தேவனுடைய சித்தத்திற்கு இணங்க ஊழியம் செய்வது எப்படி

ஒருவர் தேவனை நம்பும்போது, எப்படி, சரியாக, அவருக்கு ஊழியம் செய்ய வேண்டும்? தேவனுக்கு ஊழியம் செய்பவர்களால் என்ன நிபந்தனைகள் நிறைவேற்றப்பட வேண்டும் மற்றும் என்ன சத்தியங்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும்? மேலும் உங்கள் ஊழியத்தில் எங்கே நீங்கள் வழிவிலகக்கூடும்? இக்காரியங்கள் எல்லாவற்றிற்கும் உங்களுக்கு பதில்கள் தெரிந்திருக்க வேண்டும். இந்தப் பிரச்சனைகள் நீங்கள் எப்படி தேவனை விசுவாசிக்கிறீர்கள், பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்படும் பாதைக்கு எப்படி நீங்கள் கடந்து போகிறீர்கள், மற்றும் எல்லாக் காரியங்களிலும் தேவனுடைய ஏற்பாடுகளுக்கு எப்படி அர்ப்பணிக்கிறீர்கள் என்பதைப்பற்றி அலசி, இதனால் உங்களில் தேவனுடைய கிரியையின் ஒவ்வொரு அடியையும் புரிந்துகொள்ள உங்களுக்கு வாய்ப்பளிக்கிறது. நீங்கள் அந்த நிலையை அடையும்போது, தேவன் மீதான விசுவாசம் என்றால் என்ன, தேவனை எப்படிச் சரியாக விசுவாசிப்பது, தேவனின் சித்தத்திற்கு இணங்கி செயல்பட நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து கொள்வீர்கள். இது உங்களை தேவனுடைய கிரியைக்கு முழுமையாகவும், முற்றிலுமாகவும் கீழ்ப்படியச் செய்யும். நீங்கள் குறைகூற மாட்டீர்கள், நியாயந்தீர்க்க மாட்டீர்கள் அல்லது பகுப்பாய்வு செய்ய மாட்டீர்கள், தேவனுடைய கிரியையை ஆராய்ச்சி செய்ய மாட்டீர்கள். அப்படியே, உங்கள் அனைவராலும் மரணபரியந்தம் தேவனுக்குக் கீழ்ப்படிந்து, ஓர் ஆட்டைப்போல தேவன் உங்களை வழிநடத்தவும், அடிக்கவும் இடங்கொடுக்க முடியும், அதனால் நீங்கள் அனைவரும் 1990-களின் பேதுருக்களாய் மாறவும், சிலுவை பரியந்தம், ஒரு சிறு குறை சொல்லாமல் தேவனை முழுமையாய் நேசிக்கவும் முடியும். அப்போதுதான் உங்களால் 1990-களின் பேதுருக்களைப் போல வாழ முடியும்.

தேவனுக்கு ஊழியஞ்செய்ய தீர்மானித்த ஒவ்வொருவரும் ஊழியம் செய்ய முடியும்—ஆனால் ஒவ்வொரு காரியத்தையும் தேவனின் சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து, தேவனுடைய சித்தத்தை புரிந்துகொள்பவர்கள் மட்டுமே தேவனுக்கு ஊழியஞ்செய்ய தகுதியுடையவர்களும், உரிமையுடையவர்களுமாவார்கள். அநேக ஜனங்களும் தாங்கள் ஆர்வத்துடன் தேவனுக்காகச் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும் வரையிலும், தேவனுக்காகப் பயணித்து, தங்களையே பயன்படுத்தி, தேவனுக்காகக் காரியங்களை விட்டுவிடுவது, மற்றும் பலவும், தேவனுக்கு ஊழியஞ்செய்வது என்று நம்புகிறதை நான் உங்களிடையே கண்டுபிடித்தேன். மதம்சார்ந்த பல ஜனங்கள் கூட, தங்கள் கைகளில் ஒரு வேதாகமத்தை வைத்துக்கொண்டு பரபரப்பாய்ச் சுற்றுவதும், பரலோகராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பரப்புவதும், மற்றும் ஜனங்களை மனந்திரும்பவும் அறிக்கையிடவும் செய்து அவர்களை இரட்சிப்படையச் செய்வதும் தேவனுக்கு ஊழியஞ்செய்வது என்று நம்புகிறார்கள். இறையியல் கல்லூரிகளில் மேற்படிப்பையும் பயிற்சியையும் தொடர்ந்து, தேவாலயங்களில் பிரசங்கிப்பதும், வேதவாக்கியங்களை வாசிப்பதின் வாயிலாக ஜனங்களுக்குப் போதிப்பதும் தேவனுக்கு ஊழியம் செய்வதில் அடங்கும் என்று பல மத அதிகாரிகள் நினைக்கின்றனர். மேலும், தேவனுக்கு ஊழியம் செய்வது என்பது வியாதியஸ்தர்களை சுகப்படுத்துவதும், தங்கள் சகோதர சகோதரிகளுக்கு மத்தியில் இருந்து பிசாசுகளை விரட்டுவதும் அல்லது அவர்களுக்காக ஜெபிப்பதும் அல்லது அவர்களுக்கு சேவை செய்வதும் என்று நம்பும் ஜனங்கள் ஏழ்மையான பகுதிகளில் உண்டு. தேவனுக்கு ஊழியம் செய்வது என்பது தேவனுடைய வார்த்தைகளை உண்பது குடிப்பது, ஒவ்வொரு நாளும் தேவனிடம் ஜெபிப்பது, அத்துடன் எவ்விடத்திலுமுள்ள சபைகளுக்குச் சென்று அங்கு வேலை செய்வது என்று நம்பும் பலர் உங்கள் மத்தியில் உண்டு. தேவனுக்கு ஊழியம் செய்வது என்பது ஒருபோதும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது அல்லது ஒரு குடும்பத்தைக் கட்டுவது மற்றும் தங்களின் முழுமையையும் தேவனுக்கு அர்ப்பணிப்பது என்று நம்புகிற மற்ற சகோதர சகோதரிகளும் உள்ளனர். இருப்பினும், தேவனுக்கு ஊழியஞ்செய்வதின் உண்மையான அர்த்தம் ஒரு சில ஜனங்களுக்குத் தெரியும். வானத்து நட்சத்திரங்கள் பல இருப்பதைப்போல தேவனுக்கு ஊழியம் செய்பவர்கள் அநேகர் இருந்தாலும், நேரடியாக ஊழியம் செய்யக்கூடிய மற்றும் தேவனுடைய சித்தத்திற்கிணங்க ஊழியம் செய்யக்கூடியவர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பமே. நான் ஏன் இதைச் சொல்கிறேன்? “தேவனுக்குச் செய்யும் ஊழியம்” என்கிற சொற்றொடரின் சாராம்சத்தை நீங்கள் புரிந்து கொள்ளாததினாலும், தேவனுடைய சித்தத்தின்படி ஊழியம் செய்வது எப்படி என்பதைக் குறித்து நீங்கள் மிகக்குறைவாகப் புரிந்திருப்பதாலும் நான் இதைச் சொல்கிறேன். எவ்வகையான ஊழியம் தேவனுடைய சித்தத்திற்கு இணங்கி இருக்கும் என்பதை மிகச்சரியாகப் புரிந்து கொள்ள வேண்டிய அவசரத் தேவை ஜனங்களுக்கு உள்ளது.

நீங்கள் தேவனுடைய சித்தத்திற்கு இணங்க ஊழியம் செய்ய விரும்பினால், எவ்வகையான ஜனங்கள் தேவனுக்குப் பிரியம், எவ்வகையான ஜனங்களை தேவன் வெறுக்கிறார், எவ்வகையான ஜனங்கள் தேவனால் பூரணமாக்கப்பட்டிருக்கிறார்கள் மற்றும் எவ்வகையான ஜனங்கள் தேவனுக்கு ஊழியம் செய்யத் தகுதியானவர்கள் என்பதை நீங்கள் முதலில் புரிந்துவைத்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் இந்த அறிவை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். மேலும், தேவனுடைய கிரியையின் நோக்கங்களையும், அவர் இப்பொழுது இங்கே செய்யவிருக்கும் கிரியையையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இதைப் புரிந்து கொண்ட பிறகு, தேவவார்த்தைகளின் வழிநடத்துதலின் மூலம், நீங்கள் முதலில் பிரவேசத்தைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் தேவனுடைய கட்டளையை முதலில் பெற்றிருக்க வேண்டும். தேவனுடைய வார்த்தைகளின் உண்மையான அனுபவத்தை நீங்கள் பெற்று, தேவனுடைய கிரியையை நீங்கள் உண்மையாக அறிந்தவுடன், நீங்கள் தேவனுக்கு ஊழியம் செய்யத் தகுதியடைவீர்கள். நீங்கள் அவருக்கு ஊழியஞ்செய்யும் போதுதான், தேவன் உங்களின் ஆவிக்குரிய கண்களைத் திறந்து, அவருடைய கிரியையைப் பற்றிய அதிக புரிதலைப் பெறவும், அதை இன்னும் தெளிவாகக் காணவும் உங்களை அனுமதிக்கிறார். நீ இந்த உண்மை நிலைக்குள் நுழையும்போது, உன் அனுபவங்கள் மிகவும் ஆழமானதாகவும் உண்மையானதாகவும் இருக்கும், மேலும் உங்களில் இப்படிப்பட்ட அனுபவங்களைப் பெற்ற அனைவரும் சபைகள் மத்தியில் கடந்து போகவும், சகோதர சகோதரிகளுக்குத் தேவைகளை வழங்கவும், இதன் மூலம் நீங்கள் உங்கள் சொந்தக் குறைபாடுகளை ஈடுகட்ட ஒருவர் இன்னொருவரின் பெலனைப் பெற்றுக்கொள்ளவும், மேலும் உங்கள் ஆவிகளில் வளமான அறிவைப் பெறவும் முடியும். இந்த விளைவை அடைந்த பின்னரே உங்களால் தேவசித்தத்திற்கு இணங்க ஊழியம் செய்யவும், உங்கள் ஊழியத்தின் பாதையில் தேவனால் பூரணமாக்கப்படவும் இயலும்.

தேவனுக்கு ஊழியஞ்செய்பவர்கள் அவருக்கு நெருங்கியவர்களாக இருக்க வேண்டும், அவர்கள் தேவனுக்குப் பிரியமானவர்களாகவும், தேவனுக்கு மிகுந்த உண்மை உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். நீங்கள் தனிமையில் செயல்பட்டாலும் அல்லது வெளிப்படையாக செயல்பட்டாலும், நீங்கள் தேவனுக்கு முன்பாக தேவனுடைய சந்தோஷத்தைப் பெற முடியும், தேவனுக்கு முன்பாக உறுதியுடன் நிற்க முடியும், மற்ற ஜனங்கள் உன்னை எப்படி நடத்துகிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், எப்போதும் நீ நடக்க வேண்டிய பாதையில் நடந்து, தேவனுடைய பாரத்தைக் கருத்தில் கொள். இப்படிப்பட்டவர்கள் மட்டுமே தேவனுக்கு நெருங்கியவர்கள் ஆவர். அந்த தேவனுக்கு நெருங்கியவர்களால், அவருக்கு நேரடியாகச் சேவை செய்ய முடிகிறது, ஏனென்றால் அவர்களுக்கு தேவனின் பெரிதான கட்டளையும் தேவனுடைய பாரமும் கொடுக்கப்பட்டுள்ளன, அவர்களால் தேவனுடைய இருதயத்தைத் தங்களுடையதாகவும், தேவனுடைய பாரத்தைத் தங்களுடைய சொந்த பாரமாகவும் எடுத்துக்கொள்ள முடியும், மேலும் அவர்கள் தங்களின் எதிர்கால ஆதாயங்களுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுப்பதில்லை: அவர்களுக்கு எந்த ஆதாயமும் இல்லையென்றாலும், எதையும் பெறுவதற்கு அவர்கள் நிற்கவில்லை என்றாலும், அவர்கள் அன்பான இதயத்தோடு தேவனை எப்பொழுதும் விசுவாசிப்பார்கள். எனவே, இவ்வகையான நபர் தேவனுக்கு நெருக்கமானவர். தேவனுக்கு நெருக்கமானவர்கள் அவருக்கு நம்பிக்கைக்குரியவர்களும் கூட; தேவனுடைய நம்பிக்கைக்குரியவர்கள் மட்டுமே அவருடைய கவலைகளையும், அவருடைய எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ள முடியும், அவர்களின் மாம்சம் வேதனை மிகுந்ததாகவும், பலவீனமாகவும் இருப்பினும் அவர்களால் வேதனையைத் தாங்கவும், தேவனைத் திருப்திப்படுத்த தாங்கள் நேசிக்கிறதை விட்டுவிடவும் முடியும். தேவன் இத்தகைய ஜனங்களுக்கு அதிக பாரங்களைக் கொடுக்கிறார். மேலும் இத்தகைய ஜனங்களின் சாட்சி தேவன் செய்ய விரும்புகிறவைகளைத் தாங்கியிருக்கும். இவ்வாறு இந்த ஜனங்கள் தேவனுக்குப் பிரியமானவர்கள், இவர்கள் தேவனுடைய இருதயத்திற்கு ஏற்ற தேவ ஊழியர்கள், மேலும் இப்படிப்பட்ட ஜனங்கள் மாத்திரமே தேவனோடுகூட ஆளுகை செய்ய முடியும். நீ உண்மையிலேயே தேவனுக்கு நெருங்கியவராகும்போதுதான் நீ சரியாக தேவனோடு கூட ஆளுகை செய்வாய்.

இயேசுவால் தேவனுடைய கட்டளையான முழு மனுக்குலத்தின் மீட்பின் வேலையை நிறைவேற்ற முடிந்தது. ஏனென்றால் அவர் தனக்காக எந்தத் திட்டங்களையும் ஏற்பாடுகளையும் செய்யாமல் ஒவ்வொரு காரியத்தையும் தேவனுடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார். அதனால் உங்களுக்கு எல்லாம் நன்றாகப் புரிந்துள்ளபடி தேவனான அவரே தேவனுக்கு நெருக்கமானவராக இருந்தார். (உண்மையில், அவரே தேவன், தேவனால் தேவன் என்று சாட்சி பகிரப்பட்டவர். விஷயத்தினை விளக்க இயேசு பற்றிய உண்மையை இங்கு கூறுகிறேன்.) அவரால் எப்போதும் தேவனுடைய நிர்வாகத் திட்டத்தை மையப்படுத்த முடிந்தது, மேலும் அவர் எப்போதும் பரலோகப் பிதாவினிடத்தில் ஜெபித்தார், பரலோகப் பிதாவினுடைய சித்தத்தை நாடினார். அவர்: “பிதாவாகிய தேவனே! உம்முடைய சித்தத்தை நிறைவேற்றும், என்னுடைய சித்தத்தின்படி அல்ல, உம்முடைய திட்டத்தின்படி செயல்படும். மனிதன் பலவீனமாக இருக்கலாம், ஆனால் நீர் ஏன் அவனுக்காகக் கரிசனப்படுகிறீர்? எறும்பைப்போல் உம்முடைய கரத்தில் இருக்கும் மனிதன் உம்முடைய அக்கறைக்கு எப்படி பாத்திரவானாக முடியும்? உம்முடைய சித்தத்தை நிறைவேற்றவும், உம்முடைய விருப்பத்தின்படி என்னில் நீர் எதைச் செய்ய விரும்புகிறீரோ அதைச் செய்யும்படிக்கு நான் இருக்கிறேன்” என்று ஜெபித்தார். இயேசு எருசலேமுக்கு போகும் வழியில் மிகுந்த வேதனையில் இருந்தார், அவருடைய இருதயத்தில் ஒரு கத்தி திருகுவது போன்ற வேதனை இருந்தாலும், தன் வார்த்தையைத் திரும்பப் பெறுவதற்கான ஒரு சிறிய எண்ணம் கூட அவரிடத்தில் இல்லை; எப்பொழுதும் ஆற்றல் மிக்க ஒரு வல்லமை, அவர் சிலுவையில் அறையப்பட வேண்டிய இடத்திற்கு முன்னேற அவரை வலியுறுத்திக் கொண்டே இருந்தது. இறுதியாக, அவர் சிலுவையில் அறையப்பட்டு, பாவ மாம்சத்தின் சாயலாகி, மனுக்குலத்தை மீட்கும் வேலையை செய்து முடித்தார். பாதாளம் மற்றும் மரணத்தின் கட்டுக்களை உடைத்தார். அவருக்கு முன்பாக மரணம், நரகம் மற்றும் பாதாளம் ஆகியவைகள் தங்களின் வல்லமையை இழந்து, அவரால் முறியடிக்கப்பட்டன. அவர் வாழ்ந்த முப்பத்து மூன்று வருடங்களிலும், தேவனுடைய கிரியையின்படி அவருடைய சித்தத்தை நிறைவேற்ற தன்னால் இயன்றதைச் செய்து, அவருடைய தனிப்பட்ட ஆதாயத்தையோ இழப்பையோ ஒருபோதும் கருத்தில் கொள்ளாமல், எப்போதும் பிதாவாகிய தேவனுடைய சித்தத்தையே எண்ணிக்கொண்டிருந்தார். இவ்வாறு, அவர் ஞானஸ்நானம் பெற்ற பின்பு, “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்.” என்று தேவன் சொன்னார். தேவனுக்கு முன்பாக இருந்த அவருடைய ஊழியம் தேவனுடைய சித்தத்திற்கு இணங்க இருந்ததால், முழு மனுக்குலத்தை மீட்கும் பெரிய பாரத்தை தேவன் அவர் தோள்களின்மேல் வைத்து, அவர் அதை நிறைவேற்றச் செய்தார். மேலும் இந்த முக்கியமான வேலையைச் செய்து முடிக்கத் தகுதியாகி உரிமையும் பெற்றார். தன் வாழ்நாள் முழுவதும் அளவிடமுடியாத வேதனையை தேவனுக்காக தாங்கினார், எண்ணற்ற முறை சாத்தானால் சோதிக்கப்பட்டார், ஆனால் ஒருபோதும் அவர் சோர்வடையவில்லை. தேவன் அவரை நம்பியதால், அவரை நேசித்ததால், அவருக்கு இவ்வளவு பெரிய வேலையைக் கொடுத்தார். இதனால் “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்.” என்று தேவன் தாமே சொன்னார். அந்நேரத்தில் இயேசுவால் மட்டுமே இந்தக் கட்டளையை நிறைவேற்ற முடிந்தது, கிருபையின் காலத்தில் மனுக்குலம் முழுவதையும் மீட்கும்படியான தேவனுடைய கிரியையை அவர் செய்து முடித்ததின் ஒரு நடைமுறை அம்சம் இது.

இயேசுவைப் போல், தேவனுடைய பாரத்தை உங்களால் மிகுதியாய்க் கருத்தில் கொள்ள முடிந்தால், உங்கள் மாம்சத்திற்கு முதுகைக் காண்பிப்பீர்கள் என்றால், தேவன் அவருடைய முக்கிய வேலைகளை உங்களிடத்தில் ஒப்படைப்பார்; இதனால் தேவனுக்கு ஊழியம் செய்வதற்குத் தேவையான நிபந்தனைகளை நீங்கள் பூர்த்தி செய்வீர்கள். இத்தகைய சூழ்நிலைகளில் மட்டுமே நீங்கள் தேவனுடைய சித்தத்தைச் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றும் அவருடைய கட்டளையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்றும் உங்களால் துணிந்து சொல்ல முடியும். அப்போதுதான் தேவனுக்கு நீங்கள் உண்மையாக ஊழியம் செய்கிறீர்கள் என்றும் உங்களால் துணிந்து சொல்ல முடியும். இயேசுவின் உதாரணத்துடன் ஒப்பிடும்போது, நீ தேவனுக்கு நெருக்கமான நபர் என்று சொல்லத் துணிகிறாயா? நீ தேவனுடைய சித்தத்தைச் செய்து கொண்டிருக்கிறாய் என்று சொல்லத் துணிகிறாயா? நீ உண்மையாக தேவனுக்கு ஊழியம் செய்வதாகச் சொல்லத் துணிகிறாயா? இன்று, தேவனுக்கு ஊழியம் செய்வது எப்படி என்று புரிந்து கொள்ளாமல், நீ தேவனுக்கு நெருக்கமான நபர் என்று சொல்லத் துணிகிறாயா? நீ தேவனுக்கு ஊழியம் செய்வதாகச் சொன்னால், நீ தேவனுக்கு விரோதமாய் தூஷணம் சொல்கிறாய் அல்லவா? இதைக்குறித்து யோசிக்கவும்: நீ தேவனுக்கு ஊழியம் செய்கிறாயா அல்லது உனக்கே ஊழியம் செய்கிறாயா? நீ சாத்தானைச் சேவிக்கிறாய், ஆனாலும் நீ தேவனுக்கு ஊழியம் செய்வதாகப் பிடிவாதமாய்க் கூறுகிறாய்—இதில் நீ தேவனுக்கு விரோதமாக தூஷணம் சொல்லவில்லையா? என் முதுகுக்குப் பின்னால் உள்ள பல ஜனங்கள் பதவியின் ஆதாயங்களை இச்சித்து, பெருந்தீனி உண்டு, தூக்கத்தை விரும்பி, மாம்சத்திற்கு எல்லா வகையான கவனிப்பும் செய்து, மாம்சத்திற்கு வேறு வழியில்லை என்பது குறித்தே எப்போதும் கவலைப்படுகிறார்கள். அவர்கள் தேவாலயங்களில் தங்களுக்குரிய சரியான கடமைகளைச் செய்யாமல் திருச்சபையை வருமானத்திற்காக மட்டும் சார்ந்துகொண்டு அல்லது அவர்களின் சகோதர சகோதரிகளை என்னுடைய வார்த்தைகளைக்கொண்டு கடிந்து கொண்டு, தங்கள் அதிகார பதவிகளிலிருந்து கொண்டு மற்றவர்களின்மேல் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இந்த ஜனங்கள் தாங்கள் தேவனுடைய சித்தத்தைச் செய்து கொண்டிருப்பதாகத் தொடர்ந்து சொல்லிக்கொண்டு, தாங்கள் தேவனுக்கு நெருக்கமானவர்கள் என்று எப்போதும் சொல்கிறார்கள். இது அபத்தமில்லையா? உனக்குச் சரியான நோக்கங்கள் இருந்தும், தேவனுடைய சித்தத்திற்கு இணங்க ஊழியம் செய்ய முடியவில்லை என்றால், நீ மதிகேடனாயிருக்கிறாய்; ஆனால் உன்னுடைய நோக்கங்கள் சரியானதாக இல்லாமலிருந்தும், நீ தேவனுக்கு ஊழியம் செய்கிறாய் என்று சொல்வாயானால், நீ தேவனை எதிர்க்கிற ஒரு நபராய், தேவனால் தண்டிக்கப்பட வேண்டிய நபராய் இருக்கிறாய்! அத்தகைய ஜனங்களுக்காக நான் பரிதாபப்படுவதில்லை! அவர்கள் தேவனுடைய வீட்டை வருமானத்திற்காக மட்டும் சார்ந்துகொண்டு, மாம்சத்திற்கான வசதிகளை இச்சித்துக்கொண்டு, தேவனுடைய விருப்பங்களைக் கருத்தில் கொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் தங்களுக்கான நலன்களையே நாடி, தேவனுடைய சித்தத்திற்குச் செவிசாய்ப்பதில்லை. அவர்கள் செய்யும் எந்தக் காரியத்திலும் தேவ ஆவியினுடைய கண்காணிப்பை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள் எப்போதும் சூழ்ச்சி செய்து தங்கள் சகோதர சகோதரிகளை வஞ்சித்து, இருமுகங்கள் உடையவர்களாய், திராட்சைத்தோட்டத்தில் உள்ள நரியைப் போல எப்போதும் திராட்சைப்பழங்களைத் திருடி, திராட்சைத்தோட்டத்தை மிதிக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் தேவனுக்கு நெருக்கமானவர்களாக இருக்க முடியுமா? நீ தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள உகந்த நபரா? உன் வாழ்க்கைக்காக, தேவாலயத்துக்காக எந்த ஒரு பாரத்தையும் நீ எடுத்துக் கொள்வதில்லை, நீ தேவனுடைய கட்டளையைப் பெற்றுக்கொள்ளத் தகுதியான நபரா? உன்னைப் போன்ற ஒருவரை யார் நம்பத் துணிவார்கள்? நீ இப்படி ஊழியம் செய்தால், தேவன் உன்னை நம்பிப் பெரிதான வேலையை ஒப்படைப்பாரா? இது கிரியைக்கு தாமதங்களை ஏற்படுத்துமல்லவா?

தேவனுடைய சித்தத்திற்கு இணங்க ஊழியம் செய்வதற்கு என்ன நிபந்தனைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வதற்காக இதை நான் சொல்லுகிறேன். நீங்கள் உங்கள் இருதயத்தை தேவனுக்குக் கொடாவிட்டால், இயேசுவைப் போல எல்லாவற்றையும் தேவனுடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுக்காமல் போனால், நீங்கள் தேவனுடைய நம்பிக்கையைப் பெற முடியாமல், அவரால் நியாயந்தீர்க்கப்படும் நிலை உண்டாகும். ஒருவேளை இன்று, நீங்கள் தேவனுக்குச் செய்யும் ஊழியத்தில், அவரை வஞ்சிக்கும் நோக்கத்தை எப்போதும் கொண்டிருந்து, எப்போதும் அக்கறையற்ற விதத்தில் அவரிடம் காரியங்களைக் கையாளலாம். சுருக்கமாக, வேறு எதுவாக இருப்பினும், நீ தேவனை ஏமாற்றினால், இரக்கமற்ற நியாயத்தீர்ப்பு உன்மேல் வரும். நீங்கள் தேவனுக்கு ஊழியம் செய்யும் சரியான பாதையில் நுழைந்திருப்பதைப் பயன்படுத்தி, முதலில் உங்கள் இருதயத்தைப் பிளவுபடா விசுவாசத்துடன் தேவனுக்குக் கொடுங்கள். நீ தேவனுக்கு முன்பாக இருந்தாலும் அல்லது மற்ற ஜனங்களுக்கு முன்பாக இருந்தாலும், உன்னுடைய இருதயம் எப்பொழுதும் தேவனை நோக்கித் திரும்பியிருக்க வேண்டும், இயேசு தேவனை நேசித்ததைப் போலவே எப்பொழுதும் தேவனை நேசிப்பதில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும். இவ்விதமாய் தேவன் உன்னைப் பரிபூரணமாக்குவார், இதனால் தேவனுடைய இருதயத்திற்கு ஏற்ற ஊழியனாவாய். நீ உண்மையாகவே தேவனால் பூரணப்படுத்தப்பட விரும்பினால், உன்னுடைய ஊழியம் தேவனுடைய சித்தத்திற்கு இசைந்திருக்க வேண்டுமானால், தேவனின் மீதான விசுவாசத்தைக் குறித்த உன்னுடைய முந்தைய கருத்துக்களை மாற்றி, தேவனுக்கு ஊழியம் செய்ய நீ பயன்படுத்தின பழைய வழிகளை மாற்ற வேண்டும். இதனால் உன்னுடைய எல்லாமும் தேவனால் பரிபூரணப்படுத்தப்படும். இவ்விதமாய் தேவன் உன்னைக் கைவிடமாட்டார், மேலும் பேதுருவைப் போல, நீ தேவனை நேசிக்கிறவர்களில் முன்னணியில் இருப்பாய். நீ மனந்திரும்பாமல் இருந்தால், யூதாஸின் அதே முடிவைச் சந்திப்பாய். தேவனை விசுவாசிக்கும் அனைவரும் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

முந்தைய: துன்மார்க்கன் நிச்சயமாகத் தண்டிக்கப்படுவான்

அடுத்த: தேவன் மனிதனைப் பயன்படுத்துவது பற்றி

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக