தேவனுடைய தோன்றுதலை அவருடைய நியாயத்தீர்ப்பிலும் சிட்சையிலும் காணுதல்

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றும் கோடிக்கணக்கான மற்றவர்களைப் போலவே, நாமும் வேதாகமத்தின் நியாயப்பிரமாணங்களையும் கற்பனைகளையும் கடைப்பிடிக்கிறோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அளவில்லாத கிருபையை அனுபவிக்கிறோம், ஒன்றுகூடுகிறோம், ஜெபிக்கிறோம், துதிக்கிறோம், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஊழியம் செய்கிறோம். நாம் இவை அனைத்தையும் நமது கர்த்தருடைய பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் கீழ் செய்கிறோம். நாம் பெரும்பாலும் பலவீனமுள்ளவர்களாக இருக்கிறோம், மேலும் நாம் பெரும்பாலும் பலமுள்ளவர்களாகவும் இருக்கிறோம். நமது செயல்கள் அனைத்தும் கர்த்தருடைய போதனைகளுக்கு ஏற்பவே உள்ளன என்று நாம் நம்புகிறோம். வெளிப்படையாகச் சொல்வதானால், பரமபிதாவின் சித்தத்தைச் செய்வதற்கான பாதையில் நாம் இருக்கிறோம் என்றும் கூட நாம் நம்புகிறோம். கர்த்தராகிய இயேசு மறுபடியும் வருவதற்காகவும், அவருடைய மகிமையுள்ள வருகைக்காகவும், பூமியில் நமது வாழ்வின் முடிவிற்காகவும், ராஜ்யம் தோன்றுவதற்காகவும், வெளிப்படுத்துதல் புத்தகத்தில் முன்னறிவிக்கப்பட்ட அனைத்திற்காகவும் நாம் ஏங்கித் தவிக்கிறோம்: கர்த்தர் வருகிறார், அவர் பேரழிவைக் கொண்டுவருகிறார், நல்லவர்களுக்கு வெகுமதிகளைக் கொடுக்கிறார், துன்மார்க்கரைத் தண்டிக்கிறார், மேலும் அவரைப் பின்பற்றி, ஆகாயத்தில் அவரைச் சந்திக்க அவர் மறுபடியும் வருவதை வரவேற்கும் அனைவரையும் அவர் எடுத்துக்கொள்கிறார். நாம் இது குறித்து சிந்திக்கும்போதெல்லாம், நாம் கடைசி நாட்களில் பிறந்துள்ளோம், கர்த்தருடைய வருகையைக் காணும் நல்ல பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம் என்ற உணர்ச்சியையும் மகிழ்ச்சியையும் நம்மால் கட்டுப்படுத்த முடிவதில்லை. நாம் பாடுகளை அனுபவித்திருந்தாலும், “மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது” என்பதை நாம் கைம்மாறாகப் பெற்றிருக்கிறோம். என்ன ஓர் ஆசீர்வாதம்! இந்த வாஞ்சையும், கர்த்தர் அளித்த கிருபையும் நம்மை இடைவிடாமல் ஜெபத்தில் மூழ்கியிருக்கச் செய்கின்றன மற்றும் ஒன்றாக கூடிவருதலில் நம்மை ஊக்கம் தளராதவர்களாக்குகின்றன. ஒருவேளை அடுத்த வருடத்தில், ஒருவேளை நாளைக்கு, மனிதன் சிந்திப்பதைப் பார்க்கிலும் குறைவான நேரத்திற்குள், கர்த்தர் திடீரென இறங்கி வந்து, மிகுந்த வாஞ்சையுடன் காத்திருக்கும் ஒருகூட்ட ஜனங்களுக்கு மத்தியில் தோன்றுவார். அனைவருமே கர்த்தர் தோன்றுவதைக் காண்பதற்காக முதல் குழுவில் இருப்பதற்காகவும், எடுத்துக்கொள்ளப்படுபவர்களில் ஒருவராக இருப்பதற்காகவும் நாம் ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு செல்ல அவசரப்படுகிறோம், யாரும் பின்வாங்க விரும்பவில்லை. இந்த நாளின் வருகைக்காக, செலவைப் பொருட்படுத்தாமல் நாம் சகலத்தையும் கொடுக்கிறோம்; சிலர் தங்கள் வேலைகளை விட்டுவிடுகின்றனர், சிலர் தங்கள் குடும்பத்தைக் கைவிடுகின்றனர், சிலர் திருமணத்தைக் கைவிடுகின்றனர், சிலர் தங்கள் சேமிப்பு முழுவதையும் நன்கொடையாகக் கொடுக்கின்றனர். என்ன ஒரு தன்னலமற்ற பக்திக்குரிய செயல்கள்! இதுபோன்ற உண்மையும் விசுவாசமும் நிச்சயமாகக் கடந்த காலப் பரிசுத்தவான்களுக்கு அப்பாற்பட்டவையாகும்! கர்த்தர் தாம் பிரியப்படுகிறவர்கள் மீது கிருபையைப் பொழிவதனாலும், தாம் பிரியப்படுகிறவர்கள் மீது இரக்கம் காட்டுகிறதனாலும், நமது பக்திச் செயல்கள் மற்றும் செய்யும் செலவு ஆகியவற்றை அவருடைய கண்கள் நீண்ட காலமாகக் கண்டுவருகின்றன என்று நாம் நம்புகிறோம். ஆகையால், நமது இதயப்பூர்வமான ஜெபங்களும் அவருடைய செவிகளுக்கு எட்டியுள்ளன, மேலும் நமது அர்ப்பணிப்புக்கு தேவன் கைம்மாறு செய்வார் என்று நாம் நம்புகிறோம். மேலும், தேவன் உலகை சிருஷ்டிப்பதற்கு முன்பே நம்மீது கிருபையுள்ளவராக இருந்திருக்கிறார், அவர் நமக்குத் தந்தருளிய ஆசீர்வாதங்களையும் வாக்குத்தத்தங்களையும் யாராலும் தட்டிப் பறித்துக்கொள்ள இயலாது. நாம் எல்லோரும் எதிர்காலத்திற்காகத் திட்டமிடுகிறோம், பொதுவாக ஆகாயத்தில் கர்த்தரைச் சந்திப்பதற்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு ஈடாக நமது அர்ப்பணிப்பையும் செலவினங்களையும் கவுண்டர் சிப்கள் அல்லது மூலதனமாக உருவாக்கியுள்ளோம். மேலும் என்னவென்றால், எல்லா நாடுகளையும், எல்லா ஜனங்களையும் ஆளுகை செய்வதற்காகவோ அல்லது ராஜாக்களாக ஆட்சி செய்வதற்காகவோ நாம் சிறிதும் தயக்கமின்றி எதிர்கால சிங்காசனத்தில் நம்மை அமர்த்தி வைத்துள்ளோம். நாம் இவை அனைத்தையும் எதிர்பார்க்க வேண்டிய ஒன்றாக கருதாமல் கொடுக்கப்பட்டதாக எடுத்துக்கொள்கிறோம்.

