செய்யும் அனைத்து கிரியைகளும் மிகவும் உண்மையான கிரியைகளே. ஒவ்வொரு யுகத்தின் வளர்ச்சிக்கும் ஏற்ப அதை அவர் செயல்படுத்துகிறார், மேலும் விஷயங்கள் எவ்வாறு மாறுகின்றன என்பதை அது அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அவரைப் பொறுத்தவரை, கிரியை செய்வது என்பது ஒரு நோய்க்கு சிகிச்சையளிக்க மருந்தை வழங்குவதற்கு ஒத்ததாகும்; அவர் தன் கிரியையைச் செய்யும்போது, அவர் அவதானிக்கிறார், அவருடைய அவதானிப்புகளின்படி அவருடைய கிரியையைத் தொடர்கிறார். அவருடைய கிரியையின் ஒவ்வொரு கட்டத்திலும், தேவன் தம்முடைய ஏராளமான ஞானத்தையும் திறனையும் வெளிப்படுத்த வல்லவர்; எந்தவொரு குறிப்பிட்ட யுகத்தின் கிரியைக்கு ஏற்பவும் அவர் தனது ஏராளமான ஞானத்தையும் அதிகாரத்தையும் வெளிப்படுத்துகிறார், மேலும் அந்த யுகத்தில் அவரால் திரும்பக் கொண்டுவரப்பட்ட ஜனங்கள் அனைவரையும் தன் முழு மனநிலையைக் காண அனுமதிக்கிறார். ஒவ்வொரு யுகத்திலும் செய்ய வேண்டிய கிரியைக்கு ஏற்ப, செய்ய வேண்டிய எந்தக் கிரியையையும் செய்து, அவர் ஜனங்களுக்கான தேவைகளை வழங்குகிறார். சாத்தான் எந்த அளவிற்கு அவர்களைச் சீரழித்தான் என்பதன் அடிப்படையில் ஜனங்களுக்குத் தேவையானதை அவர் வழங்குகிறார். இதுபோலவே, யேகோவா ஆரம்பத்தில் ஆதாமையும் ஏவாளையும் படைத்தபோது, பூமியில் தேவனை வெளிப்படுத்த அவர்களுக்கு உதவுவதற்காகவும், சிருஷ்டிப்பின் மத்தியில் அவர்கள் தேவனுக்குச் சாட்சிக் கொடுக்கவும் அவர் அதைச் செய்தார். ஆயினும், சர்ப்பத்தால் சோதிக்கப்பட்டபின் ஏவாள் பாவமிழைத்தாள், ஆதாமும் அவ்வாறே செய்தான்; தோட்டத்தில், அவர்கள் இருவரும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசித்தார்கள். ஆதலால், அவர்கள் மீது செயல்பட யேகோவாவுக்கு கூடுதல் கிரியை இருந்தது. அவர்களின் நிர்வாணத்தைக் கண்ட அவர், அவர்களின் சரீரங்களை மிருகத்தின் தோலால் ஆன ஆடைகளைக் கொண்டு மூடினார். பின்பு அவர் ஆதாமை நோக்கி: “நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும் … நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்.” என்றார். அவர் ஸ்திரீயை நோக்கி: “நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான்.” என்றார். அப்போதிலிருந்து, நவீனகால மனுஷன் இப்போது பூமியில் ஜீவித்திருப்பதைப் போலவே, அவர்களை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றி, அதற்கு வெளியே ஜீவித்திருக்கும்படி செய்தார். தேவன் மனுஷனை ஆதியிலே சிருஷ்டித்தபோது, மனுஷனை சர்ப்பத்தால் சோதிக்க அனுமதிப்பதும், பின்னர் மனுஷனையும் சர்ப்பத்தையும் சபிப்பதும் அவருடைய திட்டமாக இருக்கவில்லை. அவர் உண்மையில் அத்தகைய திட்டத்தைக் கொண்டிருக்கவில்லை; சம்பவங்கள் உருவான விதம்தான் அவரது சிருஷ்டிப்புகளில் புதிய கிரியைகளைச் செய்ய வைத்தது. யேகோவா பூமியில் ஆதாம் மற்றும் ஏவாள் மத்தியில் இந்தக் கிரியையைச் செய்தபின், “பூமியில் மனுஷனின் அக்கிரமம் பெருகினது என்பதையும், அவனது இருதயத்தின் எண்ணங்களின் ஒவ்வொரு கற்பனையும் தொடர்ந்து தீமையாக மட்டுமே இருந்ததையும் யேகோவா கண்டார். பூமியில் மனுஷனை உண்டாக்கினதற்காக யேகோவா மனம் வருந்தினார், அது அவருடைய இருதயத்திற்கு விசனமாயிருந்தது. … ஆனால் நோவா, கர்த்தரின் பார்வையில் கிருபையைப் பெற்றான்.” இது வரை மனிதகுலம் பல ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து வளர்ந்திருக்கிறது. இந்த நேரத்தில் யேகோவாவுக்கு இன்னும் பல புதிய கிரியைகள் இருந்தன, ஏனென்றால் அவர் படைத்த மனிதகுலம் சர்ப்பத்தால் சோதிக்கப்பட்ட பின்னர் மிகவும் பாவம்கொண்டதாக வளர்ந்திருந்தது. இந்த சூழ்நிலைகளின் அடிப்படையில், மனிதகுலம் அனைத்திலும், நோவாவின் குடும்பம் காப்பாற்றப்பட வேண்டும் என்று யேகோவா தேர்ந்தெடுத்தார், அதன் பின்னர் உலகத்தை ஜலப்பிரளயத்தால் அழிக்கும் கிரியையை அவர் மேற்கொண்டார். இவ்வாறே இன்றுவரை மனிதகுலம் தொடர்ந்து வளர்ந்து வந்திருக்கிறது, பெருகிய முறையில் சீரழிவு வளர்ந்து வந்திருக்கிறது, மேலும் மனுஷனின் வளர்ச்சியானது அதன் உச்சத்தை அடையும் நேரம் வரும்போது, அது மனிதகுலத்தின் முடிவாகப் பொருள்கொள்ளப்பட வேண்டும். உலகத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை, அவருடைய கிரியையின் உள்ளார்ந்த உண்மை எப்போதுமே இவ்வாறே இருந்து வந்திருக்கிறது, எப்போதும் இவ்வாறுதான் இருக்கும். இது, ஜனங்கள் தங்கள் வகைக்கு ஏற்ப எவ்வாறு வகைப்படுத்தப்படுவார்கள் என்பது போன்றது; ஒவ்வொரு நபரும் ஆரம்பத்திலேயே ஒரு குறிப்பிட்ட வகையைச் சேர்ந்தவர்கள் என்று முன்னரே தீர்மானிக்கப்படும் நிகழ்வுக்கும் இதற்கும் வெகுதூர இடைவெளி உண்டு; மாறாக, வளர்ச்சிக்கான செயல்முறைக்கு உட்பட்ட பின்னரே அனைவரும் படிப்படியாக வகைப்படுத்தப்படுகிறார்கள். முடிவில், முழுமையான இரட்சிப்பைக் கொண்டுவர முடியாத எவரும் தங்கள் “மூதாதையர்களிடம்” திரும்பிச் செல்வார்கள். உலகம் சிருஷ்டிக்கப்படும் போதே மனிதகுலத்தின் மத்தியில் எவ்வித கிரியையும் தேவனால் ஆயத்தப்படுத்தப்படவில்லை; மாறாக, மனிதகுலத்தின் மத்தியில் படிப்படியாக, மிகவும் யதார்த்தமாக, நடைமுறைரீதியாக தேவன் தனது கிரியையைச் செய்ய அனுமதித்த விஷயங்களின் வளர்ச்சியே இது. உதாரணமாக, யேகோவா தேவன் அந்த ஸ்திரீயைத் தூண்டுவதற்காக சர்ப்பத்தைப் படைக்கவில்லை; அது அவருடைய குறிப்பிட்ட திட்டமாக இருக்கவில்லை, அதை அவர் வேண்டுமென்றே முன்னரே தீர்மானிக்கவும் இல்லை. இது ஓர் எதிர்பாராத நிகழ்வு என்றும் கூறலாம். ஆகவே, இதன் காரணமாகவே யேகோவா ஆதாமையும் ஏவாளையும் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றி, மீண்டும் ஒருபோதும் மனுஷனை உருவாக்க மாட்டேன் என்று ஆணையிட்டார். இருப்பினும், இந்த அஸ்திபாரத்தின் மீது மட்டுமே ஜனங்கள் தேவனின் ஞானத்தைக் கண்டுபிடிக்கிறார்கள். நான் முன்பு கூறியது போலவே: “சாத்தானின் சதிகளை அடிப்படையாகக் கொண்டு நான் என் ஞானத்தைப் பயன்படுத்துகிறேன்.” சீர்கெட்ட மனிதகுலம் எப்படியாக வளர்ந்தாலும் அல்லது சர்ப்பம் அவர்களை எப்படித் தூண்டினாலும், யேகோவாவிடம் அவருடைய ஞானம் எப்போதும் இருக்கிறது; அவர் உலகை சிருஷ்டித்ததிலிருந்தே புதிய கிரியைகளில் ஈடுபட்டு வருகிறார், இந்தக் கிரியையின் படிகள் எதுவும் திரும்பச் செய்யப்படுவதில்லை. சாத்தான் தொடர்ச்சியாகச் சதிகளை செயல்படுத்தி வருகிறான், மனிதகுலம் தொடர்ந்து சாத்தானால் சீர்கெட்டுப்போகிறது, மேலும் யேகோவா தேவன் தம்முடைய ஞானமான கிரியையை இடைவிடாமல் செய்துவருகிறார். உலகம் படைக்கப்பட்டதிலிருந்து அவர் ஒருபோதும் தோல்வியடையவும் இல்லை, கிரியை செய்வதையும் நிறுத்தவில்லை. மனுஷர் சாத்தானால் சீர்கெட்டப் பிறகு, அவர்களுடையச் சீர்கேட்டுக்கு ஆதாரமாய் இருக்கும் எதிரியைத் தோற்கடிக்க அவர் அவர்களிடையே தொடர்ந்து கிரியை செய்து வருகிறார். இந்த யுத்தம் ஆரம்பத்தில் இருந்தே உக்கிரமாக இருந்துவருகிறது, இது உலகின் இறுதி வரை தொடரும். இந்தக் கிரியையைச் செய்வதில், யேகோவா தேவன் சாத்தானால் சீர்கெட்ட மனுஷர்களை அவரது பெரிய இரட்சிப்பைப் பெற அனுமதிப்பது மட்டுமல்லாமல், அவருடைய ஞானத்தையும், சர்வ வல்லமையையும், அதிகாரத்தையும் காண அனுமதிக்கிறார். மேலும், இறுதியில், அவர் துன்மார்க்கரைத் தண்டிப்பதும் நல்லவர்களுக்கு வெகுமதி அளிப்பதும் ஆகிய தம்முடைய நீதியுள்ள மனநிலையை பார்க்க அனுமதிப்பார். அவர் இன்றுவரை சாத்தானுடன் போரிட்டு வருகிறார், ஒருபோதும் தோற்கடிக்கப்படவில்லை. ஏனென்றால், அவர் ஒரு ஞானமுள்ள தேவன், மேலும் சாத்தானின் சதிகளை அடிப்படையாகக் கொண்டு அவர் தனது ஞானத்தைப் பயன்படுத்துகிறார். ஆகையால், தேவன் பரலோகத்தில் உள்ள அனைத்தையும் தம்முடைய அதிகாரத்திற்குக் கீழ்ப்படியச் செய்வது மட்டுமல்லாமல், பூமியிலுள்ள அனைத்தையும் அவருடைய பாதப்படிக்குக் கீழே வைத்திருக்கிறார், மேலும், மனிதகுலத்தை ஆக்கிரமித்து துன்புறுத்தும் துன்மார்க்கரை அவர் சிட்சைக்குள்ளாக்குகிறார். அவருடைய—ஞானத்தின் காரணமாகவே இந்தக் கிரியைகளின் முடிவுகள் அனைத்தும் கொண்டு வரப்படுகின்றன. மனிதகுலத்தின் இருப்புக்கு முன்னர் அவர் ஒருபோதும் தனது ஞானத்தை வெளிப்படுத்தியிருக்கவில்லை, ஏனென்றால் அவருக்கு பரலோகத்திலோ, பூமியிலோ, அல்லது முழு பிரபஞ்சத்திலோ எங்கும் எதிரிகள் இல்லை, மேலும் இயற்கையின் இடையே எதையும் ஆக்கிரமிக்கும் அந்தகாரச் சக்திகள் இல்லை. பிரதான தூதன் அவருக்குத் துரோகம் செய்த பிறகு, அவர் பூமியில் மனிதகுலத்தை படைத்தார், மனிதகுலத்தினால்தான் அவர் பிரதான தூதனாகிய சாத்தானுடனான தனது ஆயிரம் ஆண்டுகால நீண்ட யுத்தத்தை முறையாகத் தொடங்கினார், இந்தப் போர் ஒவ்வொரு தொடர்ச்சியான கட்டத்திலும் உக்கிரமடைகிறது. இந்தக் கட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருடைய சர்வவல்லமையும் ஞானமும் இருக்கிறது. அப்போதுதான் பரலோகத்திலும் பூமியிலும் உள்ள சகலமும் தேவனின் ஞானம், சர்வவல்லமை மற்றும் குறிப்பாக தேவனின் மெய்மை ஆகியவற்றைக் கண்டன. அவர் இன்றுவரை தனது கிரியையை இதே யதார்த்தமான முறையில் செய்துவருகிறார்; கூடுதலாக, அவர் தனது கிரியையைச் செயல்படுத்தும்போது, அவர் தனது ஞானத்தையும் சர்வவல்லமையையும் வெளிப்படுத்துகிறார். ஒவ்வொரு கட்ட கிரியையின் ஆழ்ந்த உண்மையைப் பார்க்கவும், தேவனின் சர்வவல்லமையை எவ்வாறு விளக்குவது என்பதைக் காணவும், மேலும், தேவனின் மெய்மையைப் பற்றிய உறுதியான விளக்கத்தைக் காணவும் அவர் உங்களை அனுமதிக்கிறார்.

யூதாஸ் இயேசுவைக் காட்டிக் கொடுத்தது குறித்து, சிலர் ஆச்சரியப்படுகிறார்கள்: இது உலகம் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன்பே தீர்மானிக்கப்படவில்லையா? உண்மையில், பரிசுத்த ஆவியானவர் இந்தத் திட்டங்களை அக்காலத்தின் யதார்த்தத்தின் அடிப்படையில் உருவாக்கினார். யூதாஸ் என்ற பெயரில் ஒருவன் எப்போதும் நிதி கையாடல் செய்து கொண்டிருந்தான், எனவே இவன் இந்தப் பாத்திரத்தை வகிக்கவும், இவ்வழியில் ஊழியத்தில் ஈடுபடவும் தேர்ந்தெடுக்கப்பட்டான். நம்மிடம் இருக்கும் வளங்களையே பயன்படுத்துவதற்கு இது ஓர் உண்மையான எடுத்துக்காட்டாக இருக்கிறது. முதலில் இதை இயேசு அறிந்திருக்கவில்லை; யூதாஸ் அம்பலப்படுத்தப்பட்ட பின்னரே அவர் அதைப் பற்றி அறிந்து கொண்டார். வேறு யாராவது இந்தப் பாத்திரத்தை வகிக்க முடிந்திருந்தால், அந்த நபர் யூதாஸுக்கு பதிலாக அதைச் செய்திருப்பார். முன்னரே முன்குறிக்கப்பட்டவை, உண்மையில், பரிசுத்த ஆவியானவர் அந்தத் தருணத்தில் செய்த ஒன்று தான். பரிசுத்த ஆவியானவரின் கிரியை எப்போதும் தன்னிச்சையாக மேற்கொள்ளப்படுகிறது; அவரால் எந்த நேரத்திலும் தனது கிரியையைத் திட்டமிட முடியும், எந்த நேரத்திலும் அதைச் செயல்படுத்தவும் முடியும். பரிசுத்த ஆவியானவரின் பணி மெய்மையானது என்றும், அது எப்போதும் புதியது என்றும், ஒருபோதும் பழையது அல்ல என்றும், எப்போதும் மிக உயர்ந்த அளவிற்கு புதியது என்றும் நான் ஏன் எப்போதும் சொல்கிறேன்? உலகம் சிருஷ்டிக்கப்பட்டபோது அவருடைய கிரியை முன்பே திட்டமிடப்படவில்லை; நடந்தது அதுவல்ல! கிரியையின் ஒவ்வொரு படியும் அந்தந்த நேரத்திற்கு அதன் சரியான முடிவை அடைகிறது, மேலும் அந்தப் படிகள் ஒன்றோடொன்று தலையிடுவதும் இல்லை. அநேக நேரங்களில், நீ மனதில் வைத்திருக்கக்கூடிய திட்டங்கள் பரிசுத்த ஆவியானவரின் சமீபத்திய கிரியைகளுக்கு ஒப்பாகாது. அவரது கிரியை மனுஷனின் பகுத்தறிவு போன்று எளிமையானதும் அல்ல, மனுஷக் கற்பனையைப் போன்று சிக்கலானதும் அல்ல—இது எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் ஜனங்களுக்கு அவர்களின் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப வழங்குவதை உள்ளடக்கியது. அவரை விட மனுஷனின் சாராம்சத்தைப் பற்றி யாரும் தெளிவாக அறிந்திருக்கவில்லை, மேலும் சரியாக இந்தக் காரணத்திற்காகவே ஜனங்களின் யதார்த்தமான தேவைகளுக்கும், அவருடைய கிரியைகளுக்கும் வேறேதும் பொருந்துவதில்லை. எனவே, மனுஷனின் கண்ணோட்டத்தில், அவருடைய கிரியை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டதாகத் தெரிகிறது. அவர் இப்போது உங்களிடையே கிரியை செய்கையில், நீங்கள் இருக்கும் நிலைகளை அவர் கவனித்துக் கொண்டே கிரியை செய்யும்போதும் மற்றும் பேசும் போதும்—ஒவ்வொரு விதமான நிலையையும் எதிர்கொண்டு பேச அவரிடம் சரியான வார்த்தைகள் உள்ளன—ஜனங்களுக்குத் தேவையானதை மட்டுமே பேசுகிறார். அவருடைய கிரியையின் முதல் படியை எடுத்துக் கொள்ளுங்கள்: சிட்சிக்கும் நேரம். அதன் பிறகு, ஜனங்கள் எல்லா விதமான நடத்தைகளையும் வெளிப்படுத்தினர், மேலும் சில வழிகளில் கலகத்தனமாகவும் நடந்து கொண்டனர்; சில எதிர்மறை நிலைகளைப் போலவே பல்வேறு நேர்மறை நிலைகளும் தோன்றின. அவர்கள் தங்களையே வீழ்ச்சிக்கு இட்டுச்செல்லும் எதிர்மறையான நிலைகளையும், மிகவும் இழிவான வரம்பையும் அடைந்தனர். இந்த விஷயங்கள் எல்லாவற்றையும் அடிப்படையாகக் கொண்டே தேவன் தம்முடைய கிரியையை நடத்தியுள்ளார், இதனால் அவருடைய கிரியை மூலம் மிகச் சிறந்த முடிவை அடைய அவர்களைக் கைப்பற்றுகிறார். அதாவது, எந்த நேரத்திலும் அவர்களின் தற்போதைய நிலை என்ன என்பதை அடிப்படையாகக் கொண்டு அவர் ஜனங்களிடையே நிலையான கிரியையைச் செய்கிறார்; ஜனங்களின் உண்மையான நிலைகளுக்கு ஏற்ப அவர் தனது கிரியையின் ஒவ்வொரு படியையும் செயல்படுத்துகிறார். சிருஷ்டிப்புக்கள் அனைத்தும் அவருடைய கைகளில் உள்ளன; அவர் அவர்களை எப்படி அறியாமல் போவார்? ஜனங்களின் நிலைகளுக்கு ஏற்ப, எந்த நேரத்திலும், எங்கும் செய்யப்பட வேண்டிய அடுத்தக் கட்ட கிரியைகளை தேவன் செய்கிறார். எந்த வகையிலும் இந்தக் கிரியை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்படவில்லை; அது மனுஷனின் கருத்து! அவர் தனது கிரியையின் முடிவுகளை அவதானித்துக் கொண்டே கிரியை செய்கிறார், மேலும் அவருடைய கிரியை தொடர்ந்து ஆழமாக வளர்ந்து கொண்டே இருக்கிறது; ஒவ்வொரு முறையும், அவருடைய கிரியையின் முடிவுகளை அவதானித்தபின், அவர் தனது கிரியையின் அடுத்தப் படியை செயல்படுத்துகிறார். அவர் படிப்படியாக மாறுவதற்கும் காலப்போக்கில் தனது புதிய படைப்பை ஜனங்களுக்குத் தெரியப்படுத்துவதற்கும் சகலத்தையும் பயன்படுத்துகிறார். இந்த விதமான கிரியையால் ஜனங்களுக்கான தேவைகளை வழங்க முடியும், ஏனென்றால் தேவன் ஜனங்களை நன்கு அறிவார். இப்படியாகவே அவர் தனது கிரியையைப் பரலோகத்திலிருந்து செயல்படுத்துகிறார். அதேபோல், தேவனின் மனுஷ அவதாரமும் அவருடைய கிரியையை அதே வழியில் செய்கிறது, உண்மையான சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஏற்பாடுகளைச் செய்து ஜனங்களிடையே கிரியை செய்கிறது. உலகம் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன்னர் அவருடைய சிருஷ்டிப்புகள் எதுவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கவில்லை, கவனமாக முன்பே திட்டமிடப்படவும் இல்லை. உலகம் சிருஷ்டிக்கப்பட்டு இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின், மனுஷகுலம் மிகவும் சீர்கெட்டு இருப்பதை யெகோவா கண்டார், அதனால் அவர் ஏசாயா தீர்க்கதரிசியின் வாயைப் பயன்படுத்தி, நியாயப்பிரமாணத்தின் யுகம் முடிந்தபின், கிருபையின் யுகத்தில் மனுஷகுலத்தை மீட்பதற்கான தனது கிரியையைச் செய்வார் என்று யெகோவா முன்னறிவித்தார். இது யெகோவாவின் திட்டமாகும், ஆனால் அந்த நேரத்தில் அவர் அவதானித்த சூழ்நிலைகளுக்கு ஏற்பவும் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது; ஆதாமைச் சிருஷ்டித்த உடனேயே அவர் நிச்சயமாக அதைப் பற்றி யோசிக்கவில்லை. ஏசாயா வெறுமனே ஒரு தீர்க்கதரிசனத்திற்கு குரல் கொடுத்தார், ஆனால் யெகோவா நியாயப்பிரமாண யுகத்தில் இந்தக் கிரியைக்கு முன்கூட்டியே தயாராக இருக்கவில்லை; மாறாக, கிருபையின் யுகத்தின் ஆரம்பத்தில் அவர் அதைச் செயல்படுத்தினார்; யோசேப்பின் கனவில் தூதர் தோன்றி, தேவன் மாம்சமாகுவார் என்ற செய்தியை அவருக்குத் தெளிவூட்டினார், அப்போதுதான் அவருடைய மனுஷ அவதாரக் கிரியை தொடங்கியது. ஜனங்கள் கற்பனை செய்தபடி, உலகத்தைச் சிருஷ்டித்த உடனேயே மனுஷ அவதாரம் எடுப்பதற்கு தேவன் தயாராக இருக்கவில்லை; மனுஷகுலம் எந்த அளவிற்கு வளர்ச்சியடைந்திருக்கிறது மற்றும் சாத்தானுக்கு எதிரான அவரது போரின் நிலை ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே இது தீர்மானிக்கப்பட்டது.

தேவன் மாம்சமாக மாறும்போது, அவருடைய ஆவி ஒரு மனுஷனின் மீது இறங்குகிறது; வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவனின் ஆவி தன்னை ஒரு சரீரத்தால் அலங்கரிக்கிறது. சில வரையறுக்கப்பட்ட படிகளைத் தன்னுடன் கொண்டு வரக்கூடாது என்பதற்காக அவர் பூமியில் தனது கிரியையைச் செய்ய வருகிறார்; அவரது கிரியை முற்றிலும் வரம்பற்றது. பரிசுத்த ஆவியானவர் மாம்சத்தில் மேற்கொள்ளும் கிரியையானது அவரது கிரியையின் முடிவுகளால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது, மேலும் அவர் மாம்சத்தில் எவ்வளவு காலத்திற்குக் கிரியை செய்வார் என்பதை தீர்மானிக்க இதுபோன்றவற்றைப் பயன்படுத்துகிறார். பரிசுத்த ஆவியானவர் தன் கிரியையின் ஒவ்வொரு படியையும் நேரடியாக வெளிப்படுத்துகிறார், அவர் முன்னேறிச் செல்லச் செல்லத் தன் கிரியையை ஆராய்கிறார்; இந்தக் கிரியை மனுஷக் கற்பனையின் வரம்புகளை நீட்டிக்கும் அளவுக்கு இயற்கைக்கு அப்பாற்பட்டது அல்ல. இது வானங்களையும், பூமியையும் மற்றும் சகலத்தையும் சிருஷ்டிப்பதில் யேகோவாவின் கிரியை போன்றது; அவர் ஒரே நேரத்தில் திட்டமிட்டு பணியாற்றினார். அவர் அந்தகாரத்தில் இருந்து வெளிச்சத்தைப் பிரித்தார், காலையும் மாலையும் உருவானது—இதற்கு ஒரு நாள் பிடித்தது. இரண்டாவது நாளில், அவர் வானத்தைச் சிருஷ்டித்தார், அதுவும் ஒரு நாள் எடுத்தது; பின்னர் அவர் பூமி, சமுத்திரங்கள் மற்றும் அவற்றில் வசிக்கும் அனைத்து ஜீவஜந்துக்களையும் சிருஷ்டித்தார், அதற்கு இன்னொரு நாள் தேவைப்பட்டது. ஆறாம் நாள் வரை இது தொடர்ந்தது, தேவன் மனுஷனைச் சிருஷ்டித்து பூமியில் உள்ள அனைத்தையும் நிர்வகிக்க அனுமதித்தார். பின்னர், ஏழாம் நாளில், அவர் எல்லாவற்றையும் சிருஷ்டித்து முடித்ததும், அவர் ஓய்வெடுத்தார். தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து அதை ஒரு புனித நாளாக நியமித்தார். இந்தப் புனித நாளை அவர் மற்ற அனைத்தையும் சிருஷ்டித்தப் பிறகுதான் நிறுவ முடிவு செய்திருந்தார், அவற்றை உருவாக்குவதற்கு முன்பு அல்ல. இந்தக் கிரியையும் தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்டது; சகலத்தையும் சிருஷ்டிப்பதற்கு முன்பு, அவர் ஆறு நாட்களில் உலகையும், ஏழாம் நாளில் ஓய்வையும் சிருஷ்டிக்க முடிவு செய்திருக்கவில்லை; அது உண்மைகளுக்கு ஏற்ப இல்லை. அவர் அப்படி ஒரு விஷயத்திற்குக் குரல் கொடுக்கவும் இல்லை, அதைத் திட்டமிடவும் இல்லை. சகலத்தையும் சிருஷ்டிப்பது ஆறாம் நாளில் நிறைவடையும் என்றும் ஏழாம் நாள் ஓய்வெடுப்பார் என்றும் அவர் சொல்லவில்லை; மாறாக, அந்த நேரத்தில் அவருக்கு நல்லதாகத் தோன்றியதைப் பொறுத்து அவர் சிருஷ்டித்தார். அவர் சகலத்தையும் சிருஷ்டித்து முடித்ததும், அது ஏற்கனவே ஆறாவது நாளாக இருந்தது. அவர் சகலத்தையும் சிருஷ்டித்து முடித்தது ஐந்தாவது நாளாக இருந்திருந்தால், அவர் ஆறாவது நாளை ஒரு புனித நாளாக நியமித்திருப்பார். ஆனால், அவர் ஆறாவது நாளில்தான் சகலத்தையும் சிருஷ்டித்து முடித்தார், இதனால் ஏழாம் நாள் ஒரு புனித நாளாக மாறியது, தற்போதுவரை இந்நாளே அப்படியாக இருந்து வருகிறது. ஆதலால், அவரது தற்போதைய பணிகள் இதே முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. உங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப உங்கள் தேவைகளுக்கு அவர் பேசவும், வழங்கவும் செய்கிறார். அதாவது, ஆவியானவர் ஜனங்களின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பேசுகிறார், செயல்படுகிறார்; அவர் சகலத்தையும் கண்காணித்து, எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் கிரியை செய்கிறார். நான் செய்வது, சொல்வது, உங்கள் மீது வைப்பது, உங்களுக்கு வழங்குவது, இவை அனைத்தும் விதிவிலக்கு இல்லாமல், உங்களுக்கு தேவையானது மட்டுமே ஆகும். ஆகவே, எனது கிரியை எதுவும் யதார்த்தத்திலிருந்து பிரிக்கப்பட்டதல்ல; அவை அனைத்தும் உண்மையானது தான், ஏனென்றால் “தேவனின் ஆவி அனைவரையும் கண்காணிக்கிறது,” என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இவை அனைத்தும் காலத்திற்கு முன்பே தீர்மானிக்கப்பட்டிருந்தால், இவை மிகவும் துல்லியமாக இருந்திருக்காதா? ஆறாயிரம் ஆண்டுகள் முழுமைக்குமான திட்டங்களை தேவன் வகுத்ததாகவும், பின்னர் மனுஷகுலத்தைக் கலகக்காரர்களாக, எதிர்ப்பவர்களாக, வக்கிரமும் வஞ்சகமும் கொண்டவர்களாக, மாம்சத்தின் சீர்கேட்டினைக் கொண்டவர்களாக, சாத்தானின் மனநிலையைக் கொண்டவர்களாக, கண்களில் ஆசை கொண்டவர்களாக மற்றும் தனிப்பட்ட இன்பங்களைக் கொண்டவர்களாக இருக்கவேண்டும் என்று அவர் முன்னரே முன்குறிக்கப்பட்டுவிட்டதாக நீங்கள் நினைப்பது போலாகும். இவை எதுவும் தேவனால் முன்னரே முன்குறிக்கப்படவில்லை, மாறாகச் சாத்தானின் சீர்கேட்டின் முடிவாகவே இவை அனைத்தும் நிகழ்ந்திருக்கின்றன. “சாத்தானும் தேவனின் பிடியில் இருந்திருக்கவில்லையா? சாத்தான் இவ்விதத்தில் மனுஷனைச் சீரழிப்பான் என்று தேவன் முன்னரே தீர்மானித்திருந்தார், அதன் பிறகு, தேவன் தம்முடைய கிரியையை மனுஷர்களிடையே செயல்படுத்தினார்,” என்று சிலர் பேசுவர். மனுஷகுலத்தைச் சீரழிக்க தேவன் உண்மையிலேயே சாத்தானை முன்குறித்திருப்பாரா? மனுஷகுலத்தை இயல்பாக வாழ அனுமதிக்கவே தேவன் மிகவும் ஆர்வமாக உள்ளார், எனவே அவர் உண்மையில் அவர்களது ஜீவிதங்களில் தலையிடுவாரா? அப்படியானால், சாத்தானைத் தோற்கடித்து மனுஷகுலத்தை இரட்சிப்பது ஒரு பயனுள்ள முயற்சியாக இருந்திருக்காதா? மனுஷகுலத்தின் கலகத்தன்மை எவ்வாறு முன்னரே முன்குறிக்கப்பட்டிருக்க முடியும்? அது சாத்தானின் குறுக்கீட்டால் நிகழ்ந்த ஒன்று, எனவே அதை தேவனால் எவ்வாறு முன்னரே முன்குறிக்கப்பட்டிருக்க முடியும்? நீங்கள் பேசும் தேவனின் பிடியில் உள்ள சாத்தான், நான் பேசும் தேவனின் பிடியில் உள்ள சாத்தானிடமிருந்து மிகவும் வித்தியாசமானவன். “தேவன், சர்வவல்லவர். சாத்தான் அவரது கைகளுக்குள் இருக்கிறான்,” என்ற உங்களது கூற்றுகளின்படி பார்த்தால், சாத்தானால் ஒருபோதும் அவருக்குத் துரோகமிழைத்திருக்க முடியாது. தேவன் சர்வவல்லமை கொண்டவர் என்று நீங்கள் சொல்லவில்லையா? உங்கள் அறிவு மிகவும் சிறியதாக இருக்கிறது, மேலும் அது மெய்மையுடன் தொடர்பில் இல்லை; மனுஷனால் ஒருபோதும் தேவனின் எண்ணங்களையும் புரிந்து கொள்ள முடியாது, மனுஷனால் ஒருபோதும் அவருடைய ஞானத்தையும் புரிந்து கொள்ள முடியாது! தேவன் சர்வவல்லமை உள்ளவர்; இது ஒரு பொய்யே அல்ல. பிரதான தூதன் தேவனுக்கு துரோகமிழைத்தான், ஏனென்றால் தேவன் ஆரம்பத்தில் அவனுக்கு அதிகாரத்தின் ஒரு பங்கைக் கொடுத்திருந்தார். நிச்சயமாக, ஏவாள் சர்ப்பத்தின் சோதனையில் வீழ்ந்ததைப் போல இதுவும் ஓர் எதிர்பாராத நிகழ்வுதான். இருப்பினும், சாத்தான் தனது துரோகத்தை எப்படி நிகழ்த்தினாலும், அவனால் இன்னும் தேவனைப் போல சர்வவல்லமை கொள்ள முடியவில்லை. நீங்கள் கூறியது போல், சாத்தான் வெறும் வலிமைமிக்கவன்தான்; அவன் என்ன செய்தாலும், தேவனின் அதிகாரம் எப்போதும் அவனைத் தோற்கடிக்கும். “தேவன் சர்வவல்லமையுள்ளவர், சாத்தான் அவருடைய கைகளுக்குள் இருக்கிறான்,” என்ற கூற்றின் பின்னணியில் உள்ள உண்மையான அர்த்தம் இதுதான். எனவே, சாத்தானுடனான போர் ஒரு நேரத்தில் ஓர் அடியெடுத்து வைப்பதாக மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், சாத்தானின் தந்திரங்களுக்குப் பதிலளிக்கும் விதமாகவே தேவன் தனது கிரியையைத் திட்டமிடுகிறார்—அதாவது, அவர் மனுஷகுலத்திற்கு இரட்சிப்பைக் கொண்டுவந்து, காலத்திற்கு ஏற்றவாறு அவருடைய சர்வவல்லமையையும் ஞானத்தையும் வெளிப்படுத்துகிறார். அதேபோல், கடைசி நாட்களுக்கான கிரியை ஆரம்ப காலத்திலேயே, கிருபையின் யுகத்திற்கு முன்பே முன்குறிக்கப்படவில்லை; பின்வருவனவற்றை போல முன்குறித்தல்கள் ஒழுங்கான முறையில் செய்யப்படவில்லை: முதலாவதாக, மனுஷனின் வெளிப்புற மனநிலையை மாற்றுதல்; இரண்டாவதாக, மனுஷனை அவனுக்கான சிட்சைக்கும் சோதனைகளுக்கும் உட்படுத்துதல்; மூன்றாவதாக, மனுஷன் மரண விசாரணைக்கு உட்படுத்தப்படுதல்; நான்காவதாக, மனுஷன் தேவனை நேசிக்கும் நேரத்தை அனுபவிக்க வைத்தல் மற்றும் அவனை ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனாக தீர்மானத்தை வெளிப்படுத்த வைத்தல்; ஐந்தாவது, தேவனின் விருப்பத்தைக் காணவும் அவரை முழுமையாக அறிந்து கொள்ளவும் மனுஷனை அனுமதித்தல், இறுதியாக மனுஷனை பரிபூரணப்படுத்துதல். அவர் கிருபை யுகத்தில் இவை அனைத்தையும் திட்டமிடவில்லை; மாறாக, அவர் தற்போதைய காலத்தில் அவற்றைத் திட்டமிடத் தொடங்கினார். தேவனைப் போலவே சாத்தானும் தன் கிரியையைச் செய்கிறான். சாத்தான் அவனது சீர்கெட்ட மனநிலையை வெளிப்படுத்துகிறான், அதேசமயம் தேவன் நேரடியாகப் பேசி, சில இன்றியமையாத விஷயங்களை வெளிப்படுத்துகிறார். இதுதான் இன்று செய்யப்படும் கிரியை, மேலும், உலகத்தைச் சிருஷ்டித்த பின்னர், நீண்ட காலத்திற்கு முன்பே இதேபோன்று செயல்படும் கிரியைதான் பயன்படுத்தப்பட்டது.

A portion of the Bible verses in this audio are from TAMIL OV and the copyright to the Bible verses from TAMIL OV belongs to the Bible Society of India. With due legal permission, they are used in this production.

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?