கர்த்தராகிய இயேசுவுக்கு விரோதமாக உள்ள அனைவரையும் நாம் வெறுக்கிறோம்; அவர்கள் அனைவரின் முடிவும் முழு அழிவாக இருக்கும். கர்த்தராகிய இயேசுவை இரட்சகர் என்று விசுவாசிக்கக் கூடாது என்று அவர்களிடம் சொன்னது யார்? நிச்சயமாகவே, நாம் உலக ஜனங்களின் மீது இரக்கமுள்ளவர்களாக இருப்பதில் கர்த்தராகிய இயேசுவை முன்மாதிரியாகப் பின்பற்றும் காலங்களும் உள்ளன, ஏனென்றால் அவர்கள் அதை புரிந்துகொள்ளவில்லை. நாம் சகிப்புத்தன்மையுள்ளவர்களாகவும், அவர்களை மன்னிப்பவர்களாகவும் இருப்பது சரியானதாக இருக்கிறது. நாம் செய்யும் சகல காரியங்களும் வேதாகமத்தின் வார்த்தைகளுக்கு ஒத்த வண்ணமே உள்ளன, ஏனென்றால் வேதாகமத்திற்கு ஒத்துப்போகாத அனைத்தும் மதக் கோட்பாடுகளுக்கும் மத நம்பிக்கைகளுக்கும் புறம்பானவையாகும். இவ்வகையான நம்பிக்கை நம் ஒவ்வொருவரின் மனதிலும் ஆழமாக வேரூன்றியுள்ளது. நம்முடைய கர்த்தர் வேதாகமத்தில் இருக்கிறார், நாம் வேதாகமத்திலிருந்து வழிவிலகவில்லை என்றால், நாம் கர்த்தரிடமிருந்தும் வழிவிலக மாட்டோம்; நாம் இந்தக் கொள்கையைக் கடைபிடித்தால், நாம் இரட்சிப்பை அடைவோம். நாம் ஒருவரையொருவர் செயலாற்றத் தூண்டுகிறோம், ஒவ்வொருவரும் அடுத்தவருக்கு ஆதரவளிக்கிறோம், ஒவ்வொரு முறையும் நாம் கூடிவரும்போது, நாம் சொல்லும் மற்றும் செய்யும் அனைத்தும் கர்த்தருடைய சித்தத்தின் படியே உள்ளது என்றும், கர்த்தரால் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் நம்புகிறோம். நமது சூழலின் கடுமையான விரோதத்தின் மத்தியிலும், நமது இருதயங்கள் மகிழ்ச்சியால் நிறைந்துள்ளன. இதுபோன்ற எளிதில் அடையக்கூடியதாக இருக்கும் ஆசீர்வாதங்கள் குறித்து நாம் சிந்திக்கும்போது, நம்மால் ஒதுக்கி வைக்க முடியாத ஏதாவது உண்டா? நாம் விட்டுச்செல்வதற்குத் தயங்குகிற ஏதாவது உண்டா? இவை அனைத்தும் சொல்லிக்கொள்ளாமலே சென்றுவிடுகின்றன, இவை அனைத்தும் தேவனுடைய விழிப்புள்ள கண்களின் கீழ் உள்ளன. குப்பையிலிருந்து உயர்த்தப்பட்டுள்ள சிறு கூட்டமான எளியவர்களாகிய நாம் கர்த்தராகிய இயேசுவின் சாதாரண விசுவாசிகளைப் போலவே இருக்கிறோம், எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமென்றும், ஆசீர்வாதமாக இருக்க வேண்டுமென்றும், சகல தேசங்களையும் ஆளுகை செய்ய வேண்டுமென்றும் கனவு காண்கிறோம். நமது சீர்கேடு தேவனுடைய பார்வையில் வெளியரங்கமாக வைக்கப்பட்டுள்ளது, நமது ஆசைகளும் பேராசைகளும் தேவனுடைய பார்வையில் கடிந்துகொள்ளப்பட்டுள்ளன. ஆனாலும், இவை அனைத்தும் மிகவும் சாதாரணமாகவும், மிகவும் தர்க்கரீதியாகவும் நிகழ்கின்றன, நமது வாஞ்சைகள் சரியானவையா என்று நம்மில் யாரும் சந்தேகப்படுவதில்லை, நாம் பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கும் சகல காரியங்களின் சரித்தன்மையையும் நம்மில் யாரும் சந்தேகப்படுவதில்லை. தேவனுடைய சித்தத்தை யாரால் அறிந்துகொள்ள முடியும்? மனிதன் சரியாக என்ன விதமான பாதையில் நடக்கிறான் என்பதை அறிந்துகொள்ளவோ அல்லது ஆராய்ந்து பார்க்கவோ நமக்குத் தெரிவதில்லை; நாம் அதை ஆராய்ந்து பார்ப்பதில் ஆர்வமில்லாமலும் இருக்கிறோம். ஏனென்றால், நாம் எடுத்துக்கொள்ளப்பட முடியுமா, நாம் ஆசீர்வதிக்கப்பட முடியுமா, பரலோகராஜ்யத்தில் நமக்கு ஓர் இடம் இருக்கிறதா, மற்றும் ஜீவ நதியின் தண்ணீரிலும், ஜீவவிருட்சத்தின் கனியிலும் நமக்கு ஒரு பங்கு கிடைக்குமா என்பதில் மட்டுமே அக்கறை காட்டுகிறோம். இந்தக் காரியங்களைப் பெறுவதற்காகவே நாம் கர்த்தரை விசுவாசித்து, அவரைப் பின்பற்றுகிறவர்களாகிறோம் இல்லையா? நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டுள்ளன, நாம் மனந்திரும்பியுள்ளோம், கசப்பான திராட்சரசத்தைப் பானம் பண்ணியிருக்கிறோம், நாம் சிலுவையை நமது முதுகில் சுமத்தியிருக்கிறோம். நாம் செலுத்திய விலைக்கிரயத்தைக் கர்த்தர் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று யார் சொல்ல முடியும்? நாம் போதுமான எண்ணெயை ஆயத்தம் செய்து வைத்திருக்கவில்லை என்று யார் சொல்ல முடியும்? அந்தப் புத்தியில்லாத கன்னிகைகளாகவோ அல்லது கைவிடப்பட்டவர்களில் ஒருவராகவோ நாம் இருக்க விரும்புவதில்லை. மேலும், கள்ளக்கிறிஸ்துக்களினால் வஞ்சிக்கப்படாமல் கர்த்தர் நம்மைப் பாதுகாத்தருளுமாறு நாம் இடைவிடாது ஜெபம் செய்கிறோம், ஏனென்றால் இது வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளது: “அப்பொழுது, இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள். ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்” (மத்தேயு 24:23-24). நாம் அனைவரும் வேதாகமத்தின் இந்த வசனங்களை மனப்பாடம் செய்து வைத்திருக்கிறோம்; நமக்கு அவை மனப்பாடமாகவே தெரியும், நாம் அவற்றை விலையேறப்பெற்ற பொக்கிஷமாகவும், ஜீவனாகவும், நாம் இரட்சிக்கப்படுவோமா அல்லது எடுத்துக்கொள்ளப்படுவோமா என்பதைத் தீர்மானிக்கும் கடன் பத்திரமாகவும் பார்க்கிறோம்…

ஆயிரக்கணக்கான வருடங்களாக, ஜீவித்தவர்கள் மரித்துப்போனார்கள், அவர்களுடைய வாஞ்சைகளையும் கனவுகளையும் அவர்களுடன் எடுத்துச் சென்றார்கள், ஆனால் அவர்கள் பரலோகராஜ்யத்திற்குத்தான் சென்றிருக்கிறார்களா என்பது உண்மையிலேயே யாருக்கும் தெரியாது. மரித்தவர்கள் திரும்பி வருகிறார்கள், ஒரு காலத்தில் நடந்த எல்லாக் கதைகளையும் மறந்துபோயிருக்கிறார்கள், அவர்கள் இன்னும் முன்னோர்களின் போதனைகளையும் பாதைகளையும் பின்பற்றுகிறார்கள். இவ்விதமாக, வருடங்கள் செல்லச் செல்ல, நாட்கள் செல்லச் செல்ல, நமது தேவனாகிய நமது கர்த்தர் இயேசு நாம் செய்யும் சகல காரியங்களையும் உண்மையாக ஏற்றுக்கொள்கிறாரா என்பதை நாம் யாரும் அறியோம். நாம் செய்யவேண்டியது என்னவென்றால், ஒரு முடிவை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும், மேலும் கடந்து செல்லும் எல்லாவற்றையும் பற்றி ஊகிக்க வேண்டும். ஆனாலும், தேவன் முற்றிலும் மெளனமாக இருக்கிறார், ஒருக்காலும் அவர் நம்மிடம் தோன்றுவதில்லை, ஒருக்காலும் நம்மிடம் பேசுவதில்லை. ஆகையால், வேதாகமத்தைப் பின்பற்றி, அடையாளங்களின்படி, தேவனுடைய சித்தத்தையும் மனநிலையையும் குறித்து வேண்டுமென்றே நியாயத்தீர்ப்புகளைச் செய்கிறோம். தேவனுடைய மெளனத்திற்கு நாம் பழக்கமாகியிருக்கிறோம்; நமது சுய சிந்தனை முறை மூலம் நமது நடத்தையின் சரி மற்றும் தவறுகளை மதிப்பிடுவதற்கு நாம் பழகியிருக்கிறோம்; தேவன் நம்மிடம் கோருகின்ற கோரிக்கைகளுக்குப் பதிலாக நமது அறிவு, கருத்துக்கள் மற்றும் நீதி நெறிமுறைகளை நம்புவதற்கு நாம் பழகியிருக்கிறோம்; தேவனுடைய கிருபையை அனுபவிக்க நாம் பழகியிருக்கிறோம்; நமக்கு உதவி தேவைப்படும்போதெல்லாம் தேவன் உதவி வழங்குவார் என்று பழகியிருக்கிறோம்; எல்லாவற்றிற்கும் தேவனிடம் நமது கைகளை நீட்டவும், அதை வழங்குமாறு தேவனிடம் கட்டளையிடவும் நாம் பழகியிருக்கிறோம்; பரிசுத்த ஆவியானவர் நம்மை எவ்வாறு வழிநடத்துகிறார் என்பதில் கவனம் செலுத்தாமல், விதிமுறைகளுக்கு இணங்க நாம் பழகியிருக்கிறோம்; மேலும், இன்னும் அதிகமாக, நமக்கு நாமே எஜமானராக இருக்கும் நாட்களுக்குப் பழகியிருக்கிறோம். நாம் ஒருபோதும் முக முகமாகச் சந்தித்திராத இதுபோன்றதொரு தேவனை நாம் நம்புகிறோம். அவருடைய மனநிலை எப்படி இருக்கிறது, அவரிடம் என்ன உள்ளது, அவர் யார், அவருடைய உருவம் எப்படி இருக்கிறது, அவர் வரும்போது நாம் அவரை அறிந்துகொள்வோமா இல்லையா போன்ற கேள்விகள் எதுவுமே முக்கியமானதல்ல. முக்கியமானது என்னவென்றால், அவர் நமது இருதயத்தில் இருக்கிறாரா, நாம் அனைவரும் அவருக்காகக் காத்திருக்கிறோமா என்பதேயாகும், மேலும் அவர் இப்படி இருக்கிறார் அல்லது அப்படி இருக்கிறார் என்பதை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது என்பதே போதுமானதாகும். நமது விசுவாசத்தை நாம் பாராட்டுகிறோம், நமது ஆவிக்குரியத்தன்மையைப் பொக்கிஷமாகக் கருதுகிறோம். நாம் எல்லாவற்றையும் குப்பையாகப் பாவித்து, எல்லாவற்றையும் காலுக்கு அடியில் போட்டு மிதிக்கிறோம். ஏனென்றால், நாம் மகிமையான கர்த்தரின் விசுவாசிகளாக இருக்கிறோம், பயணம் எவ்வளவு நீண்டதாகவும் கடினமானதாகவும் இருந்தாலும், நமக்கு என்ன கஷ்டங்களும் ஆபத்துகளும் நேரிட்டாலும், நாம் கர்த்தரைப் பின்பற்றும்போது நமது காலடிகளை எதுவும் தடுக்க முடியாது. “பளிங்கைப்போல் தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிறது. நதியின் இருகரையிலும், பன்னிரண்டு விதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள். இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும். அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும். அங்கே இராக்காலமிராது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை; தேவனாகிய கர்த்தரே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள்” (வெளிப்படுத்தல் 22:1-5). நாம் இந்த வார்த்தைகளைப் பாடுகிற ஒவ்வொரு முறையும், நமது இருதயங்கள் எல்லையற்ற மகிழ்ச்சியினாலும் திருப்தியினாலும் நிரம்பி வழிகின்றன, நமது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடுகிறது. நம்மைத் தெரிந்தெடுத்ததற்காகக் கர்த்தருக்கு நன்றி, கர்த்தருடைய கிருபைக்காக அவருக்கு நன்றி. அவர் இந்த வாழ்க்கையில் நமக்கு நூறு மடங்கு கொடுத்திருக்கிறார், மேலும் வரப்போகிற உலகில் நித்திய ஜீவனைக் கொடுத்திருக்கிறார். அவர் நம்மை இப்போது மரிக்கும்படி கேட்டுக்கொண்டாலும், நாம் சிறிதளவும் குறைகூறாமல் அப்படியே செய்வோம். கர்த்தாவே! சீக்கிரமாக வாரும்! நாங்கள் உமக்காக மிகவும் ஆவலுடன் ஏங்கித் தவிக்கிறோம், உமக்காக எல்லாவற்றையும் கைவிட்டுவிட்டோம் என்பதை நினைத்தருளி, ஒரு நிமிடமோ, ஒரு நொடிப்பொழுதோ, நீண்ட நேரமோ தாமதம் செய்யாதிரும்.

தேவன் மெளனமாக இருக்கிறார், நம்மிடம் ஒருபோதும் தோன்றியதில்லை, ஆனாலும் அவருடைய கிரியை ஒருபோதும் ஓய்ந்துவிடவில்லை. அவர் பூமி முழுவதையும் கண்ணோக்கிப் பார்த்து, சகலத்தையும் கட்டளையிடுகிறார், மனுஷனுடைய எல்லா வார்த்தைகளையும் செயல்களையும் பார்க்கிறார். அவர் தனது மேலாண்மையை அளவிடப்பட்ட படிகளுடனும், அவருடைய திட்டத்தின்படியும், மெளனமாகவும், அளப்பரிய பாதிப்பின்றி நடத்துகிறார், அவருடைய அடிச்சுவடுகள் ஒவ்வொன்றாக முன்னேறி, மனுக்குலத்துடன் எப்பொழுதும் நெருக்கமாக இருக்கின்றன. மேலும் அவரது நியாயத்தீர்ப்பின் சிங்காசனம் மின்னல் வேகத்தில் பிரபஞ்சத்திற்கு அனுப்பப்படுகிறது, அதைத் தொடர்ந்து அவருடைய சிங்காசனம் நம் மத்தியில் உடனடியாக இறங்குகிறது. என்ன ஒரு மாட்சிமையான காட்சி, என்ன ஓர் ஆரவாரமான மற்றும் ஆர்ப்பரிப்பான காட்சி! ஒரு புறாவைப் போலவும், கர்ஜிக்கிற சிங்கத்தைப் போலவும், ஆவியானவர் நமது மத்தியில் வருகிறார். அவர் ஞானமாயிருக்கிறார், அவர் நீதியாகவும் மாட்சிமையாகவும் இருக்கிறார், அவர் நமது மத்தியில் இரகசியமாக வருகிறார், அதிகாரம் செலுத்துகிறார், அன்பும் கிருபையும் நிறைந்தவராக இருக்கிறார். அவருடைய வருகையை ஒருவரும் அறியார், அவருடைய வருகையை ஒருவரும் வரவேற்கவில்லை, மேலும் என்னவென்றால், அவர் செய்யவிருக்கும் அனைத்தையும் ஒருவரும் அறியார். மனிதனின் வாழ்க்கை முன்பைப் போலவே செல்கிறது, அவனுடைய இருதயத்தில் மாறுபாடில்லை, நாட்கள் வழக்கம் போல் செல்கின்றன. பிற மனுஷர்களுக்கு மத்தியில் ஒரு மனுஷன் வாசம்பண்ணுவது போலவும், எளிய விசுவாசிகளில் ஒருவரைப் போலவும், ஒரு சாதாரண விசுவாசியைப் போலவும் தேவன் நமக்கு மத்தியில் வாசம்பண்ணுகிறார். அவர் தமது சொந்த நோக்கங்களையும், தமது சொந்த குறிக்கோள்களையும் கொண்டிருக்கிறார்; மேலும் என்னவென்றால், சாதாரண மனிதர்கள் பெற்றிருக்காத தெய்வீகத்தன்மையைக் கொண்டிருக்கிறார். அவருடைய தெய்வீகத்தன்மை இருப்பதை யாரும் கண்டதில்லை, அவருடைய சாராம்சத்திற்கும் மனிதனுடைய சாராம்சத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை ஒருவரும் புரிந்துகொண்டதில்லை. நாம் அவருடன் சேர்ந்து கட்டுப்படுத்தப்படாமலும் பயப்படாமலும் ஜீவிக்கிறோம், ஏனென்றால் நமது பார்வையில் அவர் ஓர் அற்பமான விசுவாசியாகவே இருக்கிறார். நம்முடைய ஒவ்வொரு அசைவையும் அவர் உற்றுநோக்கிப் பார்க்கிறார், நம்முடைய எண்ணங்கள் மற்றும் யோசனைகள் அனைத்தும் அவருக்கு முன்பாக வெளியரங்கமாக வைக்கப்பட்டுள்ளன. அவருடைய இருப்பின் மீது ஒருவரும் ஆர்வம் காட்டவில்லை, அவருடைய செயல்பாடு குறித்து ஒருவரும் கற்பனை செய்து பார்க்கவில்லை, மேலும் என்னவென்றால், அவருடைய அடையாளம் குறித்து யாருக்கும் லேசான சந்தேகமும் இல்லை. அவருக்கும் நமக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது போல, நமது நோக்கங்களை மட்டுமே நிறைவேற்றுகிறோம்…

ஒருவேளை, பரிசுத்த ஆவியானவர் அவர் “மூலமாக” ஒரு பத்தி வார்த்தைகளை வெளிப்படுத்துகிறார் என்றால், அது மிகவும் எதிர்பாராததாக உணர்ந்தாலும், நாம் அதை தேவனிடமிருந்து வரும் ஒரு வார்த்தையாக உணர்ந்து, உடனடியாக அதை தேவனிடமிருந்து ஏற்றுக்கொள்கிறோம். ஏனென்றால், இந்த வார்த்தைகளை யார் வெளிப்படுத்துகிறார் என்பதைப் பொருட்படுத்தாமல், அவை பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வருவதனால், நாம் அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும், அவற்றை மறுக்கக்கூடாது. அடுத்த வார்த்தை என் மூலமாகவோ அல்லது உன் மூலமாகவோ அல்லது வேறு ஒருவர் மூலமாகவோ வரலாம். அது யாராக இருந்தாலும், எல்லாம் தேவனுடைய கிருபையாகும். ஆனாலும், அது யாராக இருந்தாலும், நாம் இந்த நபரை தொழுதுகொள்ள இயலாது, என்னவாக இருந்தாலும், இந்த நபர் தேவனாக இருக்க இயலாது, இதுபோன்ற எந்தவொரு சாதாரண மனிதனையும் எக்காரணம் கொண்டும் நமது தேவனாக தேர்ந்தெடுக்க மாட்டோம். நமது தேவன் மிகவும் பெரியவர், கனத்திற்குரியவர்; இதுபோன்றதொரு அற்ப நபர் எப்படி அவருடைய இடத்தில் நிற்க முடியும்? மேலும் என்னவென்றால், தேவன் வந்து நம்மை மீண்டும் பரலோகராஜ்யத்திற்கு அழைத்துச் செல்வதற்காக நாம் காத்திருக்கிறோம், ஆகையால் மிகவும் அற்பமான ஒருவர் இதுபோன்றதொரு முக்கியமான மற்றும் கடினமான பணியை எவ்வாறு செய்ய இயலும்? கர்த்தர் மறுபடியும் வந்தால், எல்லா ஜனங்களும் பார்க்கும் வண்ணமாக அவர் வெண் மேகத்தின் மீது இருக்க வேண்டும். அது எவ்வளவு மகிமையுள்ளதாக இருக்கும்! சாதாரண ஜனங்கள் மத்தியில் அவர் தம்மை இரகசியமாக ஒளித்துக்கொள்வது எப்படிச் சாத்தியமாகும்?

ஆனாலும், இந்தச் சாதாரண மனிதர்தான் ஜனங்கள் மத்தியில் மறைந்திருந்து, நம்மை இரட்சிக்கும் புதிய கிரியையை நடப்பிக்கிறார். அவர் நமக்கு எந்த விளக்கங்களையும் தருவதில்லை, அவர் ஏன் வந்தார் என்றும் அவர் நம்மிடம் சொல்வதில்லை, ஆனால் அவருடைய திட்டத்தின் படி அளவிடப்பட்ட படிகளைக் கொண்டு தாம் செய்ய விரும்பும் கிரியையைச் செய்கிறார். அவருடைய வார்த்தைகளும் சொற்களும் அடிக்கடி வெளிப்படுகின்றன. ஆறுதல் செய்தல், அறிவுரை வழங்குதல், நினைவூட்டுதல் மற்றும் எச்சரித்தல் முதல் கண்டித்தல் மற்றும் சிட்சித்தல் வரை; மென்மையான மற்றும் கனிவான ஒரு தொனி முதல் மிகவும் கடுமையான மற்றும் கம்பீரமான வார்த்தைகள் வரை என இவை அனைத்தும் மனிதன் மீது இரக்கத்தைப் பொழிகின்றன, அவனுக்குள் நடுக்கத்தை உண்டாக்குகின்றன. அவர் கூறும் அனைத்தும் நமக்குள் மறைந்திருக்கும் இரகசியங்களை வெளிப்படுத்துகின்றன; அவருடைய வார்த்தைகள் நமது இருதயங்களைக் குத்துகின்றன, நம்முடைய ஆவிகளைக் குத்துகின்றன, நம்மைத் தாங்கமுடியாத அவமானத்தால் நிரப்புகின்றன, நம்மை எங்கே மறைத்துக்கொள்வது என்று தெரிவதில்லை. இந்த மனிதரின் இருதயத்திலுள்ள தேவன் மெய்யாகவே நம்மில் அன்புகூர்கிறாரா மற்றும் அவர் சரியாக என்ன செய்கிறார் என்று நாம் யோசிக்க ஆரம்பிக்கிறோம். ஒருவேளை நாம் இந்தப் பாடுகளைச் சகித்த பிறகே பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட முடியுமா? வரப்போகும் முடிவைப் பற்றியும் எதிர்காலத் தலைவிதியைப் பற்றியும் நமது மனதில் கணக்குப்போட்டுக் கொண்டிருக்கிறோம். ஆயினும், முன்பு போலவே, நமது மத்தியில் கிரியையைச் செய்வதற்கு தேவன் ஏற்கெனவே மாம்ச ரூபமெடுத்தார் என்று நம்மில் யாரும் நம்புவதில்லை. அவர் இவ்வளவு நீண்ட காலமாக நம்முடனே இருந்தபோதிலும், அவர் ஏற்கெனவே நம்முடன் பல வார்த்தைகளை முகமுகமாகப் பேசியிருந்தபோதிலும், இதுபோன்றதொரு சாதாரண மனிதனை நமது எதிர்காலத்தின் தேவனாக ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இல்லை, இன்னும் சொல்லப்போனால் நமது எதிர்காலம் மற்றும் நமது தலைவிதியின் கட்டுப்பாட்டை இந்த அற்பமான நபரிடம் ஒப்படைக்கவும் நாம் தயாராக இல்லை. நாம் அவரிடமிருந்து ஜீவ தண்ணீரை அளவில்லாமல் பெற்று அனுபவிக்கிறோம், அவர் மூலமாக நாம் தேவனை முகமுகமாகப் பார்த்து ஜீவிக்கிறோம். ஆனால், நாம் பரலோகத்திலுள்ள கர்த்தராகிய இயேசுவின் கிருபைக்கு மாத்திரமே நன்றி செலுத்துகிறவர்களாக இருக்கிறோம், மேலும் தெய்வீகத்தன்மையைத் தன்னகத்தே கொண்டிருக்கும் இந்தச் சாதாரண மனிதனின் உணர்வுகளுக்கு நாம் ஒருபொழுதும் செவிசாய்த்ததில்லை. ஆயினும், முன்பு போலவே, மனுக்குலம் தன்னைப் புறக்கணிப்பதை அறியாதவர் போலவும், மனுஷனின் குழந்தைத்தனத்தையும் அறியாமையையும் நித்தியமாக மன்னிப்பதைப் போலவும், தம் மீது மனிதனுக்கு உண்டான பயபக்தியற்ற மனப்பான்மையை சதாகாலங்களிலும் சகித்துக்கொள்வது போலவும் அவர் மாம்சத்தில் மறைந்திருந்து தமது கிரியையை மனத்தாழ்மையுடன் நடப்பித்து தமது உள்ளார்ந்த இருதயத்தை வெளிப்படுத்துகிறார்.

நமக்குத் தெரியாமலே, இந்த அற்பமான மனிதர் தேவனுடைய கிரியைக்கு நம்மை படிப்படியாக வழிநடத்திச் சென்றிருக்கிறார். நாம் எண்ணற்ற உபத்திரவங்களுக்கு ஆளாகிறோம், எண்ணற்ற ஆக்கினைத்தீர்ப்புகளைச் சுமக்கிறோம், மரணத்தால் சோதிக்கப்படுகிறோம். நாம் தேவனுடைய நீதியான மற்றும் மாட்சிமையான மனநிலையைப் பற்றி அறிந்துகொள்கிறோம். அவருடைய அன்பையும் இரக்கத்தையும் அனுபவிக்கிறோம். தேவனுடைய மாபெரும் வல்லமையையும் ஞானத்தையும் பாராட்டுகிறோம். தேவனுடைய அழகைக் காண்கிறோம், மேலும் மனிதனை இரட்சிப்பதற்கான தேவனுடைய ஆவல்மிக்க வாஞ்சையையும் காண்கிறோம். இந்த சாதாரண மனிதனின் வார்த்தைகளில், தேவனுடைய மனநிலையையும் இயல்பையும் அறிந்துகொள்கிறோம், தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்கிறோம், மனிதனுடைய சுபாவத்தையும் சாராம்சத்தையும் அறிந்துகொள்கிறோம், இரட்சிப்புக்கும் பரிபூரணமாவதற்குமான வழியைக் கண்டடைகிறோம். அவருடைய வார்த்தைகள் நம்மை “மரிக்கச்” செய்கின்றன, மேலும் அவை நம்மை “மறுபடியும் பிறக்கச்” செய்கின்றன. அவருடைய வார்த்தைகள் நமக்கு ஆறுதலளிக்கின்றன, ஆனாலும் அவை நம்மை குற்ற உணர்ச்சியினாலும், கடன்பட்ட உணர்வினாலும் நம்மை நொறுங்கிப்போகச் செய்கின்றன. அவருடைய வார்த்தைகள் நமக்கு அக்களிப்பையும் சமாதானத்தையும் தந்தருளுகின்றன, ஆனால் முடிவில்லா வேதனையையும் தருகின்றன. சில நேரங்களில் நாம் அவருடைய கரங்களில் அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்படுகிற ஆட்டுக்குட்டிகளாக இருக்கிறோம். சில நேரங்களில் நாம் அவருடைய கண்ணின் மணியைப் போன்றவர்களாக இருக்கிறோம், மேலும் அவருடைய இதமான அன்பை அனுபவிக்கிறோம். சில நேரங்களில் நாம் அவருடைய எதிரியைப் போல இருக்கிறோம், மேலும் அவருடைய பார்வையின் கீழ் அவருடைய கோபாக்கினையினால் சாம்பலாகிவிடுகிறோம். நாம் அவரால் இரட்சிக்கப்பட்ட மனித இனம், நாம் அவருடைய கண்களில் புழுக்களைப் போல இருக்கிறோம். நாம் காணாமற்போன ஆட்டுக்குட்டிகளாக இருக்கிறோம். இரவும் பகலும், அவர் நம்மை இடைவிடாமல் தேடுகிறார். அவர் நம்மீது இரக்கமுள்ளவராகவே இருக்கிறார், அவர் நம்மை வெறுக்கிறார், அவர் நம்மை உயர்த்துகிறார், அவர் நமக்கு ஆறுதலளிக்கிறார், நமக்குப் புத்திசொல்கிறார், அவர் நமக்கு வழிகாட்டுகிறார், அவர் நமக்கு அறிவூட்டுகிறார், அவர் நம்மை சிட்சிக்கிறார், சீர்படுத்துகிறார், அவர் நம்மைச் சபிக்கவும் செய்கிறார். இரவும் பகலும், அவர் நம்மைப் பற்றி கவலைப்படுவதிலிருந்து ஒருபொழுதும் ஓய்வதில்லை, மேலும் இரவும் பகலும் அவர் நம்மைப் பாதுகாக்கிறார், நம்மை விசாரிக்கிறவராக இருக்கிறார், அவர் ஒருபொழுதும் நம்மைக் கைவிடுவதில்லை, ஆனால் நமக்காக அவருடைய இருதயத்தின் இரத்தத்தைச் சிந்துகிறார், மேலும் நமக்காக எந்தவொரு விலைக்கிரயத்தையும் கொடுக்கிறார். இச்சிறிய மற்றும் சாதாரண மாம்ச உடலின் வார்த்தைகளுக்குள், நாம் தேவனை முழுமையாக அனுபவித்திருக்கிறோம் மற்றும் தேவன் நம்மீது சுமத்திய தலைவிதியைக் காண்கிறோம். இவ்வாறு இருப்பினும், வீணானது இன்னும் நமது இருதயங்களுக்குள் குழப்பத்தை கிளறிவிடுகிறது, மேலும் இதுபோன்ற ஒருவரை நமது தேவனாக தீவிரமாக ஏற்றுக்கொள்ள நாம் இன்னும் மனதில்லாதவர்களாகவே இருக்கிறோம். நாம் மிகவும் அதிகமாக அனுபவிப்பதற்காக அவர் நமக்கு மிகவும் அதிகமான மன்னாவைத் தந்தருளியபோதிலும், இது எதுவுமே நமது இருதயத்தில் கர்த்தருக்கு இடமளிக்க இயலவில்லை. இந்த மனிதருடைய விசேஷித்த அடையாளத்தையும் நிலையையும் மிகவும் தயக்கத்துடன் மாத்திரமே கனப்படுத்துகிறோம். அவர் தேவன் என்பதை ஒப்புக்கொள்ளுமாறு அவர் நம்மிடம் கேட்டுக்கொள்ள வாய் திறக்காத வரை, நாம் அவரை சீக்கிரமே வரப்போகிற தேவனாகவும், நீண்ட காலமாகவே நமது மத்தியில் கிரியையை நடப்பித்துக் கொண்டிருக்கிறார் என்பதையும் ஒப்புக்கொள்வதற்கு நாம் ஒருபொழுதும் முன்வர மாட்டோம்.

தேவன் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அறிவுறுத்துவதற்கு பல்வேறு வழிமுறைகளையும் அணுகுமுறைகளையும் பயன்படுத்தியும், அதே நேரத்தில் அவருடைய இருதயத்தில் பேசியும் தமது வார்த்தைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறார். அவருடைய வார்த்தைகள் ஜீவ வல்லமையைத் தாங்கியுள்ளன, நாம் நடக்க வேண்டிய வழியைக் காட்டுகின்றன, சத்தியம் என்ன என்பதைப் புரிந்துகொள்ள நமக்கு உதவுகின்றன. அவருடைய வார்த்தைகளால் நாம் கவர்ந்துகொள்ளப்பட ஆரம்பிக்கிறோம், அவர் பேசும் தொனியிலும் விதத்திலும் நாம் கவனம் செலுத்த ஆரம்பிக்கிறோம், மேலும் நம்மை அறியாமலேயே இந்தச் சாதாரண மனிதனுடைய ஆழ்மன உணர்வுகளில் ஆர்வம் காட்ட ஆரம்பிக்கிறோம். அவர் நமது சார்பாகக் கிரியையைச் செய்வதற்காக அவருடைய இருதயத்தின் இரத்தத்தைச் சிந்துகிறார், நம் நிமித்தமாக அவர் தூக்கத்தையும் பசியையும் தொலைக்கிறார், நமக்காக அழுகிறார், நமக்காகப் பெருமூச்சு விடுகிறார், நமக்காக நோயினால் அவதிப்படுகிறார், நமது முடிவுக்காகவும் இரட்சிப்பிற்காகவும் அவமானத்தை அனுபவிக்கிறார். நமது உணர்ச்சியற்ற நிலையும் கலகக் குணமும் அவருடைய இருதயத்திலிருந்து கண்ணீரையும் இரத்தத்தையும் வரவழைக்கிறது. இவ்வாறு இருப்பதும் எந்தவொரு சாதாரண மனுஷனுக்கும் சொந்தமானவராக இல்லாதிருப்பதும், எந்தவொரு கேடான மனுஷனாலும் பெற்றிருக்கவோ அல்லது அடையவோ இயலாததாக இருக்கிறது. எந்தவொரு சாதாரண மனுஷனிடமும் இல்லாத சகிப்புத்தன்மையையும் பொறுமையையும் அவர் காட்டுகிறார், மேலும் அவருடைய அன்பானது எந்தவொரு சிருஷ்டியிடத்திலும் காணப்படாத ஒன்றாகும். அவரைத் தவிர வேறு யாராலும் நமது எண்ணங்கள் அனைத்தையும் அறிந்துகொள்ளவோ அல்லது நமது சுபாவத்தையும் சாராம்சத்தையும் தெளிவாகவும் மற்றும் முழுமையாகவும் புரிந்துகொள்ளவோ அல்லது மனுக்குலத்தின் கலகக் குணத்தையும் சீர்கேட்டையும் நியாயந்தீர்க்கவோ அல்லது நம்மிடம் பேசவோ, பரலோக தேவனின் சார்பாக இதுபோல நமது மத்தியில் கிரியை செய்யவோ முடியாது. அவரைத் தவிர வேறு யாரிடமும் தேவனுடைய அதிகாரமும், ஞானமும் மற்றும் மேன்மையும் கிடையாது; தேவனுடைய மனநிலையும் மற்றும் தேவனிடம் இருப்பதும், தேவன் யார் என்பதும் அவருக்குள் அவர்களுடைய பரிபூரணத்தில் உண்டாகின்றன. அவரைத் தவிர வேறு யாரும் நமக்கு வழியைக் காட்டவும் வெளிச்சத்தைக் கொண்டுவரவும் இயலாது. அவரைத் தவிர வேறு யாராலும் சிருஷ்டிப்பின் நாள் முதல் இன்று வரை தேவன் வெளிப்படுத்தாத மறைபொருட்களை வெளிப்படுத்த இயலாது. அவரைத் தவிர வேறு யாராலும் சாத்தானின் அடிமைத்தனத்திலிருந்தும், நம்முடைய சொந்த, கேடான மனநிலையிலிருந்தும் நம்மை இரட்சிக்க இயலாது. அவர் தேவனை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவர் தேவனுடைய மிகவும் ஆழமான இருதயத்தையும், தேவனுடைய அறிவுரைகளையும், சகல மனுஷர்கள் மீதான தேவனுடைய நியாயத்தீர்ப்பு வார்த்தைகளையும் வெளிப்படுத்துகிறார். அவர் ஒரு புதிய யுகத்தையும், ஒரு புதிய சகாப்தத்தையும் ஆரம்பித்துள்ளார், மேலும் ஒரு புதிய வானத்தையும் பூமியையும் புதிய கிரியையையும் ஆரம்பித்துள்ளார். மேலும், அவர் நாம் தெளிவில்லாமல் வாழ்ந்த வாழ்வை முடிவுக்குக் கொண்டுவந்ததன் மூலமாகவும், நமது முழு சரீரமும் இரட்சிப்பின் பாதையை முற்றிலும் தெளிவாகக் காண்பதற்கு உதவியதன் மூலமாகவும் அவர் நமக்கு நம்பிக்கையைக் கொண்டுவந்துள்ளார். அவர் நம்மை முழுமையாக ஆட்கொண்டு நமது இருதயங்களை ஆதாயப்படுத்தியிருக்கிறார். அந்தத் தருணம் முதல், நமது மனங்கள் உணர்வுள்ளதாகிவிட்டன, நமது ஆவிகள் புத்துயிர் பெற்றது போலத் தோன்றுகின்றன: நமது மத்தியில் வாசம்பண்ணும், நீண்ட காலமாக நம்மால் புறக்கணிக்கப்பட்ட இந்தச் சாதாரண, அற்பமான மனிதர் நமது எண்ணங்களிலும் நடையிலும் அல்லது கனவிலும் எப்பொழுதும் வீற்றிருப்பவரும் மற்றும் இரவும் பகலும் நாம் ஏங்கித்தவிக்கக் கூடியவரும் கர்த்தராகிய இயேசுதானல்லவா? அவரேதான் அது! உண்மையில் அவரேதான் அது! அவரே நமது தேவன்! அவரே நமது, சத்தியமும், வழியும், ஜீவனுமாயிருக்கிறார்! நாம் மீண்டும் ஜீவிக்கவும், ஒளியைக் காணவும் நமக்கு உதவியிருக்கிறார், மேலும் நமது இருதயங்கள் அலைந்து திரிவதைத் தடுத்தாட்கொண்டுள்ளார். நாம் தேவனுடைய வீட்டிற்குத் திரும்பியுள்ளோம், அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக நாம் திரும்பியுள்ளோம், நாம் அவரை முகமுகமாக பார்க்கிறோம், நாம் அவருடைய முகத்தைக் கண்டிருக்கிறோம், நமக்கு முன்னால் உள்ள பாதையையும் பார்த்திருக்கிறோம். இந்த நேரத்தில், நம்முடைய இருதயங்கள் அவரால் முற்றிலுமாக ஆட்கொள்ளப்படுகின்றன; அவர் யார் என்று நாம் இனிமேலும் சந்தேகப்படுவதில்லை, அவருடைய கிரியையையும் அவருடைய வார்த்தையையும் இனிமேலும் எதிர்ப்பதில்லை, மேலும் அவருக்கு முன்பாக சாஷ்டாங்கமாக விழுந்துகிடக்கிறோம். நமது வாழ்நாள் முழுவதும் தேவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதையும், அவரால் பரிபூரணமாக்கப்படுவதையும், அவருடைய கிருபையைத் திருப்பிச் செலுத்துவதையும், அவர் நம்மீது வைத்திருக்கும் அன்பைத் திருப்பிச் செலுத்துவதையும், அவருடைய திட்டங்களுக்கும் ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படிவதையும், அவருடைய கிரியைக்கு ஒத்துழைக்கவும், அவர் நம்மிடம் ஒப்படைத்ததைச் செய்து முடிக்க நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வதையும் தவிர நாம் வேறு எதையும் செய்யப் பிரயாசப்படுவதில்லை.

தேவனால் ஜெயங்கொள்ளப்படுதல் என்பது தற்காப்புக் கலை போட்டி போன்றதாகும்.

தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் உயிருக்கு ஆபத்தான இடங்களில் ஓங்கி அடித்து, நம்மைக் காயப்படுத்தி, பயத்தினால் நிறைந்திருக்கச் செய்கிறது. அவர் நமது கருத்துகளையும், நமது கற்பனைகளையும், நமது கேடான மனநிலையையும் அம்பலப்படுத்துகிறார். நாம் சொல்லும் மற்றும் செய்யும் எல்லா காரியங்கள் முதற்கொண்டு, நம்முடைய எல்லா எண்ணங்கள் மற்றும் யோசனைகள் வரை, நம்முடைய சுபாவமும் சாராம்சமும் அவருடைய வார்த்தைகளில் வெளிப்பட்டு, நம்மை அச்ச நிலையில் ஆழ்த்தி, நமது அவமானத்தை மறைக்க இடமில்லாமல் நடுங்குகிறோம். நம்முடைய செயல்கள், நம்முடைய குறிக்கோள்கள், நோக்கங்கள் மற்றும் நாம் ஒருபொழுதும் கண்டுபிடிக்காத கேடான மனநிலை எல்லாவற்றையும் பற்றி அவர் ஒவ்வொன்றாக நம்மிடம் சொல்கிறார், நம்முடைய மோசமான குறைபாடு அனைத்தையும் அம்பலப்படுத்தியதாக உணரச் செய்து, நம்மை இன்னும் முழுமையாக ஆட்கொள்கிறார். நாம் அவரை எதிர்த்ததற்காக அவர் நம்மை நியாயந்தீர்க்கிறார், அவரை நிந்தித்ததற்காகவும், பழித்துரைத்ததற்காகவும் நம்மைத் தண்டிக்கிறார். அவருடைய பார்வையில், நாம் மீட்டுக்கொள்ளப்படும் ஓர் அம்சமாக இல்லாமல், நாம் வாழும் சாத்தானாக இருக்கிறோம் என்பதை நம்மை உணரச் செய்கிறார். நமது நம்பிக்கைகள் பாழாகிப்போய்விட்டன, அவரிடம் எந்தவொரு நியாயமற்ற கோரிக்கைகளை முன்வைக்கவோ அல்லது அவரைப் பற்றிய வடிவமைப்புகள் எதையும் பயன்படுத்தவோ நாம் இனிமேலும் துணிவதில்லை, நம்முடைய கனவுகள் கூட ஒரே இரவில் மாயமாகிவிடுகின்றன. இது நம்மில் யாராலும் கற்பனை செய்துபார்க்க முடியாத மற்றும் நம்மில் யாரும் ஏற்றுக்கொள்ள முடியாத ஓர் உண்மையாகும். ஒரு கணப்பொழுதில், நமது ஆழ்மனதின் சமநிலையை இழக்கிறோம், மேலும் முன்னால் உள்ள பாதையில் எவ்வாறு தொடர்ந்து பயணிக்கலாம் அல்லது நமது நம்பிக்கைகளில் எவ்வாறு தொடர்வது என்று நமக்குத் தெரிவதில்லை. நமது விசுவாசம் சதுக்கம் ஒன்றிற்கு திரும்பிச் சென்றுள்ளது போலவும், நாம் ஒருபொழுதும் கர்த்தராகிய இயேசுவைச் சந்தித்ததில்லை அல்லது அவரைத் தெரிந்துகொண்டதில்லை என்பது போலவும் தோன்றுகிறது. நமது கண்களுக்கு முன்னால் உள்ள அனைத்தும் நம்மைக் குழப்பத்தில் ஆழத்துகின்றன, மேலும் நம்மை உறுதியில்லாமல் அலைக்கழிக்கின்றன. நாம் திகைத்து நிற்கிறோம், நாம் விரக்தி அடைகிறோம், நமது இருதயங்களின் ஆழத்தில் கட்டுப்படுத்த இயலாத கோபமும் அவமானமும் உள்ளன. நாம் வெளியேறவும், வெளியேறுவதற்கான ஒரு வழியைக் கண்டுபிடிக்கவும் முயற்சி செய்கிறோம். மேலும் என்னவென்றால், நம்முடைய இருதயங்களை அவரிடம் ஊற்றுவதற்காக நம்முடைய இரட்சகராகிய இயேசுவுக்காகத் தொடர்ந்து காத்திருக்கிறோம். இறுமாப்போ அல்லது மனத்தாழ்மையோ இல்லாமல், ஒரு சமமான அடித்தளத்தில் இருக்க நாம் வெளிப்புறத்தில் தோன்றும் தருணங்களும் காணப்பட்டாலும், நாம் இதற்கு முன்பு உணராத இழப்பு உணர்வினால் நமது இருதயங்களில் வேதனைப்படுகிறோம். சில நேரங்களில் நாம் வெளிப்புறத்தில் அசாதாரணமாக அமைதியாக இருப்பது போலத் தோன்றினாலும், நமது மனமோ கொந்தளிக்கும் கடல் போல வேதனையுடன் சுழன்று கொண்டிருக்கிறது. அவருடைய நியாயத்தீர்ப்பும் ஆக்கினைத்தீர்ப்பும் நம்முடைய நம்பிக்கைகள் மற்றும் கனவுகள் அனைத்தையும் நம்மிடமிருந்து பறித்துக் கொண்டு, நம்முடைய பகட்டான ஆசைகளுக்கு முடிவுகட்டி, அவர் நம்முடைய இரட்சகர் என்றும், நம்மை இரட்சிக்க வல்லவர் என்றும் நம்புவதற்கு நம்மை விருப்பமற்றவராக்கியுள்ளன. அவருடைய நியாயத்தீர்ப்பும் சிட்சையும் நமக்கும் அவருக்கும் இடையில் யாரும் கடக்க விரும்பாத மிகவும் ஆழமான ஒரு பெரிய பள்ளத்தை திறந்துவைத்துள்ளன. அவருடைய நியாயத்தீர்ப்பினாலும் சிட்சையினாலும் நமது வாழ்வில் இதுபோன்றதொரு பெரிய பின்னடைவையும், இதுபோன்ற பெரிய அவமானத்தையும் அனுபவிப்பது இதுவே முதல் முறையாகும். அவருடைய நியாயத்தீர்ப்பும் சிட்சையும் தேவனுடைய கனத்தையும் மனுஷனின் குற்றத்தைச் சகித்துக்கொள்ள இயலாதத்தன்மையையும் உண்மையிலேயே பாராட்ட வைத்துள்ளன, இதனுடன் ஒப்பிடும்போது நாம் மிகவும் இழிவானவர்களாகவும், தூய்மையற்றவர்களாகவும் இருக்கிறோம். அவருடைய நியாயத்தீர்ப்பும் சிட்சையும் நாம் எவ்வளவு இறுமாப்புள்ளவர்களாகவும் பகட்டானவர்களாகவும் இருக்கிறோம் என்பதையும், மனுஷன் ஒருபொழுதும் தேவனுக்கு சமமாக மாட்டான் அல்லது தேவனுக்கு இணையாக மாட்டான் என்பதையும் நமக்கு முதன்முறையாக உணர வைத்துள்ளது. அவருடைய நியாயத்தீர்ப்பும் சிட்சையும் இனிமேலும் இதுபோன்றதொரு கேடான மனநிலையில் வாழாமலிருக்கவும், இந்த சுபாவத்தையும் சாராம்சத்தையும் நம்மிலிருந்து முடிந்தவரை சீக்கிரமே விரட்டவும், அவருக்கு இழிவாகவும் வெறுக்கத்தக்கதாகவும் இருப்பதை நிறுத்தவும் நம்மை ஏங்க வைத்துள்ளது. அவருடைய நியாயத்தீர்ப்பும் சிட்சையும் அவருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதிலும், இனிமேலும் அவருடைய திட்டங்களுக்கும் ஏற்பாடுகளுக்கும் விரோதமாகக் கலகம் செய்யாமலிருப்பதிலும் நம்மைச் சந்தோஷப்படுத்தியுள்ளன. அவருடைய நியாயத்தீர்ப்பும் சிட்சையும் மீண்டும் ஒரு முறை உயிர்வாழும் ஆசையை நமக்குக் கொடுத்துள்ளன, மேலும் அவரை நம்முடைய இரட்சகராக ஏற்றுக்கொள்வதில் நமக்குச் சந்தோஷத்தை அளித்துள்ளன…. நாம் ஜெயத்தின் கிரியையிலிருந்து, நரகத்திலிருந்து, மரண இருளின் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறிவிட்டோம்…. சர்வவல்லமையுள்ள தேவன் இந்த ஜனக்கூட்டமாகிய நம்மை ஆதாயப்படுத்தியுள்ளார்! அவர் சாத்தானை ஜெயங்கொண்டிருக்கிறார், அவருடைய திரளான எதிரிகளைத் தோற்கடித்திருக்கிறார்!

நாம் கேடான சாத்தானின் மனநிலையைக் கொண்ட, காலங்களுக்கு முன்பாகவே தேவனால் முன்குறிக்கப்பட்ட மற்றும் குப்பையிலிருந்து தேவன் உயர்த்திய எளிமையான ஒரு சாதாரண ஜனக்கூட்டமாக இருக்கிறோம். நாம் ஒரு காலத்தில் தேவனைப் புறக்கணித்தோம், நிந்தனை செய்தோம், ஆனால் இப்போதோ நாம் அவரால் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறோம். நாம் தேவனிடமிருந்து ஜீவனையும், நித்திய ஜீவனுக்கான வழியையும் பெற்றிருக்கிறோம். நாம் பூமியில் எங்கிருந்தாலும், பாடுகளையும் துன்பங்களையும் நாம் சகித்துக்கொண்டாலும், சர்வவல்லமையுள்ள தேவனின் இரட்சிப்பிலிருந்து நம்மால் விலகியிருக்க இயலாது. ஏனென்றால் அவர் நம்முடைய சிருஷ்டிகராகவும், நம்முடைய ஒரே மீட்பராகவும் இருக்கிறார்!

தேவனுடைய அன்பு ஓர் ஊற்றின் தண்ணீரைப் போலப் பாய்ந்து, உனக்கும், எனக்கும், மற்றவர்களுக்கும், சத்தியத்தை மெய்யாகவே தேடுபவர்களுக்கும், தேவன் தோன்றுவதற்காகக் காத்திருக்கும் அனைவருக்கும் கொடுக்கப்படுகிறது.

சூரியனும் சந்திரனும் உதித்து மறைவதைப் போலவே, தேவனுடைய கிரியையும் ஒருபொழுதும் ஓயாமல், உன் மீதும், என் மீதும், மற்றவர்கள் மீதும், தேவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிற மற்றும் அவருடைய நியாயத்தீர்ப்பையும் ஆக்கினைத்தீர்ப்பையும் ஏற்றுக்கொள்கிற அனைவரின் மீதும் நடப்பிக்கப்படுகிறது.

மார்ச் 23, 2010

முந்தைய: தேவனை அறிவது என்பது தெய்வ பயம் மற்றும் தீமையைத் தவிர்க்கும் பாதை ஆகும்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக